Header Ads



ஈஸ்டர் தாக்குதல்கள்: 16 நாட்களாக, 152 மணிநேர வாக்குமூலம் வழங்கிவரும் உளவுத்துறை பிரதானி

(எம்.எப்.எம்.பஸீர்)

அரச உளவுத் துறையின் முன்னாள் பிரதானியும் தற்போதைய கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவிடம், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவு நீண்ட வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளது. 

16 நாட்களாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வாக்கு மூலம் 152 மணி நேரம் வரை தாக்கல் செய்யப்பட்டதாக குறித்த ஆணைக் குழுவின்  பொலிஸ் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறினார். 

நாளொன்றுக்கு எட்டரை முதல் ஒன்பதரை மணி நேரம் வரை, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவிடம் இவ்வாரு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்  அவரிடம் அடுத்து வரும் சில நாட்களும் இவ்வாறு வாக்கு மூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க முன்னர், அதன் பொலிஸ் பிரிவில்  ஆஜராகி வாக்கு மூலம் வழங்க வேண்டும்.

இந் நிலையிலேயே நிலந்த ஜயவர்தன இவ்வாரு வாக்கு மூலம் வழங்கி வருகின்றார். குறித்த தாக்குதல்கள் இடம்பெறும்போது அரச உளவுத் துறை பிரதானியாக நிலந்த ஜயவர்தன செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.