August 22, 2020

ஒரு சமூகம் தனது மரபுகளை மாற்ற வேண்டுமா? இல்லையா? என்பதை, அந்தந்த சமூகங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்

- ஊடகப்பிரிவு –

மன்னர் காலம்தொட்டு மதிக்கப்பட்டு வந்த ஒவ்வொரு சமூகங்களினதும் தனித்தனி கலாசாரங்கள், மரபுரிமைகள், வழக்காறுகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்

“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற பரவலான கருத்தாடல்களும் சொற்பிரயோகங்களும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு அச்சுறுத்தலாக அமையாமல் இருக்கும் வகையில், புதிய அரசின் செயற்பாடுகளும் கொள்கை அமுலாக்கல்களும் அமைய வேண்டுமென அவர் மேலும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

“ ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பது பற்றியும், ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய சில உறுப்பினர்களும் இதையே வலியுறுத்தினர்.

இந்த நாட்டில் “எல்லோருக்கும் ஒரே சட்டம்தான்” இருக்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். ஆனால், இந்த வாசகம் வெவ்வேறு பிரிவினருக்கு, வெவ்வேறு சட்டம் இருப்பது போன்ற தோற்றப்பாட்டை தோற்றுவித்துள்ளது. அது பிழையான சிந்தனையாகும். வெவ்வேறு சமூகங்களின் சமூக, கலாச்சார மரபுகளோடு சம்பந்தப்பட்ட, அந்த மக்கள் தொன்றுதொட்டு பேணி வருகின்ற விடயங்கள் மன்னர் காலத்திலிருந்தே அங்கீகரிக்கப்பட்டுள்ளவை என்ற உண்மையை, இந்த உயரிய சபை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றினால்தான் அந்தந்த சமூகங்களுக்கு பாதிப்பில்லாத முறை மன்னர் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்து வருகின்றது 

இவ்வாறு காலாகாலமாக பழக்கத்திலிருந்து வந்த வழக்காறுகள், மரபுரிமைகள் டச்சுக்காரர்களின் காலத்தில் தொகுக்கப்பட்டன. பின்னர், அவற்றுக்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட்டு, இன்று அவை தனியார் சட்டங்களாக அடையாளம் காணப்படுகின்றன. இவை சட்ட வடிவத்திலே காணப்பட்ட போதும் காலாகாலமாக பேணப்பட்டு வந்தவைகளாகும். இவற்றை “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற பிரமையின் கீழ் கைவைக்க முற்படுவது, அந்தச் சமூகங்களின் கலாச்சார மரபுகளின் மீது கைவைப்பதற்கு ஒப்பானதாகும். இவ்வாறான மரபுகளில் கைவைக்க முனைவது, ஒரு சமூகத்தின் நடைமுறையை மற்றொரு சமூகத்தின் மரபுகளில் திணிக்க முயல்வதாகும். அத்துடன், இது சர்வதேச சாசனங்கள் வரையறுத்துள்ள சமய, கலாச்சார உரிமைகளை மீறுவதாகும். ஒரு சமூகம் தனது மரபுகளை மாற்ற வேண்டுமா? இல்லையா? என்பதை, அந்தந்த சமூகங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

எனவே, “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற போர்வையில், சிறுபான்மைச் சமூகங்களின் தனித்துவத்தில் அத்துமீறி சட்டங்களை திணிக்க முயல்வது, நாகரீகமான அல்லது ஜனநாயக செயற்பாடாக அமையாது என்பதை இந்த உயர் சபையில் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

19 வது திருத்தத்தை முற்றிலும் ஒழிப்பதாக அல்லது 20 வது திருத்தத்தின் மூலம், அதில் மாற்றங்களை கொண்டுவரப் போவதாக கூறப்பட்டுள்ளது. எனினும், இதிலுள்ள சுயாதீன ஆணைக்குழு உள்ளடங்கலான, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அம்சங்களை பாதுகாக்க வேண்டியதும் நமது பொறுப்பாகும்.

புதிய திருத்தத்தின் பின்னர், மீண்டும் ஒரு அரசியலமைப்புத் திருத்தம் உருவாகக்கூடிய நிலைமை ஏற்படாத வகையில், உத்தேசத் திருத்தமானது நாட்டுக்கும் எதிர்கால சந்ததிக்கும் நிரந்தரமான நிம்மதியை பெற்றுத்தர வேண்டும்

பல்லினச் சமூகங்கள் வாழுகின்ற நாட்டில், ஏனைய சமூகங்களின் கௌரவம், மத உரிமை, கலாச்சார விழுமியங்களை பேணும் வகையிலும், அவற்றை உறுதிப்படுத்தும் முறையிலுமான விடயங்கள், புதிய திருத்தத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

அதேபோன்று, தேர்தல் திருத்தங்களை கொண்டுவர வேண்டுமென கூறப்பட்டுள்ளது. தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும்போது, நாட்டின் இன, மத விழுமியங்களை மனதில் கொண்டு, அந்தந்த சமூகங்களின் வீதாசாரங்களுக்கு ஏற்ப, பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்பட வேண்டும்.

சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டுமென சிந்திக்கும் சில சக்திகள், ஜனநாயகத்தை குழிபறிக்கும் சிந்தனையுடனேயே தொழிற்படுகின்றன என்பதே எனது கருத்தாகும்.

எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசு, புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணாமல், இனிமேலும் காலங்கடத்தினால், நாட்டுக்கு அது நஷ்டமாகவே அமையும்” என்றார்.     

