Header Ads



"காதி நீதிமன்றங்களும், அவற்றுக்கெதிரான காழ்ப்புணர்ச்சிகளும்"


- சப்ராஸ் அபூபக்கர் -

இஸ்லாமிய உறவுகள் ஒவ்வொருவரும் இந்தப் பதிவை கட்டாயம் வாசியுங்கள். பல நிதர்சனங்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன.

2013 ம் ஆண்டு காலப்பகுதி அது. "இலங்கை அபிவிருத்திக்கான ஊடக அமைப்பில்" வானொலி ஒருங்கிணைப்பாளராக இணைந்து கொள்கிறேன். என்னை மதித்து, எனக்கான அங்கீகாரம் தந்து என்னையும் அந்தக் குழுமத்தில் இணைத்துக் கொண்ட, நான் எப்பொழுதும் மதிக்கின்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் MC ரஸ்மின் அவர்களை இந்த வேளையில் நன்றியோடு நினைவு படுத்திக் கொள்கின்றேன்.

ஆரம்ப என்னுடைய பயிற்சிக் காலத்தில் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டேன். நிறைய விடயங்கள் எனக்கு கற்றுத் தரப்பட்டது. காலம் செல்லச் செல்ல எனக்கான பொறுப்புகளும் என்னை நம்பி முன் வைக்கப்பட்டன. என்னுடைய முதல் "ப்ரொஜக்ட்" ஆக வானொலி கலைஞர்களை அழைத்து நாடகப்பிரதிகள் ஒலிப்பதிவுக்கான ஏற்பாடு செய்ய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டேன். அந்தக் கடமையை சரிவரச் செய்தேன் என்பதில் எனக்குள் ஆத்ம திருப்தி இருக்கிறது.

அடுத்த ப்ரொஜக்ட் ஆக இலங்கையினுடைய காதி நீதிமன்றங்கள், விவாகம், விவாகரத்து, காதி நீதிமன்றம் வருபவர்களது பிரச்சினைகள் சம்பந்தமான ஆய்வு என மிகப்பெரிய பொறுப்பொன்றை என்னை நம்பி எமது பணிப்பாளர் ரஸ்மின் நாநா ஒப்படைத்து, மன தைரியத்தையும் தந்துதவினார்.

அப்போது இலங்கையில் சுமார் 64 காதி நீதிமன்றங்களும், காதி நீதிபதிகளும் இலங்கையின் நான்கா புறத்திலும் இருந்தனர். நான் அவர்களது தகவல்களைத் திரட்டி சுமார் இரண்டு மாத காலம் முழுமையான கள விஜயத்தில் ஈடுபட்டு என்னாலான தகவல்களை திரட்டிக் கொண்டேன்.

64 காதி நீதிபதிகளையும் சந்தித்தேன். அதிகமான காதி நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறும் நாளில் காதி நீதிபதிகளோடு கூட இருந்து வழக்கின் தன்மைகளை அவதானித்தேன். அதன் வெளிப்பாடாகவே இந்த விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அன்றைய நாட்களில் காதி நீதிமன்றங்களில் தகுதியான காதி நீதிபதிகள் இருக்கவில்லை என்பதே அநேகரின் குற்றச்சாட்டாய் இருந்தது. நானும் அதிகமான காதி நீதிபதிகளை செவ்வி கண்டதில் அவர்களுக்கும், சட்டத்துக்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் பெரிதாக இல்லை. ஏதோ ஒரு ஓய்வு பெற்ற அதிபராகவோ, அல்லது ஆலிமாகவோ இருந்தால் அவர் காதி நீதிபதியாக நியமிக்கப் பட்டிருப்பார். எங்கோ ஒரு ஊரில் மட்டும் ஒரு சட்டத்தரணி காதி நீதிபதியாக அறிமுகமாகினார். (நான் சொல்லும் விடயங்கள் 2013 ல் நடந்தவைகள். இன்றுகளில் மாற்றங்கள் நடந்திருந்தால் சந்தோசம்) 

