August 10, 2020

முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத, நெருக்குதல்கள் எவ்வாறு தோன்றியது..? - பாகம் 2

பேராசிரியர் மௌலவி எம்.எஸ்.எம். ஜலால்தீன் (கபூரி)

இலங்கையில் வெளிநாட்டவர்களுடைய வர்த்தக வியாபகத்தை பொறுத்துக் கொள்ள முடியாத கடும்போக்குவாத சில சிங்கள பௌத்தர்களும், சில உள்நாட்டு சிறு வர்த்தகர்களும் வெளிநாட்டு வர்த்தக சமுதாயத்தினருக்கு எதிராக தமது விரோதத்தையும், பகைமையுணர்வையும் படிப்படியாக வெளியிடத் தொடங்கினார்கள். குறிப்பாக இந்தியாவின் மும்பாயிலிருந்து இலங்கைக்கு வந்த வர்த்தகர்களையும், தென்னிந்தியாவிலிருந்து வந்த சில்லறை வியாபாரிகளையும் அவர்களின் எதிர்ப்பு முகாம் குறிவைத்தது. இந்த எதிர்ப்பாளர்களுக்கு பௌத்தர்களின் தேசிய வீரனாகக் கருதப்பட்ட அநகாரிக தர்மபாலா தொடர்ந்து ஒத்தடம் கொடுத்து வந்தார். குறிப்பாக, இலங்கையில் நகர, கிராமப்புறங்களிலெல்லாம் தமது சிறு வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த கரையோர முஸ்லிம்களாக இனங்காணப்பட்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்களே இந்த நெருக்குதல்களுக்கு முக்கியமாக முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. ஆனால் இந்த முஸ்லிம்கள் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த தொகையினராகவே இலங்கையில் காணப்பட்டார்கள். முக்கியமான தொழில் போட்டியும், பகைமையும் முஸ்லிம் - சிங்கள வர்த்தகர்களுக்கும,; கடை உரிமையாளர்களுக்குமிடையிலேதான் நிலவியது. 1915ம் ஆண்டளவில் இரண்டாம் உலக போர் நிலமைகள், நாட்டில் ஏற்பட்டிருந்த பணவீக்கம் என்பன காரணமாக நாட்டில் அத்தியவசியப் பொருள்களின் விலைகளில் ஏற்பட்ட சடுதியான உயர்வு காரணமாக, உள்ளூர் நுகர்வோர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான பகைமையுணர்வை மேலும் வளர்த்துக் கொண்டார்கள்.

1911ம் ஆண்டளவில் இலங்கையில் 280,000 முஸ்லிம்கள் (மொத்த நாட்டின் சனத்தொகையான 4.1 மில்லியன் மக்களில் 7 வீதம்) காணப்பட்டார்கள். இலங்கைச் சோனகர், மலாய் இனத்தவர், கரையோர முஸ்லிம்கள் என்ற மூன்று பிரிவினராகக் காணப்பட்ட இலங்கை முஸ்லிம்கள், இலங்கையில் காணப்பட்ட விவசாயத் தொழிலிலிருந்து, உற்பத்தி தொழிற்சாலையின் தொழில்நுட்பத் தொழில் வரை எல்லாத் தொழிற்துறையிலும் முக்கிய பங்கு கொண்டிருந்தார்கள். எனினும், முஸ்லிம் தொழிலாளர்களும், வர்த்தகர்களும் உள்நாட்டு உற்பத்திகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சந்தைப்படுத்துவதில் பாரம்பரியமாக தமக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றிருந்தார்கள். நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் வியாபாரப் பொருட்களை சுமந்து சென்று வியாபாரம் செய்து வந்த முஸ்லிம்களினால், முஸ்லிம் சமுதாயமே வியாபார சமுதாயமாக சிங்களவரின் கண்களுக்கு இனங்காணப்பட்டார்கள். உண்மையில், முஸ்லிம் சமுதாயத்தில் மிக அதிகளவானோர் அப்போது விவசாயிகளாகவும், கைத்தொழில் துறையினராகவும் இருந்ததை சிங்கள சமூகம் கண்டுகொள்ள வாய்ப்பேற்படவில்லை.

