Header Ads



கிழக்கிலங்கை சம்பிரதாய, முஸ்லிம் தலைவர் அதாவுல்லாஹ் - சுமேத வீரவர்தன

சிங்களத்தில்: சுமேத வீரவர்தன, (கண்டி புத்திஜீவிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கச் செயலாளரும் சிரேஷ்ட விரிவுடையாளரும்)

தமிழில்: ஏ.எல். எம். சத்தார்

பெரும்பான்மை சிங்கள மக்களினதும் குறிப்பாக சிங்கள பெளத்தர்கள் மற்றும் தேசிய ஐக்கியத்தை விரும்பும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களது கடும் அர்ப்பணிப்புக்களின் பிரதிபலனாகவே ஐந்து வருட படுமோசமான நல்லாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பெரும்பான்மையான மக்களது உள்ளங்களை வென்றெடுத்த ஜனாதிபதி, அவர் விரும்பியவாறான பலம் பொருந்திய அரசாங்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. தமது கட்சி பெரும் வெற்றியீட்டியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசால் புறக்கணிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள ஒரு கூட்டத்தினரையும் காணக் கூடியதாகவுள்ளது. அத்தகைய தலைவர் மத்தியில் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் குறித்து இச்சிறுகட்டுரை ஆராய்கிறது.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகளின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் பாசறையில் ஆரம்ப அரசியல் பாடம் கற்ற அதாவுல்லா, ஆரம்பத்திலிருந்தே எல்.ரீ.ரீ. ஈ.க்கு எதிராக செயற்பட்ட ஒருவராவார். வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை எதிர்த்த கிழக்கு , வடக்கிலிருந்து தனித்திருக்கவேண்டும் என்று குரல் கொடுத்த தலைவர். முப்பது வருட சாபக்கேடான யுத்த காலத்திலும் ஒன்றுபட்ட நாட்டுக்காக கிழக்கிலங்கை முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்புக்கள், சிங்கள மக்களிடையே மிகவும் அற்பமாகவே பேசப்படுகின்றன.


தமிழ் இனவாதிகளுக்கு  தனியான நாடு வழங்கப்படும் போது மாத்திரமே தமக்கும் தனியானதொரு தேசம் வேண்டும் என்று கிழக்கிலங்கை முஸ்லிம் தலைவர்கள் கேட்டனர். முஸ்லிம்களும் தனி நாட்டு கோரிக்கையை முன்வைப்பதால் தமிழ் இனவாதிகளின் தனி நாட்டுக் கோரிக்கையை நிராகரிப்பதற்கு இந்நாட்டு தலைவர்களுக்கு அதுவொரு துரும்புச்சீட்டாக அமைந்தது. தனது தலைவர் அஷ்ரபின் அடிச்சுவட்டிலே நடக்கும் பிள்ளையாகவே அதாவுல்லா காணப்படுகிறார். தமிழ் இனவாதிகளின் பக்கம் சாய இருந்த முஸ்லிம் வாலிபர்களை அதிலிருந்து விடுவித்து திசை திருப்ப ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றமே பிரதான காரணியாகும். அத்துடன் பயங்கரவாதிகளால் தொடுக்கப்பட்ட தொல்லைகளில் இருந்தும் தம் இனத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும் முஸ்லிம் காங்கிரஸால் முடியுமானது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் சில காலம் பயங்கரவாதிகளின் பிடிக்குள் இருந்தன. ஆனால், அதே காலப் பகுதியில் அங்கு முஸ்லிம்கள் வதியும் பகுதிகள் மாத்திரமே அரச கட்டுப்பாட்டில் இருந்தன.


எம்.எச். எம். அஷ்ரப், முஸ்லிம் காங்கிரஸை விடுத்து தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கினார், அவர் இன ரீதியான அரசியலிலிருந்து தேசிய ரீதியிலான அரசியலுக்கு வழி சமைத்த ஒரு முஸ்லிம் தலைவராவார். அந்த தலைவரின் பாதையில் பயணிக்கும் அதாவுல்லா, அஷ்ரப் காங்கிரஸை நிறுவினார். பின்னர் அதனை தேசிய காங்கிரஸ் என்று மாற்றியமைத்துக் கொண்டார். இரண்டொரு சந்தர்ப்பங்களைத் தவிர, எம்.எச்.எம். அஷ்ரப் ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சியுடனேயே நீண்ட காலம் அரசியல் பயணம் செய்துள்ளார்.


ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் இருக்கும் வரையில் அந்த பஸ்ஸில் தான் பயணிப்பதில்லை என்று அஷ்ரப் தனது இறுதி கால கட்டங்களில் சபதம் எடுத்துள்ளார். ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுத்தீன், அமீர் அலி, ஹஸன் அலி, நிஸாம் காரியப்பர் போன்ற அஷ்ரபின் சிஷ்யர்கள் அஷ்ரபின் மேற்படி சபதத்தை ஓரிரு முறைகள் அல்ல, பல தடவைகள் முறியடித்துள்ளனர். ஆனால் அதாவுல்லாவோ எந்தச் சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியுடனோ அல்லது அது சார்ந்த கூட்டணியுடனோ இணைந்து அரசியல் செய்த வரலாறே இல்லை. அவர் வெற்றியிலும் தோல்வியிலும் தேசிய சக்திகளுடன் இணைந்தே அரசியல் செய்துள்ளார். முப்பது வருட கொடிய யுத்த காலத்திலும் கூட அதாவுல்லா தொடர்ந்தேர்ச்சையாக புலிகளுக்கெதிராகவே செயற்பட்டுள்ளார். 2005 ஆம் ஆண்டிலிருந்தே மஹிந்த ராஜபக் ஷவுடன் இருந்த அவர் 2015 ஆம் ஆண்டின் பின்னரும் கூட மஹிந்த ராஜபக் ஷவைக் கைவிடவில்லை. 2015 ஆகஸ்ட்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் மஹிந்த அணியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் அவர் கோத்தாபய ராஜபக் ஷவையையே ஆதரித்தார்.


அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவே அதாவுல்லா விரும்பினார். ஆனால் திகாமடுல்ல மாவட்டத்தில் பத்து வேட்பாளர்கள் உள்ளடக்க வேண்டிய பெயர்பட்டியலில் அதாவுல்லாவால் பிரேரிக்கப்பட்ட மூவரை உட்படுத்தத் தவறியதன் விளைவாக அவர் குதிரைச் சின்னத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். நாற்பதாயிரம் அளவில் வாக்குளைப் பெற்று ஓர் ஆசனத்தைப் பெற்று சவாலை வெற்றி கொண்டார். இச்சவாலை வென்று பாராளுமன்றம் நுழைகின்றபோதிலும் தம் மக்களுக்காக அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சோ அல்லது குறைந்த பட்சம் இராஜாங்க அமைச்சோ அவருக்கு வழங்கப்படாமை அவரது அபாக்கியம் என்பதை விட அவருடன் இணங்கி வாழும் கிழக்கிலங்கை மக்களது துரதிஷ்டம் என்றே கூறவேண்டும்.


இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள் நிகழும் மாற்றம் இந்நாட்டின் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ள ஒன்றாகும். சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததை நாம் அறிவோம். அவர்கள் அராபிய கலாசாரத்தை மிகவும் நல்லதாகவும் மிகவும் சரியானதாகவும் கருதி செயற்படவில்லை. சுதேச கலாசாரத்துடன் இணங்கிப்போகும் ஒரு பணபாடே அவர்களிடம் நிலவியது. இந்நாட்டு முஸ்லிம்களிடையே சம்பிரதாய முஸ்லிம் மற்றும் தெளஹித் என்ற புதிய நிலைப்பாடொன்றைக் காணமுடிகிறது. கந்தூரி கொடுக்கும், பைத் மற்றும் மெளலூத் ஓதும், ஸியாரங்களை மதிக்கும், முகம்மது நபியின் பிறந்த தினத்தைக் கொண்டாடும், கத்தம் கொடுக்கும் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் முஸ்லிம் பக்திவான்கள் ஒரு கூட்டமும் இவற்றுக்கு எதிராக மற்றொரு முஸ்லிம் கூட்டமும் இருப்பது இந்நாட்டில் பெரும்பாலானோருக்குத் தெரியாது.


பேருவள சிங்கள- முஸ்லிம் மோதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், அங்கு முஸ்லிம் -முஸ்லிம் மோதல் மற்றும் காத்தான்குடி ஸஹ்ரான் குழுவுக்கும் அவர்களுக்கு எதிரான குழுவுக்கு மிடையே ஏற்பட்ட மோதல் என்பன மேற்படி இரு முஸ்லிம் பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் என்பதை எத்தனை பேர் அறிவர்? இந்நாட்டின் சகல பகுதிகளிலும் மேற்படி முஸ்லிம்-முஸ்லிம் மோதல்களைக் காணமுடிகின்றன. இந்த இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் ஸஹ்ரான்கள் உள்ள குழுவையா அல்லது தேசிய நல்லிணக்கத்திற்கு அர்ப்பணிப்புச் செய்யும் சம்பிரதாய முஸ்லிம்களையா எமது அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதிக்கோ அரசாங்கத்திற்கோ சரியான தெளிவொன்று இருப்பதாகத் தெரியவில்லை. அதே போன்று அதிக ஆதரவுள்ளோரையா அல்லது மக்கள் ஆதரவற்றோரையா ஆதரிக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு தெளிவுள்ளதாகத் தெரியவில்லை.


கடந்த ஆட்சியில் அமைச்சுக்கள் உள்ளிட்ட இதர வரப்பிரசாதங்கள் யாவும் ஒரு சாராருக்கே வழங்கப்பட்டன என்பது பரம இரகசியமல்ல. நல்லாட்சி அரசாங்கம் எந்தளவுக்கு  செயற்பட்டதோ என்பதை விட, ஸஹ்ரானுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸில் செய்யப்பட்ட சுமார் 20 முறைப்பாடுகளை விசாரணைக்கு எடுத்து, அவரைக்கைது செய்வதில் இலங்கைப் பொலிஸாரால் முடியாது போயுள்ளது. ஸஹ்ரானுக்கு எதிராக மேற்படி முறைப்பாடுகள் யாவும் சிங்களவர்களால் அல்ல, அதே பிரதேசத்தைச் சேர்ந்த சம்பிரதாய முஸ்லிம்களால்தான் செய்யப்பட்டன என்பதை இந்நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளாதிருப்பது ஏன் என்பது தெரியவில்லை.