அடுத்து அதிகமான காதி நீதிபதிகள் ஆண்கள் பக்கத்திற்கு சார்பு அதிகம் என்ற குற்றச்சாட்டை சில பாதிக்கப்பட்ட பெண்கள் முன் வைத்தனர். அது சம்பந்தமாக ஏன் இப்படி நடந்தது? என பாதிக்கப்பட்ட பெண்களிடமே கேட்டேன். சில விடயங்களை எமக்கு நேரடியாக காதி நீதிபதியோடு பேச முடியாமல் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் சில உண்மைகளை மறைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. நாம் உண்மைகளை மறைக்கின்ற நேரம் எமது கணவன்மாருக்கு அது சார்பாக அமையும் நிலையில் காதி நீதிபதிகளின் தீர்ப்பும் சார்பாக மாறுகிறது என பெண்கள் முறையிட்டனர்.

காதி நீதிமன்றங்களில் ஜுரியாக ஒரு பெண் இருக்க வேண்டும் என பெண் தரப்பு எதிர் பார்த்தது. சில இடங்களில் ஒருசில காதி நீதிபதிகள் பெண்களது அந்தரங்க விடயங்களை தன்னோடு நேரடியாக பேசுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனை பல பெண்கள் வன்மையாக கண்டித்துள்ளதோடு தனக்கு விவாகரத்து இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இப்படி கீழ் சாதிகளிடம் வழக்குத் தேவையில்லை என வழக்கை வாபஸ் செய்த சில சகோதரிகளையும் நான் சந்தித்தேன். அதேவேளை பக்குவமாக தன்னுடைய மனைவியை வைத்து பெண்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கு சாதகமான தீர்வினை வழங்கிய சில காதி நீதிபதிகளையும் நான் சந்தித்தேன். 

சில காதி நீதிபதிகளுக்கு அகங்காரத் தொனி காணப்பட்டது. ஒரு பெண் மிகவும் வறிய குடும்பத்தவளாக இருந்தால் அவள் மீது ஒரு அகங்காரத்தைப் பயன்படுத்தி அவளை அடக்கி அவளுக்குப் பாதகமாக தீர்ப்பு சொன்ன ஓரிருவரும் இருந்தனர். சில காதி நீதிமன்றங்களில் பச்சை பச்சையாக வார்த்தைகள் கடுந்தொனியில் கேட்கப்பட்டு பெண்களை தலை குனிய வைத்து ஆண் சமூகத்தை உசுப்பேற்றிய ஒருசில காதி நீதிபதிகளும் அன்றுகளில் இருந்தனர்.

கேக் பெட்டிக்காகவும், வாழைப்பழ சீப்புக்காகவும் நேர்மை தவறிய ஒரு சிலரும் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சாட்சியம் சொன்னார்கள். ஆண் வர்க்கம் அவசரப்பட்டு கேக், வாழைப்பழம், மஞ்சள் கவர் கொண்டு முந்தினால் அவர் என்ன தவறு செய்திருந்தாலும் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு அமையப் பெறுகிறது. இப்படியான சம்பவங்களும் ஒருசில இடங்களில் நடந்தேறியுள்ளது.

சில பெண்கள் பாலியல் ரீதியான பிரச்சினைகளை முகம் கொடுத்து விவாகரத்து வரை வந்தால் அவர்களது பிரச்சினைகளை எல்லாம் கேட்டறிந்து கொண்டு அவரை தனியாக சந்தித்து தமது  காம உணர்வை தீர்த்துக் கொள்ள பாதிக்கப்பட்ட பெண்களை வீடு தேடி வந்த ஒரு சில காதி நீதிபதிகளின் சம்பவங்களையும் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீரோடு முன் வைத்தனர்.