முஸ்லிம்களுக்கெதிராக அநகாரிக தர்மபாலாவின் அறைகூவல்

20ம் நு{ற்றாண்டின் ஆரம்பத்தில், 'அந்நிய வர்த்தர்கள்' என அடையாளமிடப்பட்டவர்களை எதிர்க்கின்ற மனோபாவம், 'மண்ணின் மைந்தர்கள்' என அடையாளமிடப்பட்ட சில பௌத்த சிங்களவர்களிடையே பலமாகக் காணப்பட்டதை அப்போதைய சிங்கள ஊடகங்கள் தமது முக்கிய கருப்பொருளாக தொடர்ந்து எழுதி பிரச்சாரம் செய்து வந்தது. இப்பிரச்சாரத்தின் முக்கிய சூத்திரதாரியாக அநாகரிக தர்மபாலாவே விளங்கினார். ஏனெனில் இவரது தந்தை ர்.டொன் கரோலிஸ் என்பவர், புறக்கோட்டையில் வியாபார ஸ்தலங்களைக் கொண்டிருந்த ஒரு சில சிங்களவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மிக அதிகமான சிங்கள எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் என எல்லோருமே சிங்கள மன்னர்களின் வீரதீரச் செயல்கள் பற்றி மிகவும் பெருமையாக எழுதி, அந்நதிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், வெளிநாட்டு வர்த்தகர்களின் வியாபார ஸ்தலங்களை சிங்களவர்கள் பகிஷ்கரிக்க வேண்டுமெனவும் அறைகூவல் விடுத்த வண்ணமிருந்தனர்.

1965ல் ஆனந்த குருகே என்பவர் பின்வருமாறு எழுதினார். 'அந்நியர்கள் எமது நாட்டினதும், மண்ணின் மைந்தர்களினதும் செல்வங்களையும் எடுத்துச் செல்கின்றார்கள். இவர்கள் எங்கே செல்கின்றார்கள்? இங்கே நாடு கடந்து வரும் இவர்களுக்கு, மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வேறொரு நாடும் உள்ளது. ஆனால் சிங்களவர்கள் அவ்வாறு செல்வதற்கு எந்த நாடும் இந்த உலகில் இல்லை. அந்நியர்கள் இந்த நாட்டில் அனுபவித்து மகிழும் போது, மண்ணின் மைந்தர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளார்கள். பாமரத்தனமான - எவ்வித உதவியுமற்ற - சிங்கள கிராமத்தவர்கள் அவர்களின் மூதாதையர்களின் பூர்வீக நிலங்களை கொள்ளையடித்த அந்நியர்களால் வெற்றி கொள்ளப்பட்டுள்ளார்கள்.'

அதே நேரத்தில். அநகாரிக தர்மபால நேரடியாக முஸ்லிம்களையும் அவர்களின் வர்த்தகர்களையும் தாக்கி 1915ல் பின்வருமாறு எழுதினார்.

'அந்நியர்களான முகம்மதியர்கள் (முஸ்லிம்கள்) அவர்களின் அநியாய வட்டி முறைமையின் (ளூலடழஉமயைn ஆநவாழன) காரணமாக, யூதர்களைப் போன்று மிகவும் இலாபமடைந்தவர்களாக காணப்படுகின்றார்கள். 2358 வருடத்துக்கும் மேலான வரலாற்றைக் கொண்;ட இந்நாட்டின் மண்ணின் மைந்தர்களும் இந்நாட்டை அந்நியரின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்காக தமது இரத்தத்தை ஆறாக ஓடச் செய்தவர்களுமான சிங்களவர்கள் மட்டுமே பிரித்தானியரின் கண்களுக்கு நாடோடிகளாகத் தெரிகின்றார்கள்........ அந்நியர்களாக இலங்கை வந்த இந்திய முகம்மதியர்கள் (முஸ்லிம்கள்), எவ்வித வியாபார அனுபவமுமற்ற  அப்பாவி கிராமத்தவர்களை சுரண்டியதன் காரணமாக முகம்மதியர்கள் செழிப்புற்று விளங்க, மண்ணின் மைந்தர்கள் (சிங்களவர்கள்) நாட்டின் எல்லைக்கு ஓடிச் செல்கின்றார்கள்.

