Header Ads



உலக பயண சுற்றுலா சபையிடமிருந்து, இலங்கைக்கு பாதுகாப்பான பயண முத்திரை


உலக பயண மற்றும் சுற்றுலா சபையிடமிருந்து (World Travel & Tourism Council-WTTC) பாதுகாப்பான பயண முத்திரை (Safe Travels Stamp); சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமர்லி பெனாண்டோ

இலங்கைக்கு, உலக பயண மற்றும் சுற்றுலா சபையிடமிருந்து (World Travel & Tourism Council-WTTC) பாதுகாப்பான பயண முத்திரை (Safe Travels Stamp) வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் (SLTDA) முன்வைக்கப்பட்டுள்ள தர கட்டுப்பாடுகளுடன் இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்திய பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், இப்பயண முத்திரை வழங்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், பயணிக்க விருப்பமான இடமாக, இலங்கை தீவை பார்க்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளிடையே நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில், பாதுகாப்பான பயணங்களின் முத்திரை ஆனது, WTTC இன் பாதுகாப்பான பயண நெறிமுறைகளுடன் உலகளவில் கடைப்பிடிக்கப்படும் சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் சுகாதார நெறிமுறைகளை உரிய வகையில் பின்பற்றும் இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்ங்களை அடையாளப்படுத்த வழிவகுக்கின்றது.

கொவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதில் உலகின் மிக உயர்ந்த வெற்றி விகிதத்தை இலங்கை கொண்டிருப்பதானது, பாதுகாப்பான பயணங்களுக்கான முன்மாதிரியான இடமாக இலங்கையை நிலைநிறுத்தியுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமர்லி பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகச் சிறந்த சுகாதார பிரிவு மற்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்புத் தரங்கள் ஆகியவற்றின் மூலம், சுற்றுலாப்பயணிகளுக்கு தனித்துவமான அனுபவங்களை வழங்கக்கூடிய இடமாக இலங்கை தெரிவாகியுள்ள அதே நேரத்தில், அவர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கிறது.

ஒரு பயணியின் வருகைக்கு அவசியமான அனைத்து அம்சங்களுடனும், சர்வதேச சுற்றுலா பயணிகளை வரவேற்க இலங்கை இப்போது தயாராக உள்ளது என்றும், இதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொவிட் -19 காரணமாக நாடு முடக்கப்பட்ட பின்னர் சர்வதேச பயணிகளுக்கான சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் நடவடிக்கைகளை மீளாரம்பம் செய்வது நாட்டிற்கு ஒரு மூலோபாயமாகும், மேலும் இலங்கை WTTC ஆல் பாதுகாப்பான முத்திரை குத்தப்படுவதற்கு வழிவகுக்கும் செயல்முறையை ஆரம்பித்த சின்னமன் ஹோட்டலுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

WTTC இன் பாதுகாப்பான பயண முத்திரையானது, அதன் முன்னிலை தரச்சான்றாகும். குறிப்பாக கொவிட் -19 உள்ளிட்ட விடயங்கள் சார்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பால் (UNWTO) அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த முத்திரை, பயணிகள் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்து உலகத்தை சுற்றிப் பார்க்க வழி வகுக்கிறது.

பயணத்தன் எதிர்காலமானது, பாதுகாப்பான தடையற்ற மற்றும் நம்பகமான தனமையிலேயே தங்கியுள்ளதோடு, அது பல மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதோடு, நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் உதவியாக இருக்கிறது. அந்த வகையில், WTTC ஆல் வெளியிடப்பட்ட புதிய உலகளாவிய பாதுகாப்பான பயண நெறிமுறைகள் ஆனது, கொவிட்-19 இன் பின்னரான, இத்துறையின் மீள் ஆரம்பத்திற்கும், மீட்டெடுப்பை விரைவுபடுத்துவதற்கும் உதவுகிறது. செயற்பாடு மற்றும் பணியாளர்களை தயார்படுத்தல், பாதுகாப்பான அனுபவத்தை உறுதிப்படுத்துதல், நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை மீண்டும் உருவாக்குதல் மற்றும் கொள்கைகளை செயல்படுத்துதலும் நடைமுறைப்படுத்தலும் ஆகிய நான்கு தூண்கள் கொண்ட நெறிமுறையானது, பயணிகளிடையே நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த நிலையான அணுகுமுறையை மேற்கொள்வதற்கான வழிவகையுமாகும்.

இந்தோனேசியா, துபாய், தன்சானியா, போர்த்துக்கல், மெக்ஸிகன் கரீபியன், பார்சிலோனா, மெட்ரிட், செவில்லே, துருக்கி, பல்கேரியா, ஜமைக்கா, மொரிஷியஸ், ஒன்டாரியோ, சவுதி அரேபியா, ருவண்டா உள்ளிட்ட பாதுகாப்பான முத்திரை கொண்ட முன்னணி இடங்களின் வரிசையில் இலங்கையும் இணைகிறது. அதன் நெறிமுறைகள் உலகளாவிய அமைப்பால் வடிவமைக்கப்பட்டவற்றுடன் ஒத்துப்போவதாக WTTC இனால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் கொவிட் -19 சமூக பரவலுக்கான வாய்ப்புகளை குறைக்க, சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் செயல்பாட்டு வழிகாட்டல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகளுக்கு ஏற்படும் தேவையற்ற சிரமங்கள் தவிர்க்கப்படுகின்றன.

அதிகாரசபையினால் விதிக்கப்பட்டுள்ள, கொவிட்-19 பாதுகாப்புத் தரங்கள் பின்பற்றுவதை WTTC மதிப்பிட்டதைத் தொடர்ந்து, தனியார் துறையில் உள்ள அனைத்து பயண மற்றும் விருந்தோம்பல் தொடர்பான பங்குதாரர்களுக்கு பாதுகாப்பு முத்திரையை வழங்குவதில் சபை தற்போது செயற்பட்டு வருகிறது. இப்பாதுகாப்பு முத்திரையானது, வணிக நிறுவனங்களுக்கு மதிப்பு அதிகரித்தல் மற்றும் கொவிட்-19 இற்கு பிந்திய காலத்தில் இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான ஓர் உத்தரவாதம் என, இரு படிகளுடனான நன்மைகளை கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.