Header Ads



இலங்கையில் IPL நடக்குமா..? கவாஸ்கர் கூறுவது என்ன...??

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல், ஐ.பி.எல்., தொடரை இலங்கையில் போட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து நடத்தலாம். ஏனெனில் செப்டம்பரில் இந்தியாவில் மழை காலம் ஆரம்பித்து விடும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர்  தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13 ஆவது தொடர் கடந்த மார்ச் 29 இல் ஆரம்பமாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

ஒருவேளை எதிர்வரும் ஒக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு –20 உலகக் கிண்ணத் தொடர் ஒத்திவைக்கப்பட்டால், ஐ.பி.எல்., தொடர் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் நடந்த ஐ.சி.சி., கூட்டத்தில் உலகக் கிண்ணத் தொடரை நடத்துவது குறித்து அடுத்த மாதம் முடிவு செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது. 

அடுத்த மாதம் முதல் அவுஸ்திரேலியாவில் இடம்பெறம் விளையாட்டு போட்டிகளை காண 25 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என, அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து உலகக்கிண்ணம் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இல்லை என்று நம்பப்படுகின்றது.

இந்நிலையில், இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் மேலும் தெரிவிக்கையில், 

அவுஸ்திரேலிய அரசின் அறிவிப்புக்கு பின், எதிர்வரும் ஒக்டோபரில் ‘இருபதுக்கு–20’ உலகக் கிண்ணத் தொடர் நடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

இதற்காக ஒவ்வொரு அணிகளும் 3 வாரங்களுக்கு முன் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும். அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின், 7 நாட்கள் பயிற்சி போட்டியில் விளையாட அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஐ.சி.சி.,யும் இருபதுக்கு –20’ உலகக் கிண்ணத் தொடரை நடத்த முடிவு செய்தால், ஐ.பி.எல்., தொடருக்கு சிக்கல் தான். ஒருவேளை உலகக்கிண்ண தொடர் இடம்பெற்றால், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல், ஐ.பி.எல்., தொடரை இலங்கையில் போட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து நடத்தலாம். ஏனெனில் செப்டம்பரில் இந்தியாவில் மழைக் காலம் ஆரம்பித்து விடும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.