சிங்கள சமூகத்தில் காணப்பட்ட ஏனைய மத்தியதர எழுத்தாளர்களும் கூட, மக்களை சினமூட்டும் அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருந்தார்கள். 

'சிங்கள ஜாதிய' என்ற நூலை எழுதிய பியதாஸ சிரிசேன என்ற சிங்கள நாவலாசிரியர், 'கரையோர முஸ்லிம்கள். கொச்சின் நாட்டவர், அந்நிய நாட்டவர்களின் தொடர்புகளிலிருந்து தவிர்ந்திருக்குமாறு' சிங்களவர்களைத் தூண்டினார். 'லக்மின' என்ற பிரபல சிங்கள நாளிதழ், கரையோர முஸ்லிம்களைப் பற்றி எழுதும் போது 'இந்த வெறுக்கத்தக்க, நாட்டைசீரழிக்கும் மக்கள் கூட்டத்தை இந்த நாட்டிலிருந்து விரட்டுவதற்கான பொருத்தமான திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும்.' என்று எழுதியது. மற்றொரு சிங்களப் பத்திரிகையான 'தினமின' 'எமது நிரந்தரமான எதிரி முஸ்லிம்களே' எனப் பகிரங்கமாக எழுதியது. இவ்வாறான ஆத்திரமூட்டும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்த பத்திரிகை ஆசிரியர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டதுடன், 1915ம் ஆண்டில் 'சிங்கள ஜாதிய' என்ற நூலும், அநகாரிக தர்மபாலாவின் 'சிங்கள புத்தய' என்ற நூலும் அரசாங்கத்தால் தடை செய்ய்பபட்டது.

நாட்டின் நிலமை இவ்வாறு இருக்கையில், சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான முதலாவது மிக மோசமான இனக்கலவரம், நாட்டின் பல பகுதிகளில் 1915ம் ஆண்டில் ஆரம்பமானது. வெளித்தோற்றத்தில் இந்த இனக்கலவரத்துக்கான காரணம் மத ரீதியான குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கப்பட்டாலும், உண்மையில் இதற்கான மூலகாரணம், அந்தக் காலப்பிரிவில் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார, அரசியல் விரோத மனப்பான்மையே எனலாம். இந்த இனக்கலவரத்தில் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் அநியாயமாக காவு கொள்ளப்பட்டன. இராணுவச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு எதிராக பிரித்தானிய காவல் படையினரால் தீர்ப்பு வழங்கப்பட்டது. பல மத்தியதர பௌத்த மிதவாதத் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். இவர்களில் புறக்கோட்டையில் இருந்த சிங்கள வர்த்தகர்களின் குடும்ப உறவினர்களும் உள்ளடங்கலாக சிறைப்படுத்தப்பட்டனர். இவர்களில் புறக்கோட்டையின் பிரபல வர்த்தகரும், செல்வந்தருமான னு.னு.பெட்றிஸ் என்பவரின் மகனான னு.நு.பெட்றிஸ் என்பவர் இராணுவ நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு, முஸ்லிம் வியாபார நிலையங்களை தாக்குவதற்காக பொதுமக்களை ஒன்று கூட்டிய குற்றத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு புறக்கோட்டை வர்த்தகரான ர்.டொன் கரோலிஸ் (ர்.னுழn முயசழடளை) என்பவரின் மகன் எட்மன்ட் ஹேவாவித்தாரனக்கு எதிராக மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், சிறைச்சாலையிலேயே உயிரிழந்தார். பெட்றிஸ் என்பவரின் மைத்துனர் N.ளு.பெர்ணான்டோ என்பவரும் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, பின்னர் அத்தண்டனை குறைக்கப்பட்டது.