சில பெண்களுக்கு நியாயமே இல்லாமல் மறுமணம் செய்து கொள்ள பல ஆண்களைத் தூண்டி விட்ட ஒரு சில காதி நீதிபதிகளையும் நான் சந்தித்தேன்.

நான் சந்தித்த சுமார் 64 காதி நீதிபதிகளில் அநேகர் நல்ல முறையில் காதி நீதிபதிகளாக நடந்து கொண்டாலும் அநேகர் நெறி தவறி, இறைவன் கட்டளை மறந்து, நீதம் மறந்து செயற்பட்டார்கள் என்பதே யதார்த்தமான உண்மை.

காதி நீதிபதிகளின் தீர்ப்பில் திருப்தி கண்டு அவர்களுக்காக பிரார்த்தனை செய்த பெண்களையும், சில காதி நீதிபதிகளது பக்கச்சார்பான தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாத பெண்கள் அந்தக் காதி நீதிபதிகளுக்கு 'Bபதுவா' செய்ததையும் என் காதால் கேட்டேன்.

(நான் மேற்சொன்ன விடயங்கள் எல்லாம் 2013 ம் ஆண்டு நடந்த, என்னால் பதியப்பட்ட, திரட்டப்பட்ட தகவல்களே. இப்பொழுதுகளில் மேற்சொன்ன விடயங்களில் பூரண மாற்றம் கண்டிருந்தால் கோடி சந்தோசமே...) 

ஆக, காதி நீதிமன்றத்தில் அல்ல, காதி நீதிபதிகளால் தான் எங்கோ தவறு நடக்கிறது என்பது யதார்த்தமான உண்மை. 

இனி,

காதி நீதிமன்றங்கள் மீது இப்போது ஒரு ஓரக்கண் பார்வை இருக்கும் நிலையில் எல்லாம் தெரிந்தும் நான் மௌனியாக இருப்பது எனக்கு சரியென்று படவில்லை. அதிக இடங்களில் கணவன், மனைவி பிரச்சினை வந்த பொழுதுகளில் எல்லாம் மாற்று மத பொலிஸ் அதிகாரிகள், சட்டத்தரணிகள் எல்லாம் நீங்கள் உங்கள் இஸ்லாமிய முறைப்படி இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என காதி நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுவும் நான் கேட்டறிந்த உண்மை. நிலைமை இப்படி இருக்க காதி நீதிமன்றம் தொடர்பில் முன் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாம் அவதானமாக இருப்பதோடு முடியுமான வரை தெளிவான பதில்களையும் முன் வைக்க வேண்டும்.

காதி நீதிமன்றங்கள் ஒரு போதும் பிரச்சினை அல்ல. தகுதியான காதி நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள் இல்லை என்பதே எமது நாட்டிலுள்ள பிரச்சினை. இந்த காதி நீதிபதிகளை நியமிப்பவர்கள் யார் என்பதே எனக்குள் அந்த ஆய்வை செய்த நாளிலிருந்து எழுகின்ற கேள்வி. உண்மை தான். எந்தத் தகுதியின் அடிப்படையில் காதி நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள்?

மாற்றுமத பொலிஸ் அதிகாரிகள், சட்டத்தரணிகள் எமது காதி நீதிமன்றங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள். அந்த நம்பிக்கை இன்னும் இருக்கிறதா என்று தெரியாது. அப்படி இல்லை என்றால் அந்த நம்பிக்கையை எல்லாம் தகர்த்து உடைத்தவர்கள் யார்?

அன்றுகளில் ஒரு காதி நீதிபதிக்கான மாதாந்த சம்பளம் 11 ஆயிரம் ரூபாய் என்றும் அதில் மூவாயிரத்தை காரியாலய செலவுக்குப் பயன் படுத்த வேண்டும் எனவும் சில காதி நீதிபதிகள் முறையிட்டிருந்தார்கள். இந்த சம்பளம் தனக்குத் திருப்தி இல்லை எனவும், இதைச் செய்ய பிரதேசத்தில் வேறு யாரும் இல்லை என்பதால் தான் பொறுப்பெடுத்து செய்வதாகவும் சில காதி நீதிபதிகள் கருத்துக்களை முன் வைத்தனர்.

