Header Ads



கைது செய்யப்படுவாரா ரிஷாத்..? 4 ஆம் மாடியில், 9 மணிநேரம் தீவிர விசாரணை

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனயவுத் திணைக்களம் சுமார் 10 மணி நேர நீண்ட விசாரணைகளை இன்று -09- முன்னடுத்தது.  உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள் விவகாரம் தொடர்பிலேயே ரிஷாத் பதியுதீன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

இன்று முற்பகல் 10.00 மணிக்கு கோட்டையில் உள்ள சி.ஐ.டி.யின் தலைமையகமான 4 ஆம் மாடிக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவரிடம் இரவு 7.45 மணி வரை விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டது.  அதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் 8 இடங்களில் நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்து இடம்பெறும் விசாரணைகளில்,  சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடாத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்ட தற்கொலைதாரியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாக கூறி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இளைய சகோதரர் பதியுதீன் மொஹம்மட் ரியாஜ் என்பவர் கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யினரால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

 அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் தொடர்பிருப்பதாக பல்வேரு தரப்புக்களும் குற்றம் சுமத்தி வரும் நிலையில், இன்று குறித்த தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டிருந்தார்.

 இந் நிலையிலேயே சுமார் 10 மணி நேரம் வரை அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 அவசியம் ஏற்படின் மீளவும் விசாரணைக்கு அழைப்பதாக கூறியே, ரிஷாத் பதியுதீன் சி.ஐ.டி.யிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 எவ்வாறாயினும்  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வழங்கியுள்ள வாக்கு மூலத்தை ஆராய்ந்த பின்னர் மேலதிக  நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

(எம்.எப்.எம்.பஸீர்)

No comments

Powered by Blogger.