இவ்வாறான பல்வேறு சம்பவங்களும் இனக்கலவரங்களும் நடந்து ஒரு மாதத்தின் பின் அநகாரிக தர்மபாலா, இதன் பிரதிபலிப்பை பின்வருமாறு வெளிப்படுத்தினார். 

'எவ்வாறு ஜேர்மனியர்கள் பிரித்தானியருக்கு எதிரிகளாக உள்ளார்களோ, அவ்வாறே முகம்மதியர்களும் சிங்களவர்களுக்கு எதிராக உள்ளனர். அவர்கள் மதம், இனம், மொழி போன்றவற்றால்  எமக்கு, அந்நியர்களாக உள்ளார்கள். பௌத்தர்களைப் பொறுத்தவரையில் பௌத்த மதத்தை கைக்கொள்ளாதுபோனால், இறப்பதே மிகச் சிறந்தது. பிரித்தானிய அதிகாரிகள் எம்மை சுட்டுக் கொல்லலாம், தூக்கிலிடலாம், மன்னிக்கலாம், அல்லது எம்மை சிறையிலிடலாம், அல்லது சிங்களவர்களுக்கு எதையும் செய்யலாம். எனினும் அங்கெல்லாம் முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்குமிடையில் மிக மோசமான இரத்தமே இருக்கும். அமைதியும், சமாதானமும் கொண்ட சிங்களவர்கள், அந்நியர்களின் அக்கிரமத்தையும், அவமரியாதையையும் தொடர்ந்து பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதை இறுதியாக காண்பிப்பார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக முழு நாடுமே ஒருநாள் கிளர்ந்தெழும். இதற்கான காரணம் பொருளாதாரமும், மத நம்பிக்கைகளுமாகும்.' (புரசரபந 1965)

அடுத்தடுத்த வருடங்களில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் முரண்பாடுகள் தோன்றி, மறைந்தன. எனினும் சிங்கள வர்த்தகர்களின் சிறுபான்மையினருக்கு எதிரான மனோபாவம் தொடர்ந்து உணர்வுபூர்வமாக இருந்த வந்தது. இந்த தொடர்ச்சியான எதிர்ப்புணர்வின் காரணமாக, 1981ம் ஆண்டில் புத்தளத்திலும், காலியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இவை சிங்கள ராணுவ மயமாக்கலின் திட்டமாகவும் காணப்படுகின்றது. வர்த்தக ரீதியிலான பகையுணர்வு அதிகரித்துக் காணப்படுகின்றது.

1970, 1980 களில் தமிழர்களுக்கு எதிரான சிங்கள மக்களின் மனோபாவம், முன்னர் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக அவர்கள் மேற்கொண்டிருந்த வெறுப்பின் அடிப்படையில் இருந்தே தோற்றம் பெற்றுள்ளது. சிங்கள இனவாத மேலாதிக்கத்தின் பிடிவாதமும், பௌத்த மதத்தைப் பாதுகாப்பது என்ற சிங்கள மக்களின் விஷேச கரிசனையும், அந்நிய வர்த்தகர்களுக்கு எதிரான பகையுணர்வும், மண்ணின் மைந்தர் என்ற மனோபாவமும், தொடர்ச்சியான விசனமுமே கடந்த நூற்றாண்டின் முடிவில் 'இலங்கை தேசியம்' என்ற குரலாக மாற்றம் பெற்றது. 'சிங்களவர்கள் பிசாசுக்கும் ஆழமான கடலுக்குமிடையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் செல்வதற்கு எந்த பூமியும் இந்த உலகில் இல்லை. அவர்களுக்கு உலகில் நிலைத்திருக்கும் எந்த இனம், நாட்டுடனும், இன ரீதியான உறவுகளும் இல்லை.'

கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக, சிறிய - மத்தியதர மக்களிடையே அடிப்படையில் உருவாக்கப்பட்ட விரோதப்போக்கின் கொள்கையையே அப்போது காணப்பட்டதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான விரோதப்போக்கு, சில சந்தர்ப்பங்களில் மிக செல்வாக்குள்ள கொள்கையாக மாற்றம் பெற்று, சமூகத்தில் ஏனைய பிரிவினரையும் கவரத் தொடங்கியது. பல தரப்பட்ட இனங்களுக்கிடையே ஐக்கியமும், கூட்டுப்பொறுப்பும் கட்டி எழுப்பப்படுவதற்கு மாற்றமாக, இலங்கையில் தொழிலாளர் வர்க்கமும் சிங்கள பௌத்த தீவிரவாத கருத்துக்களுக்கு உள்வாங்கப்பட்டது.

சிங்கள பௌத்த கோட்பாட்டின் செல்வாக்கு

அநகாரிக தர்மபாலாவினதும், ஏனையவர்களினதும் தனித்துவமான 'சிங்கள பௌத்த கோட்பாடு, குடியேற்ற ஆட்சியின் உச்சக்கட்டத்திலிருந்து 1970ன் இறுதிக் காலம்வரை சிங்கள மக்களிடையே மிகவும் செல்வாக்கு செலுத்திய கோட்பாடாக தொடர்ந்து பரிணமித்து வந்தது. அதன் அதீத தாக்கம் சிங்கள பௌத்த மக்களின் அனைத்து பிரிவினரிலும் மட்டுமன்றி, தென்னிலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளிலும் தாக்கம் செலுத்தியது. அதற்கு மேலதிகமாக சிங்கள பௌத்த மேலாதிக்கம், 1972, 1978ல் உருவாக்கப்பட்ட இண்டு அரசியலமைப்பு சாசனங்கள் மூலமும் சட்ட அந்தஸ்தை பெற்றுக் கொண்டது. இதன் மூலம் இலங்கை 'சிங்கள தீப', 'தர்மதீப' என்ற அரசியலமைப்பு நாமத்துடன் பௌத்தத்தை பாதுகாப்பதற்கான தீவாக உறுதிப்படுத்தப்பட்டது.

1970 லும் 1980ன் ஆரம்ப பிரிவிலும் சிங்கள பௌத்தர்களின் எல்லா இனக்குழுமத்தினரிடமும் வேண்டுகோள் விடுக்கக்கூடிய வகையிலான - இனவாத நிகழ்ச்சி நிரலுடனான - பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இப்பிரச்சாரத்துக்கேற்ற நூல்களும், துண்டுப்பிரசுரங்களும், ஊடக அறிக்கைகளும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தது. பல சிங்களப் பத்திரிகைகள் தமது முக்கிய செய்தியாக இவ்விடயத்தையே தொடர்ந்து எழுதி வந்தது. இப்பிரசுர வேலைகளில் பௌத்த துறவிகளும் மிகவும் ஈடுபாடு காட்டி வந்தார்கள். இந்த 'சிங்கள பௌத்த சிலுவைப் போரி'ல் சிங்கள பௌத்த சமூகம் பெரிதும் அக்கறை செலுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு தொல்பொருளியல் பிரச்சாரம்

இந்தப் பிரச்சாரங்களில் சிங்கள பௌத்த மக்களிடையே ஓரளவு தாக்கம் செலுத்திய பிரச்சாரம், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த புனிதஸ்தலங்களும், பௌத்த விகாரைகளும் பற்றிய பிரச்சாரமாகும். இந்த புனித ஸ்தலங்களை பாதுகாப்பதற்காக சிங்கள பௌத்தர்கள். 'புனிதப்போர்' (தர்ம யுத்தய) மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

1981ல் வெளியிடப்பட்ட 'சிங்களுனி புது சசுன பெர கெனிவ்' என்ற சிங்களப் பிரசுரம் பின்வருமாறு கூறியது.

