Header Ads



யார் அழைப்பு விடுத்தாலும் உங்களது பாதுகாப்பை, உறுதி செய்தபின் வீட்டை விட்டு செல்லுங்கள்

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் கட்ட அலையின் ஆரம்பத்தில் இலங்கை இருப்பதாக தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, வைரஸ் பரவல் அதிகரித்தாலும் அரசாங்கத்தின் பொதுத் தேர்தலை நடத்தும் கொள்கையில் மாற்றம் ஏற்படாது, அதனால் நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் காணொளியொன்றை பதிவிட்டுள்ள அவர் , அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்பில் எதிர்கட்சி என்ற வகையில் அரசாங்கத்திற்கு பல தடவை எச்சரிக்கை விடுத்து வந்த போதிலும் , அவர்களது முறையற்ற செயற்பாடுகளினால் வைரஸ் பரவலின் இரண்டாம் அலைக்கும் நாம் முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று வரையில் 2500 க்கும் அதிகமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , இது மேலும் அதிகரிப்பதற்கும் வாய்ப்புள்ளது.

வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டால் , அது தொடர்பான செயற்பாடுகளுக்கு அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை என்று சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஆனால் கொரோனா நிதியத்துக்கு சர்வதேசத்தில் மற்றுமன்றி எமது நாட்டைச் சேர்ந்த பலராலும் நிதி வழங்கப்பட்டது. இந்த நிதிக்கு என்ன நடந்தது என்று நாங்கள் பலதடவைகள் அரசாங்கத்திடம் வினவியபோதும் இதுவரையில் அவர்கள் அதற்கான பதிலை வழங்கவில்லை.

இவ்வாறான நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தங்களது உயிர்மீது கூட அக்கறை கொள்ளாமல் செயற்பட்டு வரும் வைத்திய பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு எங்களது கௌரவத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுபாட்டுக்குள் வரும் வரையில் தேர்தலை நடத்த வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வந்த போது , ஆளும் தரப்பினர் நாங்கள் தேர்தலுக்கு பயந்தே இவ்வாறு கூறுவதாக தெரிவித்து வந்தனர்.

நாங்கள் தேர்தலுக்கு எப்போது என்றாலும் முகங்கொடுக்க தயாராகவே இருக்கின்றோம். ஆனால் நாட்டு மக்களின் வாழ்கையை சவாலுக்குட்படுத்தி தேர்தலை வெற்றிக் கொள்ள வேண்டிய தேவை எமக்கில்லை.

தற்போது மீண்டும் வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்தும் வரையில் இதே நிலைபாட்டில்தான் இருக்கும் என்றே நாங்கள் எண்ணுகின்றோம்.

நாம் அரசியல் செயற்பாடுகள் மற்றும் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுப்பட வேண்டும்தான். ஆனால் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

அரச வைத்திய சங்கத்தினரும் அரசாங்கம் வைரஸ் பரவல் தொடர்பான உண்மை நிலையை ஏன் மக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருக்கின்றது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் நாங்கள் தேர்தலை வெற்றிக் கொள்வதற்காக நாட்டு மக்களை முகக்கவசம் அணிந்து , பேரணியில் நிற்கச் செய்வது நியாயமற்ற செயலாகும்.

இதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பை உறுதிச் செய்துக் கொள்ள வேண்டும். அதனால் யார் உங்களுக்கு அழைப்பு விடுத்தாலும் , உங்களது பாதுகாப்பை உறுதி செய்ததன் பின்னர் வீட்டை விட்டு செல்லுங்கள்.

No comments

Powered by Blogger.