நிலைமைகள் எல்லாம் இப்படி இருக்க காதி நீதிமன்றத்தை இல்லாமலாக்கவோ, வெறுத்தொதுக்கவோ எந்த முஸ்லிமுக்கும் அவசியம் இல்லை. இஸ்லாம் சொன்ன ஷரீஆ சட்டங்களும், நாட்டினுடைய பொதுவான சட்டங்களும் அங்கே முழுமையாக முன்னெடுக்கப் படுகின்றன.

அப்படியாயின் இன்றுகளில் காதி நீதிமன்றங்கள் எனும் பெயரில் ஏன் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பி விடுகின்றனர். அநேக காதி நீதிபதிகள் விடும் தவறே இதற்கு மிகப்பிரதானமான காரணமாக இருக்கிறது. இனி, நாம் என்ன செய்யலாம்? சமூக வலைத்தளங்களில் கோஷம் எழுப்புவதால் லைக் விழுமே தவிர மாற்றங்கள் ஒன்றும் இடம்பெறப் போவதில்லை.

இலங்கையில் உள்ள முஸ்லிம் சட்டத்தரணிகள் குழு இது பற்றி மார்க்க அறிஞர்களோடு கலந்தாலோசித்து மிக நுணுக்கமான முறையில் நல்ல தீர்வொன்றை எடுக்கும் பட்சத்தில் காதி நீதிமன்றங்கள் தொடர்பில் எழுகின்ற சர்ச்சைகளை இல்லாதொழிக்கலாம் என்பது எனதான நம்பிக்கை.

அதுவரையில் நான் அல்லது, என்னுடைய "பிறைநிலா" ஊடக வலையமைப்பு மீண்டும் ஒருமுறை தகவல்கள் திரட்டி இலங்கையில் உள்ள காதி நீதிமன்றங்கள் தொடர்பிலும், காதி நீதிபதிகள் தொடர்பிலும் முழுமையான ஆவணம் ஒன்றை செய்து சமூகத்துக்கு முன் வைக்க விரும்புகிறேன்.

வெறுமனே நாம் பிறந்தோம், வாழ்ந்தோம், மரணித்தோம் என்றில்லாமல் சமூகத்துக்கு ஏதாவது நலவைச் செய்துவிட்டு இறைவனடி சேர வேண்டும் எனும் நப்பாசையில் இந்த ஆவணப்படுத்தலுக்கு என்னைக் களமிறக்க நான் தயாராகிறேன்.

ஆனால் எமது முஸ்லிம் சமூகம் எமதான அல்லது எனதான இந்த முயற்சிக்கு எனக்கு பக்க பலமாக இருக்க வேண்டும். பொருளாதார ரீதியில் உதவ வேண்டும். சட்ட ஆலோசனைகள் என்ற ரீதியில் உதவ வேண்டும். சிறந்த வழிகாட்டல்கள், ஆலோசனைகள் என்ற ரீதியில் உதவ வேண்டும். அப்படி நீங்கள் கைகோர்ப்பீர்களேயானால் இன்ஷாஅல்லாஹ் இனி வரும் நாட்களில் காதி நீதிமன்றம் தலை நிமிர்ந்து நாடு பூராகவும் பேசப்படலாம். இது எனதான பணி அல்ல. நம் சமூகத்தின் மீதான பணி. எனவே வாருங்கள் நல்லதொரு தெளிவை நாம் புரிந்து கொண்டு மற்றவர்களையும் புரிய வைப்போம்.

