Header Ads



சரணடைந்த பொலிஸ் பரிசோதகர் வசந்தகுமார, பயங்கர்வாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை

(எம்.எப்.எம்.பஸீர்)

 போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து , கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்களுக்கே மீள விற்பனை செய்ததாக கூறப்பட்ட விடயத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் கும்பலுக்கு தலைமை வகித்ததாக கூறப்பட்டு தேடப்பட்டு வந்த பொலிஸ் பரிசோதகர் வெஹரவத்த கங்கானம்லாகே சமன் வசந்த குமார கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் அவர் கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தை தொடர்ந்து, இவ்வாறு கடவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள 49 வயதான கம்பஹா - வெலிவேரிய பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிஸ் பரிசோதகர் தற்போது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  இவரது கைதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. அதில் மூவர் சிவிலியன்கள் என்பதுடன் ஏனைய 17 பேரும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்களாவர்.

இதில்  பொலிஸ் பரிசோதகர் விமலசேன லயனல், உப பொலிஸ் பரிசோதகர்களான  கயான் தரங்க பிரேமரத்ன சில்வா,  அத்துல ஜயந்த பண்டார,  பொலிஸ் சார்ஜன்களான  சமிந்த லக்ஷ்மன் ஜயதிலக,  சமன் குமார ஜயசிங்க,  சமில பிரசாத் வதுகார,  பொலிஸ் கான்ஸ்டபிள்களான  பிரியங்கர ஜயசேன,  ருவன் புஷ்பகுமார,  அசங்க இந்ரஜித் ரத்துகமகே,  சமீர பிரதீப் குமார,  லக்ஷான் சமீர வன்னியாரச்சி,  லலித் ஜயசிங்க ஆகிய 12 பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள்,  விஷ போதைப் பொருள் மற்றும் அபின்,  அபாயகரமான ஒளதடங்கள் சட்டத்தின் 80 ஆவது அத்தியாயத்தின் கீழ்,  இன்று 8 ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஏனைய மூன்று சிவிலியன்கலும்,  உப பொலிஸ் பரிசோதகர்  உதார பிரேமசிறி,  சார்ஜன்களான  தனுக்க, வீரசிங்க மற்றும் கான்ச்டபிள்  ரத்நாயக்க  ஆகியோரும் இன்று கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் சமன் வசந்த குமாரவும்  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

 சந்தேக நபர்களிடம், போதைப் பொருள் கடத்தல், பாதாள உலக உறுப்பினர்களுடனான தொடர்புகள், கொலைகள் மற்றும் அதற்கான உதவி ஒத்தாசை, சட்ட விரோத ஆயுத பயன்பாடு, கருப்புப் பண சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி.யினர் கூறினர். சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்க, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் அகையோரின் மேர்பார்வையில் விஷேட விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் மெரில் ரஞ்சன்  லமாஹேவாவின் ஆலோசனையின் கீழ், விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  லலித்த திஸாநாயக்க, பிரதான பொலிஸ் பரிசோதகர் மாதவ உள்ளிட்ட குழுவினரால் இந்த விடயத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 குறிப்பாக இன்று கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகரே, பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மோசடிகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் கும்பலுக்கு தலைமை வகித்துள்ளதாக பொலிஸார் கூறினர். அவரைக் கைது செய்ய சி.ஐ.டி. தேடி வந்த நிலையில்  தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், நேற்று காலை அவரைக் கைது செய்ய பொலிசார் பொது மக்கலின் உதவியையும் கோரினர். இவ்வாறான பின்னனியிலேயே அவர் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.