'சிங்கள மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் ரஜரட்ட ராஜதானியோடு இணைந்திருந்த இலங்கையின் வடக்கிலுள்ள பௌத்த புனிதத்தலங்களும், 'றுகுனு ராஜதானி' எனப்படும் பூர்வீக ராஜதானியோடு இணைந்திருந்த கிழக்கு மாகாண பௌத்த புனிதத்தலங்களும் இப்போது (அந்நியர்களால்) அழிக்கப்படும் பயங்கர பேராபத்தில் உள்ளது. இந்த அழிவுக்கு நாம் தொடர்ந்து அனுமதியளித்தால், அல்லது எமது சுயநல அபிலாசைகளுக்காக நாம் கண்ணை மூடிக்கொண்டிருந்தால், சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரான அந்நியர்களின் திட்டங்களுக்கு நாமே இடமளிப்பது மட்டுமன்றி, இந்தப் பிரதேசங்களில் காணப்படும் சிங்கள பௌத்த கலாசாரத்தின் எச்சங்களை, அடையாளங்களை அழித்தொழிப்பதற்கு இடமளித்தவர்களாவோம்' என எழுதப்பட்டிருந்தது.

இத்தகைய இனவாதக் கருத்துக்கள் இலங்கைத் தமிழர்களின் 'இனத்துக்குரிய தாய் நாடு' (வுசயனவைழையெட ர்ழஅந டுயனெ) என்ற கோஷத்துக்கு மறுப்புத் தெரிவிப்பதற்கு மட்டுமன்றி, அதன் தொடர்ச்சியாக நாட்டைப் பிரிப்பதற்கான எச்சரிக்கையையும் பௌத்தர்களுக்கு விடுத்திருந்தது.

1970ல் வெளியிடப்பட்ட 'சிங்களயாகே அதிசி ஹதுர' (சிங்களவர்களின் மறைமுக எதிரி) என்ற பிரசுரித்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

'இந்த இலங்கை சிங்களவர்கள், தமிழர்களுக்குரிய இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டால், காடுகளால் சூழப்படாத சேருவில, தீகவாபி, கிரிவிகாரை, நாகதீப போன்ற பௌத்த புனிதத்தலங்கள் அனைத்தும், தமிழர்களின் கைகளுக்கு சென்றுவிடும்' என்று எழுதப்பட்டது.

இவ்வாறு சிறுபான்மையினருக்கு எதிரான பல்வேறு எதிர்ப்பலைகளும் கோஷங்களும், பிரச்சாரங்களும் காலனித்துவ ஆட்சிக்காலத்திலிருந்தே ஒரு சில சிங்கள பௌத்த இனவாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தது. இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் இத்துவேஷக்கருத்துக்கள் 1970, 1980 களில் மீண்டும் புத்துயிர் பெற்றது. சிறுபான்மையினருக்கு எதிரான இவ்வினவாதிகளின் போராட்டங்களாலும், பிரச்சாரங்களாலும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகமும் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. அநகாரிக தர்மபாலாவும், அவரோடு இணைந்த சிலருமே இவ்வினவாத கருத்துக்களின் பிதா மகன்களாகக் காணப்பட்டார்கள். அவர்கள் ஏற்றி வைத்த இனவாதத்தீயே இன்றும் இந்நாட்டில் வேறு வடிவத்தில் எரிந்து கொண்டிருப்பதை வரலாறு எமக்கு நிதர்சனமாகக் காண்பிக்கின்றது.

மேற்கண்ட சம்பவங்கள், வெளியீடுகளிலிருந்து இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பௌத்த மக்களின் வெறுப்பும், சந்தேகங்களும் தோன்றுவதற்கு ஆரம்ப அடிப்படையாக அமைந்தது, வர்த்தகத்தில் ஏற்பட்ட போட்டியும் பொறாமையுமே என்பது தெளிவாகின்றது. குறிப்பாக இலங்கையின் தலைநகராக விளங்கிய கொழும்பின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக இடமாக ஐரோப்பியர் ஆட்சிக்காலத்திலிருந்து விளங்கிய புறக்கோட்டையில் (Pநவவயா) முஸ்லிம்களுக்கு எண்ணிக்கையில் கூடுதலான வியாபார நிலையங்கள் காணப்பட்டன. சிங்கள பௌத்த மக்களின் சமூக, சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராகவும், ஒரு தேசிய வீரராகவும் இன்றுவரை கொண்டாடப்படும் அநகாரிக தர்மபாலாவின் தந்தையான ர்.டொன் கரோலிஸ் என்பவருக்கும் புறக்கோட்டையில் வியாபார நிறுவனம் ஒன்று இருந்து வந்ததால், அநகாரிக தர்மபாலாவுக்கோ, அவரது தந்தைக்கோ, முஸ்லிம்களின்பால் ஒருவித வெறுப்பும், போட்டியும், பொறாமையும் ஏற்பட்டதில் வியப்பேதுமில்லை.