நான் மேற்சொன்ன சில காதி நீதிபதிகள் சம்பந்தமான விடயங்கள் எல்லாம் 2013 ம் ஆண்டு காலப்பகுதிக்குரியதே. இப்பொழுது அதில் அநேக காதிநீதிபதிகள் காலஞ்சென்றிருக்கலாம். நான் அவர்களை சந்திக்கும் போதே அநேகர் வயதானவர்களாக இருந்தனர். இப்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய காதி நீதிபதிகள் நேர்மையாக நடந்து கொள்பவர்களாக இருந்தால் உயர்ந்த அல்லாஹ் அவர்களது சேவைகளை பொருந்திக் கொள்ளட்டும்.

நேரம் எடுத்து, சமூகம் சிந்திக்க வேண்டும் என இந்த சம்பங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டேன். எனவே இந்தக் கட்டுரையை முழுமையாக வாசித்த நீங்கள் ஒரு மறு மொழியாக இதற்கு என்ன செய்யலாம்? உங்களது பங்களிப்பு என்னவாக அமையப் போகிறது? என்பதை சொல்லுங்கள். நாமாக மாறும் வரை மாற்றம் நிகழப் போவதில்லை.

இது எனக்கோ, எமக்கானதோ அல்ல. அதையும் மீறி எமது சந்ததிக்கானது என்பதை நினைவில் கொண்டு உங்கள் பதில்களை முன் வையுங்கள்.

காதி நீதிமன்றங்கள் எங்களுக்குத் தேவை. அதையும் விட அதற்குத் தகுதியான, தரமான காதி நீதிபதிகளையே நாம் எதிர்பார்க்கின்றோம்.


13 comments:

  1. ஆய்வுகளின்போது நான் அடிக்கடி கேட்ட விடயங்களையே எனக்கு எப்படி சொல்வது என்று தெரியாதிருந்த விடயங்களே பத்திரிகையாளர் சப்ராஸ் அபூபக்கர் மிக பொறுப்புணர்வுடன் சொல்லி ருக்கிறார். நான் பேசிய சிங்களவர்கள் பலரும் கிழக்கு தமிழர்களும் மலையக மக்களும் முஸ்லிம் திருமணச் சட்டங்கள் பற்றி வைத்த குற்றச்சாட்டு கலப்புத் திருமணங்கள் தொடர்பானதாகும். நாடு முழுவதும் ஒரே சட்டம் என்பதை ஏன் ஆதரிக்கிறீர்கள் என கேட்டபோது ஒரு முற்போக்கான சிங்கள பத்திரிகையாளர் “இலங்கையில் சிங்களபெண்களை ஆசை காட்டி மறு மணம் செய்து வைப்பதை அச்சத்தினால் கைவிட்டிருக்கிறார்கள். ஆனால் இப்பவும் வளகுடா நாடுகளில் நடக்குது. திரும்பி வரும்போது அவர்கலைக் கைது செய்ய முடியாதுள்ளது. அதனால் ஒரே நாடு ஒரே சட்டம் அவசியம்” என்றார்.
    என் ஆய்வுகளின்போது ஏறாவூரில் கடையில் வேலை செய்த சின்ன பெண்ணை ஏமாற்றி 3ம் தாரமாக ஒருவர் திருமணம் செய்த செய்தியை கொதிப்போடு சொன்னார்கள். இப்ப வீட்டுக்குப் போகவும் அனுமதிப்பதில்லை. நாளை மணவிலக்கு அளிட்த்தாலும் ஜீவநாம்சமில்லை என குறிப்பிட்டார்கள். ஈஸ்ட்டர் சம்பவத்தின்பிறகு புலஸ்தினி ஒரு குறியீடாகிவிட்டார். காதலுக்கு எந்த மதமும் எதிர்பில்லை என்றதற்க்கு கலப்பு திருமணம் நடப்பதானால் தேச சட்டங்களை மீறாமல் நடக்க வேண்டும் என்றார்கள். அதனால்தான் கிழக்கில் தமிழர் மத்தியில் ஒரே நாடு ஒரே சட்டத்துக்க்கு ஆதரவுள்ளது. காதிக்கோட் விடயத்தை முஸ்லிம் பெண்களோடும் தனியான திருமணச் சட்ட விடயத்தை ஏனைய இனங்களோடும் விவாதித்து முடிவு செய்கிற மரபிருந்திருந்தால் இன்று நிலமை வேறாக இருந்திருக்கும். சிலர் என்னை காபிர், முனாபிக் என வையக்கூடும். ஒரு ஆய்வாளனாக நண்பனாக இதனை இப்பவாவது சொல்ல வேண்டுமல்லவா?