1 கருத்துரைகள்:

நானும் "ஒரே நாடு .......: என்பதைப் பற்றி கருத்து ஒன்றினை உள்ளிடலாம் என்று "Jaffna Muslim" உள்ளிட்டபோது முன்னாள் அமைச்சர் ரிசாத் அவரகளின் கருத்துக்களை மேவியதாக ஓரு சிறு ஆக்கம் எனது கண்களில்பட்டது. மிகவும் நேர்த்தியான முறையில் அவ்வாக்கம் இருந்தது. உண்மையில் "இலங்கை ஒரே நாடு ஒரே சட்டம்" என்பது தவிர்க்க முடியாதது. நாட்டின் சட்டம் வேறுவேறாக இருப்பின் பொதுவான சட்டங்களை இயற்றி அதனை நிறைவேற்ற முடியாது. உதாரணமாக முஸ்லிம் ஒருவர் கொலையாளி என சட்டத்தினால் நிரூபிக்கப்பட்டால் அவருக்குரிய தண்டனை தூக்குதான். அதேபோல் சிங்களவர் ஒருவர் கொலையாளியாகக காணப்பட்டால் அவருக்குரிய தண்டனை மூன்று மாத சிறை என்றிருந்தால் அங்குதான் பிரச்சினை தோன்றும். அப்படி வித்தியாசமான சட்டங்கள் இலங்கையில் கிடையாது. இங்கு சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாகவே இன்றுவரை விளங்குகினறது. எங்களது சட்;டவாக்கத்துறையும் சட்ட அமுலாக்கல்துறையும் மிகவும் சரியான முறையிலேயே சட்டத்தை அமுல் படுத்தி வருகின்றனர். இது மகிழ்ச்சிகரமான விடயமாகும்.

மன்னர்களுடைய காலத்திலிருந்தே இங்கு வாழ்கின்ற பல்வேறு இன சாதி மத மக்களுக்காக பலவேறு சுய சட்டங்கள் (Pசiஎயவந டுயற) அமுலில் இருந்து வந்திருக்கின்றன. அம்மன்னர்களை நாம் பாராட்ட வேண்டும். அவ்வாறான சட்டங்கள் அன்னியரது ஆட்சிக்காலத்தில் எழுத்தில் வடிவமைக்கப்பட்டு ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ஆட்சியில் மாத்திரமன்றி சுதந்திர இலங்கையிலும் அமோகமாக எந்தத் தடையும் இன்றி பின்பற்றப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி இந்துக்கள் சிங்கள கரையோரத்தவரகள் மலைநாட்டினர் மற்றும் தமிழர்களின் தேசவழமைச்சட்டங்களும் நடைமுறையில் இருந்து வருகின்றன. இவற்றை எல்லாம் நீக்கிவிட்டு சகலரையும் பொதுச்சட்டத்தினுள் கொண்டு வருவது என்பது அமுலாக்கல் துறைக்கு மிகவும் கஷ்டமான பணியாக இருக்கும். அதே சேமயத்தில் ஒரு சமூகத்தினரை ஓரம் கட்ட நினைப்பது மற்டற சமூகங்களுக்கு தேவையற்ற கஷ்டங்களையும் ஏற்படுத்தும். இப்படிச் செய்கின்றபோது எதிர்காலத்தில் "ஒரே நாடு ஒரே சட்டம்' ஒரே மதம ஒரே பால் இனம் ஒரே தொழில்" போன்ற சட்டங்களை அமுல் நட்த்துவதற்கு ஆலோசனைகூட வழங்கப்படலாம்.

புதிய அரசு எமது நாட்டில் அமுல்படுத்த வேண்டிய சட்டங்கள் பல இருக்கின்றன. நாட்டிலுள்ள சமூக குறைபாடுகளை அகற்றுவதற்கு முதலில் அரசு நடவடிக்கை எடுத்து சகல மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும். மிகவும் கேவலமான சமூக சீர்கேடுகள் இன்னமும் நாட்டிற்குள் காணப்படுகின்றன. இவற்றை எல்லாம் நீக்கவேண்டுமென யாரும் அரசுக்கு ஆலோசனை வழங்குவதில்லை. போதைப் பொருள் பாவனையும் வர்த்தகமும், மதுப்பாவனை, கெசினோ கிளப்கள் பெண்கள் பாதுகாப்பு கள்ளச் சாராயம் கருப்புச் சந்தை மசாஜ் மற்றும் விபசார நிலையங்கள் போன்ற மாபாதகமான குற்றச் செயல்கள் பௌத்த பூமியான இலங்கையில் அரச ஒத்துழைப்புடன் நடைபெறுவது வருந்தத்தக்கது. அரச ஊழியர்கள் ஓய்வூதியரகள் சிறப்பாக சட்டத்தை சரிவரக் கவனிக்க வேண்டிய பொலிஸ் அதிகாரிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்கு அரசு உடனடிக் கவனத்தைச் செலுத்த வேண்டும். இந்த அரசு இன்னமும் மக்களின் அபிமானத்தைப் பெறவேண்டுமாக இருந்தால் நீதியான வளமான அனைவருக்கும் பொருந்தக்கூடிய திட்டங்களோடு சகலரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் தங்களது திட்டங்களை வகுத்தல் வேண்டும். இதன் மூலம் நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் தொண்டாற்றலாம்.

Post a comment