Header Ads



தேர்தல் முடியும்வரை ரிஷாத் கைது செய்யப்படவோ, பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்படவோ மாட்டார்...??

சுகாதார கட்டமைப்பை பின்பற்றுவது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டால் மட்டுமே தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும், அரசாங்கத்திடம் வலியுறுத்தியும் யார் வர்த்தமானி வெளியிடப்படுவதை தடுத்துக்கொண்டுள்ளனர் என தெரியவில்லை என அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை தேர்தல்கள் ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று காலை தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்றது. கொவிட் -19 நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது மற்றும் வாக்குச்சாவடி கட்டமைப்பு, வாக்கெண்ணும் செயற்பாடுகள் மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி எவ்வாறு செயற்படுவது என்ற காரணிகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் அரசியல் கட்சி செயலாளர்களிடம் தெளிவுபடுத்தியிருந்தனர்.

குறிப்பாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது குறித்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் இன்னமும் வெளியிடாது உள்ள நிலையில் ஒரு சில தினங்களில் வர்த்தமானியை வெளியிடுவதாக அரசாங்கம் கூறியுள்ளதாகும், இதில் யார் வர்த்தமானியை தடுத்து வைத்துள்ளனர் என்பது தெரியவில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டால் மட்டுமே தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும், சுகாதார வழிமுறைகள் கொண்டே தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியும் ஆகவே இதில் அரசாங்கம்  கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியாகும், இதில் தேர்தல்கள் ஆணைக்குழு எந்தவித தவறுகளும் செய்யவில்லை, எனினும் ஐக்கிய மக்கள் சக்தியை சட்ட விரோதமாக பதிவு செய்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பதையும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இன்றுடன் தபால் மூல வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில் வழங்கப்பட்ட திகதிகளில் தபால்மூல வாக்களிப்பை பதிவு செய்யாதவர்களுக்கு மீண்டும் 20,21 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் எனவும் அவ்வாறு குறித்த தினங்களில் வாக்களிக்க தவறினால் எதிர்வரும் நான்காம் திகதி வரையிலான காலப்பகுதியில் உரிய நபர்கள் தமது பிரதேசங்களுக்கு சென்று மாவட்ட செயலகத்தில் தமது தபால் மூல வாக்களிப்பை செலுத்த முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் பிரசாரங்களை முறையாக செய்ய முடியாதுள்ள காரணத்தினால் தமது இலக்கங்களை காட்சிப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்க வேண்டும் என கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தனர். எனினும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அதற்கு அனுமதிக்க முடியாது என ஆணைக்குழு உறுதியாக அறிவித்துள்ளது. இந்த விடயத்தில் ஒரு சிலர் உறுப்பினர்கள் ஆணைக்குழுவுடன் முரண்பட்டனர். குறிப்பாக தயாசிறி ஜெயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவின் கருத்தினை ஏற்றுகொள்ள முடியாது என கூறி இடை நடுவே வெளியேறியுள்ளார்.

அதேபோல் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது புகார் ஒன்றினை முன்வைத்திருந்தார். விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழர்களின் வாக்குகளை பதிவு செய்ய விடாது ராஜபக் ஷக்களின் அரசாங்கத்திற்கு சாதகமாக ஆட்சியை திருப்பியதை போல இம்முறை சம்பந்தனின் பின்னால் புலிகள் இயங்கிகொண்டு தமிழர்களின் வாக்குகளை தடுக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாக கூறியிருந்தார். இதனை ஆணைக்குழுவோ மற்ற கட்சியினரோ பெரிதாக கவனத்தில் கொள்ளவில்லை, எனினும் ஆனந்த சங்கரி கூட்டம் முடிந்த பின்னரும் இதே காரணத்தை கூறி தேசிய ரீதியிலான பிரச்சினைக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என கூறியபடி சென்றிருந்தார்.  

அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தொடர்ச்சியாக பொலிசாரின் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனால் தன்னால் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லை என்ற முறைப்பாட்டை தேர்தல்கள் ஆணைகுழுவிடம் முன்வைத்திருந்தார். இன் நிலையில் அது  ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ரவி கருணாநாயகவிற்கும் அதே நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியதை அடுத்து தேர்தல் முடிவும் வரையில் எவரையும் பொலிஸ் விசாரணைக்கு அழைக்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக கூறியதை அடுத்து சகல கட்சிகளின் உறுப்பினர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். 

(ஆர்.யசி)

No comments

Powered by Blogger.