Header Ads



நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் 40 ஆயிரம் இலங்கையர்கள் - காத்திருக்க வேண்டிய நிலை

வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் தற்போது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மீண்டும் நாடு திரும்ப முடியாமை, விசா காலம் நிறைவடைந்துள்ளமை, சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை, தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை, தொழிலை இழந்துள்ளமை என பல்வேறு சிக்கல்களை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வாறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளவர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் நேற்று (14) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த தீர்மானத்தினால் மத்திய கிழக்கு, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மீள நாடு திரும்ப எதிர்பார்த்திருந்த இலங்கையர்கள் பலருக்கு தொடர்ந்தும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வௌிநாட்டிற்கு சென்றிருந்தவர்கள் 20 இலட்சமாக பதிவாகியிருந்தனர்.

தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வௌிநாடுகளுக்கு சென்றிருந்தவர்களில் பலர் தொற்று ஆரம்பமான காலப்பகுதியிலேயே நாடு திரும்பினர்.

74 நாடுகளைச் சேர்ந்த 16,456 பேர் நேற்று வரையில் நாடு திரும்பியுள்ளனர்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளுக்கு அமைய, நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் 40 ஆயிரம் பேர் உள்ளமை தெரியவந்துள்ளது.

வௌிநாடுகளில் உள்ளவர்களின் ஒரே சவாலாக நாடு திரும்புதல் காணப்படுகிறது.

இதேவேளை, பலருக்கான தொழில் ஒப்பந்தக்காலமும் நிறைவடைந்துள்ளது.

வௌிநாடுகளில் உள்ளவர்களில் 35 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இவர்களுக்கு தலா 06 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் எம்.வீ சந்திரசேகர குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.