Header Ads



விரக்தியுற்றிருக்கும் UNP ஆதரவாளர்கள் ஜனாதிபதிக்கு நிலையான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்க முன்வந்துள்ளனர்

(ஐ.ஏ. காதிர் கான்)

எமது உரிமைகளையும் தேவைகளையும் உரிமையுடன் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியுடன் இணைந்து செயற்படுவதே புத்தி சாதுரியமாகும் என, கண்டி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.

உடுநுவர தொகுதியில் உள்ள மக்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிகையில், ,இம்முறை பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன பெரும்பான்மை வாக்குப் பலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாக உள்ளது. இதனை யாராலும் தடுக்க முடியாது. தற்போது, பொருளாதாரத்தை முன்னேற்றும் திட்டங்களை வகுத்தே பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது. தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமையை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகக் காணப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பொதுஜன பெரமுன வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் முழுமையாக்கப்பட வேண்டும். ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்தும் அரசாங்கம் ஒன்று தோற்றம் பெற வேண்டும் என்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட கட்சி பாராளுமன்றத்தில் நிலையான அரசாங்கம் அமைப்பது அவசியமாகும்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால். எதிர்க்கட்சித்தலைவர் பதவியைக் கூட ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது அதிலிருந்து பிரிந்து சென்றுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கோ பாதுகாத்துக்கொள்ள முடியுமாகுமா என்ற சந்தேகம் எழுகின்றது. இதேவேளை, நாட்டில் நிலையான அரசாங்கம் ஒன்று அமையாவிட்டால், நாடு தொடர்ந்தும் பின் தள்ளப்படும் அபாயம் உள்ளது. அந்த நிலைமையை ஏற்படுத்துவதற்கு யாரும் விரும்ப மாட்டார்கள்.  அதனால், விரக்தியுற்றிருக்கும் ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் மத்தியஸ்த நிலையில் இருப்பவர்கள் இம்முறை ஜனாதிபதிக்கு நிலையான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்கவிருக்கறார்கள் என்பதே உண்மை.

பொதுத்தேர்தலில் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்பவர்களைக் கொண்ட அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலமே, அவரின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லலாம். அதற்காகவே, நிலையான அரசாங்கம் ஒன்று தேவை என்பதை இங்கு உணர்த்துகின்றேன். பெரும்பான்மையைக்கொண்ட அராங்கம் ஒன்றை அமைத்துக்கொண்டால், ஜனாதிபதியின் திட்டங்களைத் தொடர்ந்தும் கொண்டு செல்லலாம். ஆகவே, நாங்கள் பலமான அரசாங்கம் ஒன்றை அமைப்போம். அதன் மூலம் எங்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை பெற்றுக்கொள்வோம்.

( ஐ.ஏ. காதிர் கான் )

No comments

Powered by Blogger.