Header Ads



‘யானைகளுக்கு உணவு வழங்க வேண்டாம்’


- எம்.ஏ.எம்.ஹசனார்   -

 யால சரணாலயம்,  கதிர்காமம் வீதிகளில் உலா வரும் யானைகளுக்கு உணவு வழங்க வேண்டாமென,  வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யால சரணாலயத்திலும் கதிர்காமம் வீதிகளிலும் உலா வரும் காட்டு யானைகள், அவ்வீதியில் செல்லும் வாகனங்களை வழி மறித்து, உணவு கேட்டுத் தொல்லை கொடுப்பதாக,  வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

யால சரணாலயத்துக்கும் கதிர்காமத்துக்கும்  பயணிக்கும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளின் வாகனங்களை மாத்திரமன்றி, பயணிகள் போக்குவரத்து பஸ்களையும் இடைமறித்து, காட்டு யானைகள் உணவு கேட்டுத்தொல்லை கொடுப்பதாகவும் இதனால் இவ்வீதியில் செல்வோர், காட்டு யானைகளுக்குத் தாம் கொண்டு செல்லும் உணவுகளையும் பூஜைக்கெனக் கொண்டு செல்லும் பழங்களையும் கொடுத்து விட்டு மரணப் பயத்தில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.

முன்னைய காலத்தில் ஒரு யானை மாத்திரமே, வீதியோரத்தில் படுத்தவாறு ஒரு காலை நீட்டி, உணவு கேட்பதாகவும் உணவு வழங்கினால் மாத்திரம் தமது காலை மடித்து, வாகனங்களைச் செல்ல வழி விடுவதாகவும் தெரிவிக்கும் வான சாரதிகள், உணவு வழங்காவிடின் வாகனங்களுக்குள் தும்பிக்கையை நீட்டி தொல்லை தந்ததாகவும் தெரிவித்தனர்.

எனினும், அண்மைக் காலமாக இவ்வீதிகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக நின்று, உணவு கேட்டுத் தொல்லை தருவதாகவும் இந்த யானைகளை காட்டுக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், மேற்படி வீதிகளில் பயணிக்கும் போது, யானைகளுக்கு உணவு வழங்க வேண்டாமெனவும் அவற்றுக்கு அருகில் சென்று புகைப்படங்களை எடுக்க வேண்டாமெனவும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments

Powered by Blogger.