Header Ads



புளி விதை சுவாசக்குழாயில் சிக்கி மரணித்தவரை, கொரோனாவால் மரணித்தாரென என தகனத்திற்கு உத்தரவு

- மெட்றோ -

சிலாபம் வெல்ல தாலடி பிரதேசத்தில் கொரோனா சட்ட விதிகளை மீறி சடலம் ஒன்றை ஒருநாள் தாமதமாகி தகனம் செய்தமை தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவிக்கு எதிராக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிலாபம் வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சிலாபம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய உயிரிழந்தவரான சிலாபம் வெல்ல தாலடி எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் சுவாசிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அன்றைய தினமே சடலம் தொடர்பில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின்போது இரண்டு புளி விதைகள் சுவாசக் குழாயில் சிக்கியதால் ஏற்பட்ட மரணம் என தெரிய வந்துள்ளது.

எனினும் கோவிட் – 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உயிரிழந்தவரின் உயிரியல் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதுடன் சடலத்தை இரண்டு மணி நேரத்துக்குள் தகனம் செய்ய வேண்டும் என திடீர் மரண விசாரணை அதிகாரி உறவினர்களுக்கு உத்தரவிட்டு சடலத்தை ஒப்படைத்திருந்துள்ளார்.

எனினும் இந்த உத்தரவை மீறி உறவினர்கள் சடலத்தை மறுநாளே தகனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் சிலாபம் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.