Header Ads



நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன..? மரபுகள் தெரியாதவர்கள் யார்...??

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதம் இடம்பெற்றது. இந்த விவாத்தை எதிர்த்தரப்பே கோருவது வழமை. நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் (Parliamentary Standing Ordinance) பிரகாரம் எதிர்த்தரப்பு விவாதத்தைக் கோரும்போது எதிர்த்தரப்பில் இருந்தே விவாதமும் ஆரம்பிக்கப்படும். ஆனால் ஜனாதிபதியின் உரை மீதான விவாதத்தை அரசதரப்பு உறுப்பினரான நிபுண ரணவக்கவே கோரியிருந்தார். 

இவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் சகோதரியின் மகனாவார். நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்திற்கு மாறாக இம்முறை ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதம் இடம்பெற்றமை பிரதான எதிர்க்கட்சி பலவீனமடைந்திருப்பதை வெளிக்காட்டியது. அதனைக் கண்டுபிடித்து எழுத அங்கு சென்ற செய்தியாளர்களுக்கும் நாடாளுமன்ற மரபுகள் தெரிந்திருக்கவில்லை.

அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் சபாநாயகர் தலைமையில் இடம்பெறும் கட்சித் தலைவர் கூட்டத்தில் விசேட தீர்மானம் எடுக்கப்பட்டுத் தனி நபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அரச தரப்பு இந்த விவாதத்தை நடத்தியுள்ளது. 

கட்சித் தலைவர் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் எவரும் அதற்கு எதிர்ப்பு வெளியிடவில்லை ஆனாலும் இது நாடாளுமன்ற மரபுக்கு மாறானது. இந்த மரபு மீறப்பட்டமை்கான காரணம் இதுவரை தெரியாது. 

--மரபு மீறிய நடைமுறைகள்--

முதலாவது அமர்வில் கொள்கை விளக்கவுரையாற்ற வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சபா மண்டபத்தில் வைத்து சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து வரவேற்க வேண்டும். அது மரபு-- ஆனால் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் வரவேற்கவில்லை. 

கோட்டாபய ராஜபக்சவை வரவேற்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவை சபா மண்டபத்தில் இருந்து சபாநாயகர் வரவேற்றுச் சபைக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் ஜனாதிபதி வருவதற்கு முன்னர் பிரதமர் அவ்வாறு வரவேற்கப்படுவதில்லை. அது மரபும் அல்ல.  

நிகழ்வுக்கு வருகை தந்த கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் சபாநாயகர் கலரியில் இருந்தே ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையை பார்வையிடுவது வழமை. ஆனால் இம் முறை வெளிநாட்டுத் தூதரகப் பிரதிநிதிகள் பொதுமக்கள் பார்வையிடும் சாதாரண கலரியிலேயே அமரவைக்கப்பட்டனர். 

சபாநாயர் கலரியில் கோட்டாபய ராஜபக்சவின் மனைவியும் மற்றும் ராஜபக்சக்களின் குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே அமரவைக்கப்பட்டனர். நாமல் ராஜபக்சவின் மனைவி அங்கு பிரத்தியேகமாகக் காணப்பட்டார். பொதுமக்கள் கலரியில் வெளிநாட்டுத் தூதுதரகப் பிரதிநிதிகள் அமர வைக்கப்படுமளவுக்கு, அவர்களை ராஜபக்ச அரசாங்கம் மதிக்கவில்லை என்றே நாடாளுமன்ற மரபு தெரிந்தவர்கள் கூறுவார்கள்.

கோட்டாபய ராஜபக்ச வரவேற்கப்பட்டு சபை நடுவாக நடுந்து வந்தபோது, தனது சகோதரர் மகிந்த ராஜபக்சவுக்கு மாத்திரமே பிரதமர் என்ற முறையில் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தினார். ஆனால் ஏனைய அரசதரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் எவருக்கும் அவர் இரு கரம்கூப்பி அவர் வணக்கம் செலுத்தவில்லை.

ஆனால் ஜனாதிபதி சபைக்கு உள்ளே வரும்போது எதிர்க்கட்சித் தலைவருக்கும் முன் ஆசனத்தில் இருந்து எழுந்து நிற்கும் முத்த உறுப்பினர்களுக்கும் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்துதல் மரபாகும். இந்த மரபு பின்பற்றப்படவில்லை. உரையை நிகழ்த்திவிட்டுச் செல்லும்போது மகிந்தவுக்கு மீண்டும் வணக்கம் செலுத்தினார். எதிர்த்தரப்பு வரிசையில் முன் ஆசனத்தில் இருந்து எழுந்து நின்ற முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் தலைசாய்த்துக் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தினார் கோட்டாபய. 

அருகே நின்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பின்பக்கமாகக் கையைக் கட்டிக் கொண்டு நெஞ்சை நிமித்தியவாறு நின்றார். இருகரம் கூப்பி ஜனாதிபதிக்கு அவர் வணக்கம் செலுத்தவில்லை. அது கஜேந்திரகுமாருடைய சுயமரியாதையைக் காண்பித்தது. எழுந்து நின்ற  ஏனைய சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதியைக் கவனத்தில் எடுத்ததாகக் கூற முடியாது. 