    ReplyDelete
  2. உங்கள் கட்டுரைக்கு மனமார்ந்த நன்றி! இது காலத்தின் தேவை! காசி நீதிமன்ற செயல்பாட்டு முறை பழமையானது மற்றும் காலாவதியானது மற்றும் அவசர சீர்திருத்தம் தேவைப்படுகிறது. நாட்டில் இனவெறி கூறுகள் சமூகத்திலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு சலுகைகளையும் பறிக்கக் காத்திருக்கும் நேரத்தில், வைக்கப்பட்டுள்ள அமைப்பு பொறுப்புடனும் பொறுப்புணர்வுடனும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். காசி நீதிமன்ற முறையை சீர்திருத்துவதற்கான முன்மொழிவை உருவாக்க முஸ்லிம் சமூகம் உங்களை ஆதரிக்கும் என்று நான் நம்புகிறேன்!

    ReplyDelete
  3. Bro.Safras I agree with your information. Insah allah I wish holding with your hand to future plan.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அமைக்கும்.கட்டுரையாளர் அடியானை தொடர்பு கொள்ளவும்.0777063084

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ். தேவையான ஆய்வை உரிய நேரத்தில் வெளிப்படுதியள்ளீர்கள்.

    ReplyDelete
  6. சப்ராஸ் அவர்களின் காதி நீதிமன்றம் தொடர்பான ஆய்வு காலத்தின் தேவையாகும். முஸ்லிம் குடும்பங்களின் இல்வாழ்க்கையில் ஏற்படுகின்ற முறன்பாடுகளில், உடன்பாடு கண்டு தீர்த்து வைக்கின்ற சபைகளாக காதி நீதி மன்றங்கள் இருக்கின்றன. இங்கு தீர்ப்பு வழங்குகின்ற அதிகாரத்தில் தனியொருவராக காதி நீதவான் செயற்படுவதனால்தான் பெண்கள் சார்பு நீதி தவருவதாக நான் கருதுகிறேன். விசாரிப்பது தீர்ப்பு வழங்குவது போன்ற செயற்பாடுகளின் போது தனியொருவர் இல்லாமல் மூன்று பேர் கொண்ட குழுவாக அதிகாரம் பகிரப்படல் வேண்டும். அதில் கட்டாயம் பெண்ணொருவர் அல்லது இருவர் இடம்பெற வேண்டும். அப்பொழுதான் முறையிடும் பெண்ணுக்கு உள்ள பிச்சினைகளை கூச்சம் இல்லாமல் முன்வைக்க முடியுமாகும்.

    எனவே இதற்கான கட்டமைப்பை முஸ்லிம் கலாச்சார திணைக்களம் அல்லது அது சார்ந்த நிறுவனம் வடிவமைக்க வேண்டும். இதன்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தலைமைத்துவ பன்புள்ள பொது சேவை நோக்ககம் கொண்ட நபர்களை தெரிவு செய்து "காதி நீதிக்குழு"வாக அமைக்க வேண்டும்.

    அப்பொழுதான் சப்ராஸ் அவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் எதுவும் பெண் முறைப்பாட்டாளருக்கு ஏற்படாமல் தவிர்கலாம் என்பது எனது கருத்தாகும்.

    தீன் மாஸ்டர் மலேசியாவில் இருந்து.......

