Header Ads



பாராளுமன்றத்திற்குள் பௌத்த பேரினவாதம், அசுர பலத்துடன் புகுந்துள்ளது - விக்னேஸ்வரன்

பாராளுமன்றத்திற்குத் தம்மை தெரிவு செய்த வாக்காளர்களுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள், வேட்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்து நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இன்று -07- ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களின் இருப்பு, அடையாளம் ஆகியவற்றை அழிவில் இருந்து மீட்கும் வகையில், மிகவும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டிய நிலையில் இருப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.

கூட்டணியை மேலும் பலப்படுத்தி தமிழ் மக்களுக்கான நேர்மையான, ஊழல் அற்ற, தமிழ் தேசியத்தின் அடிப்படையிலான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதாகவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் தெரிவித்தார்.

6 மாதங்களுக்குள் உருவாக்கப்பட்ட கூட்டணி என்ற வகையிலும், கட்சிகள் அல்லது கூட்டணிக்குரிய மக்கள் கட்டமைப்புகள் உருவாக்கப்படாத நிலையிலும் பெற்றிருக்கும் வெற்றி மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் உரிமை அரசியலைத் தவிர்த்து சலுகை அரசியலை முதன்மைப்படுத்தி மேற்கொண்ட செயற்பாடுகளே இம்முறை தேர்தலில் கணிசமானளவு மக்கள் சிங்களக் கட்சிகளுக்கும் அரசாங்க சார்பு தமிழ் கட்சிகளுக்கும் வாக்களிக்கும் நிலைமையை உருவாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதே தவறை மீண்டும் செய்து 70 வருட கால போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

தேர்தல் முடிவடைந்த பின்னர் ஆசனங்களுக்காக இடம்பெற்றுள்ள சில அவலட்சணமான செயற்பாடுகள் கூட்டமைப்பின் எதிர்காலப் பாதையைக் கட்டியம் கூறி நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், சிங்கள பௌத்த பேரினவாதம் பாராளுமன்றத்திற்குள் அசுர பலத்துடன் புகுந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த அச்சுறுத்தலை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்று சேர்ந்து முறியடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இனத்தின் நன்மை கருதி தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியம் எனவும் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

2 comments:

  1. இவர் பாராளும்மன்றம் வந்ததே குப்பை கொட்டத்தானே.

    ReplyDelete

Powered by Blogger.