நிகழ்வு முடிவடைந்தவேளை அமைச்சர் பேராசிரியர் பீாிஸ் விக்னேஸ்வரனுக்கு அருகில் சென்று இருகரம் கூப்பி வணக்கம் செலுத்திய பின்னர் பணிவாக நின்று உரையாடினார். அது முன்னாள் நீதியரசர் என்ற மரியாதையைக் காண்பித்தது. 

இவ்வாறு அங்கு இடம்பெற்ற பல முக்கிய சம்பவங்கள், சந்திப்புகள் செய்திகளாக வெளிவரவேயில்லை. அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் பலருக்கு நாடாளுமன்றச் செய்தி எழுதும் அனுபவம் இல்லை. மரபுகளும், நடைமுறைகளும் தெரியவில்லை.

வெறுமனே கருத்துக் கேட்பது அங்கு நிகழ்த்தப்படும் உரைகளை மாத்திரமே செய்தியாக்குவது நாடாளுமன்றச் செய்தியிடல் அல்ல-- சிறிய சிறிய சம்பவங்களைக் கூட  நன்கு கூர்ந்து அவதானித்துச் செய்திகள் எழுதப்பட வேண்டும். அவ்வாறான செய்தியிடல்தான் லொபி எனப்படுவது. ஆனால் லொபி எழுதுமளக்கு ஒரு சிலரைத் தவிர ஏனைய செய்தியரளர்களுக்கு நாடாளுமன்ற மரபுகள் அறவே தெரியவில்லை. கூர்ந்து அவதானிக்கும் பொறுமையும் இருப்பதாகத் தெரியவில்லை.

---மற்றுமொரு குறிப்பு-----

நாடாளுமன்ற நிகழ்வு முடிவடைந்த பின்னர் உறுப்பினர்களுக்கான விருந்தோம்பல் மண்டபத்தில்  தேநீர் விருந்து இடம்பெறும்-- அப்போது அரசதரப்பு, எதிர்த்தரப்பு என்ற வேறுபாடுகள் இருக்காது- வெளிநாட்டுத் தூதரகப் பிரதிநிதிகள், செய்தியாளர்கள் உட்பட அனைவருமே ஒன்றாகத் தேநீர் அருந்துவர். உரையாடுவர். இதுவும் நாடாளுமன்ற மரபுகளில் ஒன்று-

இச் சந்தர்ப்பத்தில் எடுக்கப்படும் படங்களை வைத்துக் கொண்டு சுமந்திரனோடு அங்கஜன் நிற்கிறார், டக்ளஸ் தேவானந்தாவும் செல்வம் அடைக்கலநாதனும் ஒன்றாக இருக்கின்றனர் என்று கிண்டலடித்துச் செய்தி எழுதுவது ஊடக ஒழுக்கவிதியல்ல-  

விமர்சன நோக்கில் அந்தப் படங்களை வேறு வகையாகச் சித்தரிக்கலாம். ஆனால் ஒன்று சேர்ந்துவிட்டனர்,  மகிழ்ச்சியாக இருக்கின்றனர், இவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகளா என்றெல்லாம் கேள்வி எழுப்பிக் கிண்டலடிப்பது ஊடக நாகரீகம் அல்ல- 

அரசியல் உறவு என்பது பொது இடங்களில் அல்லது முக்கியமான நிகழ்வுகளில் நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் ஒப்பாசாரத்துக்காக கைகொடுத்துக் கதைப்பது மரபு- அதுவும் நாடாளுமன்றத்திற்குள் அந்த நடைமுறை தவிர்க்க முடியாதது. 

ஆனால் குறிப்பிட்ட சில பிரதான ஊடகங்களைத் தவிர, செய்தி இணையத் தளங்கள், சமூக ஊடகங்கள், யூரியுப் தொலைக்காட்சிகள் எல்லாவற்றையுமே குழப்புகின்றன. செய்தி எது. விமர்சனம் எது என்ற வேறுபாடுகளே இல்லை. கையில் கிடைத்த படங்களை வைத்துக் கொண்டும் வாயில் வரும் வசனங்ளையும் எழுதி ஒட்டுமொத்த ஊடக நாகரீகத்துக்கே கேடு விளைவிக்கின்றன. 

ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்களை விமர்சனமாக்குகின்றனர். இது தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால அரசியலுக்கும் ஆபத்தானது. 

பிரதான ஊடகங்கள் தங்களுக்குரிய பொறுப்புக்களில் இருந்து விலகித் தங்களுக்குரிய  செய்தியிடல் முறைகளிலும் விடுகின்ற தவறுகளும் இவ்வாறான நிலைமைகளுக்குக் காரணமாக இருக்கலாம்.

Amirthanayagam Nixon

 

 

4 comments:

  1. பாராளுமன்ற மரபுகள்,நடைமுறைகள் பற்றி வாசகர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்த திரு அமிர்தநாயகம் நிக்ஸனுக்கு எமது ஆழ்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  2. Who is there good media...can point out one single standard reporter... most of them following Indian high volume reporters and some of them following Tsunami reporters.... I am also searching the standard reporters now a days......

    ReplyDelete
  3. Moreover, more YouTube channels, they do news collectively from various medias each other by changing small small words only. Plus they do all these for earning purpose...by howmany views they got...they will be paid.. So they don't care the media standard dear brother....!!!

    ReplyDelete
  4. Correct old traditions in the new 20th amendment please

    ReplyDelete

Powered by Blogger.