July 18, 2020

சரணாகதி அரசியலா..? தன்மானத்துடன் மனிதத்தை வழவைக்கும் அரசியலா..??

(ஏ.எம்.ஆரிப்)

சிறுபான்மைச் சமூகத்தை அடக்கியாளும் நாடுகளில் அமைதியான வாழ்வையும் முன்னேற்றத்தையும் காண்பதரிது. நமது நாடு சிங்கப்பூர்  மலேசியா போன்ற நாடுகள் போன்று வரவேண்டும் எனில் தம்மோடு வாழும் சமூகத்தையும் சமமாகப் பார்க்க வேண்டும்; மாறாக தம்மை ஆள்வோராகவும் சிறுபான்மையினரை ஆளப்படுவோராகவும் பார்க்கக் கூடாது.

அப்போதுதான் நாட்டில் மனிதாபிமான வாழ்வு நிலையையும் அதனூடே பொருளாதார முன்னேற்றத்தையும் ஒற்றுமையாக கட்டியெழுப்பி வளர்ச்சியடைய முடியும்.நாம் சமத்துவமானவர்களா அல்லது ஆளப்படும் சமூகமா என்பதை நமக்குள் நாமே கேட்க வேண்டும்.                                       பன்மைத்துவத்தை ஒழித்து ஐக்கியத்தை ஏற்படுத்த ஒரு காலத்தில் தீர்வு முயற்சிகள் அரச மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன பின்னர் அது தோல்வியடைந்த வழி முறையாக காணப்பட்ட போது பன்மைத்துவத்தை அங்கீகரித்த நிலையில் ஒற்றுமை அடிப்படையில் ஐக்கியத்தை உருவாக்கும் நோக்கில் பிற்கால அணுகுமுறைகள் அமைந்தன.

இக்காலப்பகுதியில் ஓரளவு அமைதி நிலவின.அதன்பின் நம்பிக்கையீனங்களும் விட்டுக்கொடுப்புகளும் இல்லாமல் போன போது போர் மீள இடம்பெற்று அதன் மூலம் அடையப்பெற்ற நிலை பன்மைத்துவத்தை மறுதலித்து மீளவும் பன்மைத்துவத்தை சவாலுக்கு உட்படுத்திய அணுகுமுறைகளில் நம்பிக்கை வளர்க்கப்பட்டு வருவதைக் காணலாம். அது ஓர் அறிவார்ந்த நிலை அல்ல என்பதால் அதனை சீர்செய்து பல்லினங்களின் மனங்களிலும் இடம்பிடிக்கும் வகையில் நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுத் தேர்தல் பன்மைத்துவ சிந்தனையை பிரதிபலிக்க கூடிய பல்முனை போட்டி என்பதால் இருமுனைப் போட்டியான ஜனாதிபதி தேர்தல் முறையிலிருந்தும் மாறுபட்டது எனலாம். எனவே அரசாங்கத்திலும் பன்மைத்துவம் என்பது தவிர்க்க முடியாததொன்றாகவே இருக்க அதிக வாய்ப்புண்டு.

அவ்வாறான தேவை எழாவிட்டாலும் சர்வதேச ரீதியாக பன்மைத்துவத்தை பற்றிய கேள்விகள் எழும்.அதாவது பன்மைத்துவம் தோல்வி அடைந்த ஓர்  அரசாங்கம் என்ற நிலையில் சர்வதேச பார்வைக்கு உட்படலாம். நாம் மனிதாபிமானத்தை நேசிக்கின்றவர்களாக இருந்தால் ஆண்டான் அடிமை நிலையை வெறுக்கின்ற நியாயமான மனோநிலைய உடையவர்களாக இருந்தால் சரணாகதி அரசியலை சரிகாணமாட்டோம்.இவ்வாறு சொல்வதன் பொருள் பெரும்பான்மையினருடன் எப்போதும் முரண்படுவதென்பதல்ல ; மாறாக அடக்குமுறைச் சிந்தனை அரசியல் ரீதியாக கட்டமைக்கப்படும் போது அதற்கு எதிப்புக் காட்டாது இணங்கிப் போய் சரி செய்ய முற்படுவோம் என்று தற்காலத்தில் சிலரால் முன்வைக்கப்படும் மனிதகுல நியமங்ளுக்கு மாறான சிந்தனையை மனங்களிலிருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் இதன் மூலம் நாடப்படுவது.ஒருவன் ஒரு பெண்ணைக் கற்பழித்து கொலை செய்துள்ளான். 

ஒருவன் சொல்கிறான் அப்பெண் அவனுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் இப்படி கொலை செய்யப்பட்டிருக்கப்படமாட்டாள் என. இதே போன்றுதான் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான அடக்குமுறைகளின் போது கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறை இருக்கவேண்டும் என அவ்வாறான சிலர் சொல்கிறார்கள்போலும். இது மனிதாபிமானத்திற்கும் சட்டத்திற்கும் எதிரான அணுகுமுறை என்பதே நேர்மையாகச் சிந்திக்கின்ற எந்த இனத்தினைச் சேர்ந்த மனிதனினதும் புரிதலாக  இருக்க முடியும்.முஸ்லிம்களே நாம் இந்த நாட்டின் இரண்டாம்தர பிரஜைகளல்ல சமத்துவமான பிரஜைகள்தான் என்பதை உணருங்கள்.அப்போதுதான் உங்கள் அணுகுமுறையும் மனித உரிமைகளின் அடிப்படையில் மாறும்." மனிதன் எங்கும் சுதந்திரமாகவே பிறக்கிறான் ஆனால் எங்கும் அடிமைத்தளைகளால் விலங்கிடப்பட்டிருக்கிறான் " என லஸ்கி என்ற அறிஞன் குறிப்பிட்டுள்ளான்.

அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிமைப்பட வேண்டுமென போதிக்கப்பட்ட சமூகம் சரணாகதி அரசியலில் நல்வாழ்வைத் தேடுவதா அல்லது மனித உரிமைகளைப் பறிகொடுக்காமல் தன்மானத்துடன் அரசியலில் பயணித்து சமூகத்தையும் மனிதத்துவத்தையும் வாழ வைப்பதா என்பதை சிந்திக்க வேண்டும்.

0 கருத்துரைகள்:

Post a comment