Header Ads



ஜனாதிபதிக்கு மக்களின் சிறப்பான வரவேற்பு - போதைப்பொருளை ஒழிக்க வேண்டுகோள்.


குடிசை வாழ்க்கையினால் அவதியுற்றிருந்த தமக்கு தொடர்மாடி வீடுகளை பெற்றுத் தந்ததுபோல் போதைப்பொருளையும் நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, பிள்ளைகளின் எதிர்காலத்தை காப்பாற்றித் தருமாறு மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். 

போதைப்பொருள் பாவனையின் காரணமாக பாடசாலை மாணவர்கள் முதல் பெரியோர்கள் வரை பல உயிர்கள் பலியாகின்றன. இது தாம் முகங்கொடுக்கும் பாரிய பிரச்சினையாக உள்ளதென மட்டக்குளி பிரதேச மக்கள் தெரிவித்தனர். அதனை ஒழிக்கக்கூடிய தலைவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் மேல் தாம் பலமான நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

பொதுஜன பெரமுனவின் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இன்று (09) பிற்பகல் கொழும்பு மாவட்டத்தில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள், மட்டக்குளி காக்கைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்றபோதே பொதுமக்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். அநுர பெர்ணான்டோ அவர்களினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மீதமுள்ள குடிசைகளையும் அகற்றி வீடுகளை கட்டித் தருமாறு மக்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர். 2015ல் இடை நிறுத்தப்பட்ட அபிவிருத்தியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பலமான அரசாங்கம் ஒன்றை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டார். அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தார். 

பிரேம்நாத் சி.தொலவத்த அவர்கள் கொழும்பு ஹைட் மைதானத்திலும் முன்னாள் இராஜங்க அமைச்சர் திலங்க சுமதிபால விகாரமாதேவி பூங்காவிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார். பின்னடைவுக்குட்பட்டுள்ள நாட்டை மீண்டும் அபிவிருத்திப் பாதையில் பயணிக்க செய்து சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடொன்றை கட்டியெழுப்புமாறு மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டார்கள். 

முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாரஹேன்பிட்ட தாபரே மாவத்தையிலும் சரத் வீரசேகர தெமட்டகொட பிரதேசத்திலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டை கட்டியெழுப்புவதற்கு பலமான பாராளுமன்றம் ஒன்றை தமக்கு பெற்றுத் தருமாறு வருகை தந்திருந்த மக்களிடம் கேட்டுக்கொண்டார். 

கொலன்னாவ பிரதேசத்தில் நீண்டகாலமாக ஒரு குறையாக காணப்படுகின்ற பிரதேச சுகாதார வைத்திய சேவை நிலையமொன்றை பெற்றுத் தருமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு ஜனாதிபதி அவர்கள் சாதகமாக பதிலளித்தார். அஜித் சுபசிங்க அவர்கள் கொலன்னாவ பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பங்கேற்ற சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி அவர்களிடம் இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  

ஜனாதிபதி அவர்களுடன் புகைப்படம் ஒன்றை எடுப்பதற்கான சந்தர்ப்பத்தை தனக்கு தருமாறு கேட்டுக்கொண்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், அதனையும் நிறைவேற்றினார். சிறுமியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், அச்சிறுமி பூரண சுகமடையவும் பிரார்த்தனை செய்தார்.

உதய கம்பன்பில அவர்கள் பத்தரமுல்ல தியத்த உயன முன்னாலும் முன்னாள் அமைச்சர் விமல்வீரவங்ச புத்ததாச விளையாட்டரங்கிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புக்களில் பங்குகொண்ட  ஜனாதிபதி அவர்களுக்கு கூடியிருந்த மக்கள் அமோக வரவேற்பளித்தனர். 

மகாசங்கத்தினர் உள்ளிட்ட ஏனைய மதத் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர் .


மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.07.09

No comments

Powered by Blogger.