Header Ads



புதிய ஆட்சியை அமைப்பது எங்களது இலக்கு, UNP யை கைப்பற்றுவது எங்களது நோக்கம்

கருணா அம்மான், கே.பி. போன்றவர்கள் தேர்தல் காலங்களில் பேசு பொருளாகிறார்கள். கருணா அண்மையில் தெரிவித்த கூற்றினால் படையினருக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு அரசாங்கம் என்ன சொல்கின்றது. 2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்திலும் கே.பி. எனப்படும் பத்மநாதன் விவகாரம் சூடு பிடித்தது. பின்னர் என்ன நடந்தது? இவ்வாறு கேள்வி எழுப்பினார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான ரவூப் ஹக்கீம். கலகெதர தேர்தல் தொகுதியில் ஹதரலியத்தவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைச் சுட்டிக் காட்டினார். 

அங்கு உரையாற்றுகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, 

கருணாவின் கூற்றினால் ஆளும் தரப்பு சங்கடத்தில் இருக்கிறது. தெற்கில் சிங்கள பௌத்த மக்கள் அதனால் குழம்பிப் போயிருக்கிறார்கள். படையினர் குறிப்பாக இராணுவத்தினர் தாம் அவமானப்படுத்தப்பட்டதாக கருதுகின்றனர். பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தவர்களில் கருணாவும் ஒருவராக இருக்கிறார். இப்பொழுது அவரை தம்மிலிருந்து வேறுபடுத்திக் காட்டி தப்பித்துக் கொள்ள ஆட்சியாளர்கள் எத்தனித்து வருகின்றனர். 

முந்திய பொதுத் தேர்தல் காலத்தில் கே.பி. மலேசியாவில் கோலாலம்பூரில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு இரகசியப் பொலிசாராலும், பயங்கரவாத தடுப்புப் பிரிவினராலும் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் என்ன நடந்து விட்டது? 

பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு கே.பி. யும் பொறுப்புக் கூறவேண்டும். அரசாங்கம் அவரை கையேற்ற பின்னர் அவரிடமிருந்ததாக கூறப்பட்ட ஆறு கப்பல்களுக்கும் என்ன நடந்தது? அவர் தான் புலிகள் இயக்கத்திற்கு சர்வதேச மட்டத்தில் நிதி சேகரிப்பவராக இருந்ததாக கூறினார்கள். அவரிடமிருந்த பணத்திற்கு என்னவானது? சொத்துக்கள் எங்கே? 

பின்னர் அவர் வடக்கில் சர்வ சாதாரணமாக நடமாடுகிறார். இத்தகையவர்களெல்லாம் தேர்தல் காலங்களில் மட்டும் மக்கள் மயப்படுத்தப்படுகின்றனர். அவ்வளவு தான். 

இப்பொழுதெல்லாம் தேசப்பற்றைப் பற்றி பெரிதாக கதைக்கிறார்கள். ராஜபக்ஷ குடும்பத்தினரைப் போன்ற தேசப்பற்று இந்த நாட்டில் வேறு எவருக்கும் கிடையாது என்றவாறு கதையளக்கின்றனர். இதுவும் ஒரு தேர்தல் காலத்தின் உச்சத்தை எட்டுகிறது. 

ஒரு யுக மாற்றத்திற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. புதிய ஆட்சியை அமைப்பது எங்களது இலக்குகளில் ஒன்று. அடுத்தது ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கம் ஐக்கிய தேசியக் கட்சியை கைப்பற்றுவதாகும். 

முஸ்லிம்களைப் பொறுத்தவரை தன்மானமுள்ளவர்கள், சுய கௌரவமுள்ளவர்கள் அரசாங்கம் ஜனாசாக்களை எரிப்பதற்கு முன்வந்திருப்பதன் காரணமாக இந்த ஆட்சியை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள் என்பது நிச்சயமாகும். 

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவித்தார். 

2 comments:

  1. யு என் பியை பிடிப்பது முஸ்லீம்களின் தேவையல்லவே.

    ReplyDelete
  2. கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியை பிடித்து வைத்திருந்தீர்கள் .அதனால் முஸ்லிம்களுக்கு என்ன இலாபம் ஏட்பட்டது ,நாட்டில் உள்ள இனக்கலவரங்களை சுட்டிக்காட்டியே முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் செய்து வருகின்றது ,முஸ்லீம் சமூக அபிவிருத்தி சம்பந்தமான எந்த திட்டங்களும் இவர்களிடம் இல்லை .

    ReplyDelete

Powered by Blogger.