இந்நாட்டு சம்பிரதாய முஸ்லிம்கள் இங்குள்ள சமூகத்தின் மத்தியில் பாமர ரகத்தில் உள்ளடக்கப்படலாம். அந்தவகையில் மஹிந்த மற்றும் கோத்தாபய சார்பாக இருந்த பெரும்பாலான முஸ்லிம்கள் பாமரர்களே. ஆனால் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களிடையே பெரும்பான்மையான சம்பிரதாய முஸ்லிம்கள் நுண்ணறிவுள்ளோரே. இவர்களை தேசிய சக்தியோடு இணைத்துக் கொள்வதற்கு இந்நாட்டு அரசியல் சக்திகளால் இயலாது போனமை இந்நாட்டு சகல சமூகங்களுக்கும் துரதிஷ்டமே. சம்பிரதாய முஸ்லிம் தலைவர்களையும் அவர்களது புத்திஜீவிகளையும் அதிகாரத்தில் அமர்த்துவதன் மூலம் சம்பிரதாய முஸ்லிம்களை கவரச் செய்யலாம்.


அஷ்ரபைப் போன்று அதாவுல்லாவும் சூபித்துவத்தால் ஈர்க்கப்பட்ட சம்பிரதாய உள்நாட்டு முஸ்லிம் கலாசாரத்திற்குட்பட்டு வாழும் மக்கள் மனம் கவர்ந்த முஸ்லிம் தலைவரே. ரவூப்ஹக்கீம், ரீஷாத் பதியுதீன் போன்ற  முஸ்லிம் தலைவர்கள் போன்று அதாவுல்லா, சிங்களத்தில் தேசிய நல்லிணக்கம் குறித்தும், தமிழில் சிங்கம் மற்றும் தமிழ் எதிர்ப்பு கருத்துக்களை வெளியிடும் போலித்தலைவரல்லர். அவர் அரபுலகின் முஸ்லிம் அமைப்புக்களிடமிருந்து உதவிகளைப் பெற்று இந்நாட்டு சம்பிரதாய முஸ்லிம் சமூகத்துக்கு வஹாபிஸத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக உழைப்பவருமல்லர். முஸ்லிம் வாக்குகளைப் பேரம் பேசி, இனவாத கோட்பாடுகளைக் கோராதவரும் தனது பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களது விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட தொழில் பிரச்சினைகளுக்கு முன்னின்று முகம் கொடுக்கும் பணிவுள்ள முஸ்லிம் தலைவரே.


மர்ஜான் போன்ற சம்பிரதாய முஸ்லிம்களால் மதிக்கப்படுவோர் தேசிய பட்டியல் ஊடாகவேனும் நியமிக்கப்படுவது, அரசின் தூர நோக்கு என்றே கூற வேண்டும். ஆனாலும் இதில் மாத்திரம் திருப்திப்பட இயலாது. அதாவுல்லா போன்ற வெற்றியிலும் தோல்வியிலும் தேசிய சக்தியைக் கைவிடாதும் , அடிப்படைவாதமற்ற சவால்களை வென்ற வெற்றி கொள்ளக்கூடிய தலைவர்களை உரிய முறையில் உள்வாங்க வேண்டும். இது ஒன்றுபட்ட நாட்டுக்கும் தேசிய ஐக்கியத்தின் நீண்ட கால இருப்புக்கும் உந்து சக்தியாக அமையும். இதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு அரசுக்கு இன்னும் காலம் இல்லாமலில்லை. – Vidivelli


3 comments:

  1. முதலாவது முஸ்லிம் ஜனாஸா எரிப்பைத் தவிர்ப்பதற்காக முஸ்லிம் சமூகம் சார்பாக ஆட்சித் தலைவர் முன் ஈமானிய உணர்வோடு சிங்கம் போன்று கர்ஜித்ததை பொறுக்க முடியாததன் வெளிப்பாடாக இது இருக்கலாம்.  ஆனால், அதுதான் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உணர்வு.  ஒரு நாள் அரசாங்கம் இதை புரிந்து கொள்ளும்.  அவர் ஓர் வெளிப்படையான தலைவர்.

    ReplyDelete
  2. அசாத் சாலியும் இங்கு குறிப்பிடப்படும் சம்பிரதாய முஸ்லீம்தான்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் அதாவுல்லா அவர்களே. நல்லிணக்கம் மற்றும் முஸ்லிம் விவகாரங்கள் தொடர்பான பொறுப்புகளுக்கு உங்களை விதந்துறைக்கும் கட்டுரை. Congratulations

    ReplyDelete

Powered by Blogger.