Header Ads



கட்டியணைக்க காத்திருந்த கரங்கெல்லாம் கால் பிடித்து கதறிஅழும் கோளமென்ன..??

அப்பாவின் கடன் அடைக்க

அயல்நாடு சென்றாயோ!!

தாயாரின் தாலி மீட்க 

தாயகம் மறந்தாயோ!!

உடன் பிறந்ததோர் நலனுக்கா 

உன் நலன் துறந்தாயோ!!

பிள்ளைக்கு வாங்கி வைத்த 

பொமையெல்லாம் எடுத்தாயோ!!

மனைவி அவள் மார்சாய

புதுத்துணியும் உடுத்தினாயோ!!


வலிக்குமென்று சொன்னாலே 

வாடி விடுவார்கள்!!

துக்கமென்று சொன்னாலே 

துவண்டு விடுவார்கள்!!

சுகமில்லை என்றாலும் நலமென்று 

சொல்லித்தானே நடித்து வந்தாய்!!


உண்ணாமல் உறங்காமல் உழைத்தாயோ!!

ஓய்வென்று அறியாமல் தவித்தாயோ!!


அன்புத் துணைவியின் ஆசையையோடு 

அம்புப் படுக்கையில் துடித்தாயோ!!

கொஞ்சும் மழலையின் நினைப்போடு 

நித்தமும் கண்ணீர் வடித்தாயோ!!


தாய்மடிக்காக ஏங்கிவந்தாயோ!!

தந்தையின் காலடிச் சத்தம் கேட்க 

ஓடி வந்தாயோ!!


கட்டியணைக்க காத்திருந்த கரங்கெல்லாம் கால் பிடித்து 

கதறிஅழும் கோளமென்ன!!


அள்ளி அனைத்து உச்சிநுகர 

ஊர் தவித்த நேரம் 

உருக்குலைந்து வருகிறாயே!!


விரல் பிடித்து விளையாட

தேடித்திரியும் அந்தப்

பிஞ்சு விரலுக்கு 

யார் பதில் சொல்லுவார்!!


இயந்திரப் பறவைக்கு தான் 

இரக்கமில்லையோ!!

மழைதுளிக்குத் தான் 

மனம்மில்லையோ!!


(ந.விஜயகுமார்.)


#குறிப்பு:பல நாட்கள் பாலைவனத்தில் சிந்திய வியர்வை துளிகளில் ஆசை ஆசையாக குடும்பத்தாருக்காக வாங்கி சேர்த்த அரேபிய பொருட்கள் சிதறிகிடக்கும் 😭 காட்சி.


No comments

Powered by Blogger.