    ReplyDelete
  7. Informative article. Non Muslims think that inter racial marriages happen only among Muslims but there are many non Muslim men who have married with Muslim women in many parts of the country. Most of them follow men's religion.

    ReplyDelete
  8. நீதிபதிகள் தவறிழைப்பது, பிழை செய்வது காதிக்கோட்டில் மட்டுமல்ல எல்லாவகை கோட்டுகளிலும் நடக்கிறது. இருப்பினும் இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் காதிக்கோடுகள் ஏனையவை போன்றல்லாது முன்மாதிரியாக இருக்க வேண்டும். எனவே காழி, ஜுரி நியமனம் தொடர்பான ஒழுங்கு விதிகள் கட்டாயம் மாற்றியமைக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட வேண்டுமே தவிர தொடர் விமர்சனங்கள் பயனற்றதாகும்...

    ReplyDelete
  9. பத்திரிகையாளர்சப்ராஸ் அபுபக்கருக்கும் யப்னா முஸ்லிம் நிறுவனத்துக்கும் கோடி வாழ்த்துக்கள். இலங்கை தமிழ் பேசும் மக்களைப் பொறுத்த வரைக்கும் இத்தகைய விவாதங்கள் குறைவு என்பதுதான் பிரச்சினை. இந்த விவாதத்துக்கு முகியத்துவம் கொடுத்து இந்த செய்தியை 2ம் பக்கத்துக்கு தள்ளாமல் விவாதம் தொடரும்வரை முதல் பக்கதிலேயே வைத்திருக்கும்படி கோருகிறேன்.

    ReplyDelete
  10. இக்கட்டுரையாளர் காலத்துக்கு ஏற்றவிதமாக பொருத்தமான களஆய்வுகளைச் செய்து மிகவும் உண்மையான தரவுகளை வெளியிட்டிருப்பது அதிக மகிழ்ச்சியினைத் தருகின்றது. எமது நாட்டு அரசியல்வாதிகள் (ஒரு சிலரைத் தவிர) மிகவும் நல்லவர்கள். அத்தோடு பிற சமூகத்தவர்களும் எம்முடன் மிகவும் நெருக்கமானவர்களாகவே நடந்து கொள்கின்றனர். மலேசியா போன்ற முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட பல நாடுகளில் இரட்டைச் சட்டமே நடைமுறையில் இருக்கின்றது. பல வேறு நாடுகளிலும் ஷரியா சட்டங்கள் இருக்கின்றன. ஷரியாவுக்கு மாற்றமான முறையில் இலங்கையின் காதி நீதிமன்றங்களில் நீதி வழங்குவது காலம் காலமாக நடைபெற்று வருகின்றது என்பது இரகசியமானது அல்ல. அதனை இக்கட்டுரையும் நிரூபிக்கின்றது. ஒரு பிரதேசத்தில் தன்னால் விவாகரத்துக் கொடுக்கப்பட்ட பெண் ஒருவரையே அதே காதி நீதிபதி இரண்டாவதாகத் திருமணம் செய்த வரலாறும் உண்டு.

    “ஒரே நாடு ஒரே சட்டம்” என்பது பேச்சளவிலேயே தற்போதுவரை இருந்தாலும் அதன் உள்ளடக்கம் என்ன என்பது இதுவரையும் தெளிவுபடுத்தப்படவில்லை. முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை எந்த முஸ்லிமும் விட்டுக் கொடுக்கத் துணியமாட்டான்; என்பதே என்னுடைய கருத்தாகும். புதிதாக கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் திருத்தத்தில் இலங்கையில் வாழ்கின்ற பலதரப்பட்ட இன மக்களின் சட்ட உரிமைகளைப் பாதுகாக்கக்கூடியதாக பல உப பிரிவுகளையுடையதாக இச்சட்டம் இருக்கக்கூடும். இதுசம்பந்தமாக முஸ்லிம் புத்திஜீவிகளும் உலமாக்களும் அரச உயர்மட்டத்துடன் தொடர் பேச்சுகளில் ஈடுபட்டு மிக முக்கியமாக “முஸ்லிம் தனியார் சட்டம்” எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை அவரகளுக்கு விளக்க வேண்டும். இந்த விடயத்தில் பொறுப்பினை முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ஒப்படைத்துவிட்டு இவரகள் தனித்து இருப்பது என்பது பாரிய தீய விளைவுகளை ஏற்படுத்தவும் கூடும். சில காலத்திற்கு முன்பதாக முஸ்லிம்களுக்கு மாற்று மத அரச அதிகாரிகளும் மதத் தலைவரகளும் மக்களும் பெரிதும் கண்ணியம் அளித்திருந்தனர். அந்நிலைமை இப்போது சற்று குறைவடைந்து வருவதனைக் காணக்கூடியதாக இருக்கினறது.