'அந்நிய வியாபாரிகள்' என சிங்கள பௌத்தர்கள் அடையாளப்படுத்தியிருந்தவர்கள் பல மதத்தவர்கள், இனத்தவர்கள் நாட்டில் இருந்த போதும் அநகாரிக தர்மபாலாவின் விரோதக் கருத்துக்களில் அதிகமானவை, முஸ்லிம்களை நோக்கியே தெரிவிக்கப்பட்டவையாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான மிக மோசமான தாக்குதல்களால், பிரித்தானிய நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களில் அநேகர் அநகாரிக தர்மபாலாவின் உறவினர்கள் என்பதும் தெளிவான வரலாறாகும்

அநகாரிக தர்மபாலாவும், அவர் போன்ற சிலரினதும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களும், விரோத உணர்வுகளும் இன்றுவரை சிங்கள - பௌத்த மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவர்கள் அன்று முஸ்லிம்களுக்கு எதிராக என்னென்ன குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்களோ, அக்குற்றச்சாட்டுக்களில் அதிகமானவை இன்றுவரை இந்நாட்டில் பரந்து வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வருகின்றன. பொதுபலசேனா, ராவணாபலய, சிங்கலே, ஹெல உருமய, போன்ற பேரினவாத இயக்கங்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கும் பல்வேறு குற்றச்சாட்டுக்களும், பொதுவாக இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களும், ஆரம்பகால குற்றச்சாட்டுக்களிலிருந்து பெரிய வேறுபாட்டை எமக்குக் காண்பிக்கவில்லை.

அண்மைக்காலத்தில் இலங்கை சிறுபான்மை மக்களின் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ள தொல்பொருளியல் செயலணிக்கான மூலவேரும் அன்றே நடப்பட்டுள்ளது தெளிவாகின்றது. அன்று முன்மொழியப்பட்ட குற்றச்சாட்டுக்கள், இன்று சற்று விரிவடைந்து அபாயா, ஹலால் பிரச்சினை, அறபு மொழி, மத்ரஸாக் கல்வி, காளி நீதிமன்றம், என்ற பல்வேறு துறைகளில் கால் பதித்துள்ளதை மிகத் தெளிவாக நாம் அறிந்து கொள்ளலாம்.

இறைவனே எல்லாவற்றிற்கும் பொறுப்பானவன், மிக அறிந்தவன்.


1 கருத்துரைகள்:

முக்கியமான கட்டுரை. அநகாரிக தர்மபால கால சிங்கள பேரின வாதிகள் வைத்த குற்றச்சாட்டுகள் இன்றும் வைக்கபடுகின்றன என்கிற கூற்றில் உண்மையுள்ளது. எனினும் போரின்போது தழருக்கு எதிராக முஸ்லிம்களை கிளப்புவது என மாறியுள்ளது. போரின்பின் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழரைக் கிழப்புவது என மாறியுள்ளது. 1970 -1980 காலக் கட்டத்தில் அரேபியா மற்றும் மத்திய கிழக்கில் வேலைசெய்கிற வர்களைப்பார்த்தும் அவர்கள் வரவால் திரும்பி வரும்போது பாரம்பரிய முஸ்லிம் அடையாளங்கள் மாற ஆரம்பித்ததை பார்த்தும் வன்மம் பேசினர். இப்ப தமிழரோடு பேசும்போது பிறப்புவீதம் குடிசன வளச்சி மாறுபாடு போன்றவற்றை மையப்படுத்துகிறார்கள்.

Post a comment