    கலப்புத் திருமணம் பல்வேறு காரணங்களால் நடைபெறுகின்றன. அதனை எவ்வாறு தடுக்க முடியும்? இதனால் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்கள்தான். மலைநாட்டுப் பகுதிகளிலும் மற்றும் மாற்று மத மக்கள் மிகவும் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்களிலும் வாழும் இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் கலப்புத் திருமணம் செய்து அவரகள் இன்றுவரை மாற்று மதத்திலேயே வாழ்கின்றமையைக் குறிப்பிடலாம். உண்மையைச் சொல்லப்போனால் அறியாமையின் காரணமாக திருமணமே செய்யாமல் வாழ்ந்து கொண்டிருப்பதனையும் குறிப்பிட முடியும்.

    முஸ்லிம் புத்திஜீவிகள் ஷரியா சட்டம் இலங்கையில் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அரசுக்கு உரிய அழுத்தங்களையும் விளக்கங்களையும் கொடுப்பதற்கு முயற்சி செய்தல் வேண்டும். ஷரியாவின் அடிப்படைத் தன்மைகளை அறியாதவர்களுடன் பேசுவதிலும் விவாதம் செய்வதிலும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. ஷரியா முஸ்லிம்களுக்கான தனியான சட்டக்கோவை. ஷரியா சட்டத்தினை இரத்து செய்வதற்கு அரசு முயலமாட்டாது என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

    ReplyDelete
  11. மார்க்க அறிவு இல்லாதவர்களும் ஷரியா சட்டம் தெரியாதவர்களும் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படுவது மாற்றுக்கருத்தில்லாமல் கண்டிக்கத்தக்கது. அது நிச்சயமாக திருத்தப்படவேண்டும். ஆனால் நீதிமன்றங்களில் நடக்கும் ஊழல்களை எப்படி நிறுத்துவது. வலியவனுக்கு ஒரு நீதி இளைத்தவனுக்கு ஒரு நீதி என்பது எல்லா நீதிமன்றங்களிலும் நடப்பது தான். காதி நீதிமன்றங்களில் மாட்டும் நடப்பது அல்ல. இறையச்சம் உள்ள நீதிபதிகளாக தேடி நியமிப்பது எப்படி.

    ReplyDelete
  12. ஷரியா சட்டத்தில் எந்த தவறும் இருக்க முடியாது,காரணம் அது மனிதனால் இயற்றப்பட்டது அல்ல அது இறைவனால் இயற்றப்பட்ட சட்டம். காதி நீதிபதிகளிலே பல குறைகள் காணப்படலாம்,மேலே சகோதரன் சப்ராஸ் அபூ பக்கர் குறிப்பிட்டது போன்று, நானும் ஒரு காதி நீதிபதியை காணக்கிடைத்தது , இஸ்லாமிய சட்டங்கள் தெரிந்தும் இன்னும் அதை நடைமுறைப்படுத்த தெரியாமல் இருக்கும் சில நீதிபதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்

    ReplyDelete
  13. Totally agree with Dr. Deen Mohamed.

    ReplyDelete

Powered by Blogger.