Header Ads



மஹிந்த என்ற, மாபெரும் விருட்சம்

சிலர் உலகில் பல சாதனைகளை படைப்பர்.ஆனால் அதிலும் ஒரு சிலருக்கே பெயரும் புகழும் கிடைக்கின்றன.அந்தப் புகழும் காலப்போக்கில் மங்கி விடும்.ஆனால் கோடியில் ஒருவருக்கே அந்த மங்காப் புகழும் பெருமையும் வாழும் போதே கிடைக்கின்றன.அந்த அதீத புருஷர் வரிசையில் இலங்கைத் திருநாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ முன்னிலை வகிக்கிறார்.

மகிந்த ராஜபக்ஷ 1945 ம் ஆண்டு நவம்பர் 18ம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகெட்டிய பிரதேசத்தில் பிறந்தார்.இவர் பௌத்த உயர் குடும்பத்தில் பிறந்தார்.இவரது இயற்பெயர் பேர்சி மகேந்திரா ராஜபக்ஷ ஆகும்.தந்தை டி. ஏ. ராஜபக்ஷ 1947ம் ஆண்டு முதல்  1965 வரை பெலியத்த பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினராகத் திகழ்ந்தார்.எனவே மகிந்தவுக்கு சிறு வயதில் இருந்தே அரசியல் பின்னணியும் அறிவூட்டலும் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

“தேசத்தின் உண்மையான விடுதலை அதை பெற்றுத் தந்த பெருமை மனிதரை வாழ வைத்த பெருமை நாட்டை அபிவிருத்தி செய்த பெருமை வெளிநாடுகளுக்கு அடிபணியாத பெருமை – வணங்காமுடி “

5வது நிறைவேற்று ஜனாதிபதியும் சமகால பிரதமருமான மகிந்த ராஜபக்ஷவின் ஆளுமை இந்த சில வரிகளுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. இதனையும் தாண்டி இன்னும் பல பெருமைகளையும் சாதனைகளையும் படைத்தவர் அவர்.எவராலும் முடிக்க முடியாததை முடித்தவர் மகிந்த. எவராலும் முடிக்க முடியாத யுத்தத்தை முடித்தார் என்பது இந்த நாட்டிற்கு கிடைத்த அதிர்ஷ்டம் மற்றும் ஆசீர்வாதம்.

ஆரம்ப வாழ்வும் கல்வியும்:

மகிந்த ராஜபக்ஷ காலி ரிச்மண்ட் கல்லூரியிலும்  பின்னர் கொழும்பு  நாளந்தா கல்லூரியிலும் தேர்ஸ்டன் கல்லூரியிலும் கல்வி கற்றார். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1977 நவம்பரில் சட்டஅறிஞர் ஆனார். தங்காலையில் இவர் சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.

குடும்பம்:

1983 இல்  மகிந்த ராஜபக்ஷ சிராந்தி விக்கிரமசிங்கவைத் திருமணம் புரிந்தார். சிராந்தி சிறுவர்-உளவியலாளரும், கல்வியாளரும் ஆவார். சிராந்தியின் தந்தை இலங்கைக் கடற்படையின் இளைப்பாறிய அதிகாரி ஆவார். இவர்களுக்கு நாமல், யோசித்த, ரோகித்த என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். நாமல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். யோசித்த இலங்கைக் கடற்படையில் பணியாற்றியவர்.

மகிந்தவின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷ இலங்கை படைத்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் மகிந்தவின் ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றினார். இன்னும் ஒரு சகோதரர் பசில் ராஜபக்ஷ கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஆவார். மகிந்தவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற சபாநாயகராகப் பணியாற்றினார்.

சாதனை:

30 வருட யுத்தத்தை முடித்தமை ஒரு மாபெரும் சாதனையே. அதன் பின்னர்  உடனடியாக வடக்கில் முதல் தடவையாக மாகாண சபைத் தேர்தலை நடத்தியமை மற்றுமொரு சாதனை.

இந்தச் சந்தர்ப்பத்தில் கவிஞர் வாலியின் பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.

“எந்த நாடு என்ற கேள்வியில்லை எந்த ஜாதி என்ற பேதமில்லை மனிதர்கள் அன்பின் வழி தேடி இங்கு இயற்கையை வணங்குகிறார் மலை உயர்ந்தது போல் மனம் உயரகண்டு இவர் வாழ்வில் விளக்குகிறார்”

அதீத துணிச்சல்- “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”

எல் ரி ரி ஈ யினருக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்தமையே துணிச்சலின் உச்சத்தைக் காண்பிக்கிறது.2006ம் ஆண்டு ஜூன் 15ம் திகதி அநுராதபுரம் கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தில் எல் ரி ரி ஈ பயங்கரவாதிகளால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில், அந்த மக்களை பார்வையிட பாதுகாப்புத் தரப்பினரின் அறிவுரையையும் மீறி சென்றமை துணிச்சலைக் காட்டுகிறது.

மேலும் 2006ம் ஆண்டு பயங்கரவாதிகள் கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் வைத்து அந்த வேளையில் பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய  கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள எத்தனித்த போதும் கூட மனம் தளரவில்லை. தனது சகோதரர் ( தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ) தெய்வாதீனமாக அந்த தாக்குதலில் இருந்து தப்பி  வந்த பின்னர் யுத்தத்தை மேலும் தீவிரமாக முன்னெடுக்க தீர்மானித்தமை அசகாய துணிச்சலைக் காண்பிக்கிறது. இப்படியாக பல சந்தர்ப்பங்களைக் குறிப்பிடலாம்.

கௌரவ விருதுகள்:

பலஸ்தீனுடனான ஒருமைப்பாட்டிற்கான இலங்கை சபையின் தலைவர்.

மல்வத்தை பீடத்தினால் ஸ்ரீரோகண ஜனரஞ்சக என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வழக்கறிஞரான மகிந்த 1970 இல் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசுத் தலைவராகத் தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 நவம்பர் 19 இல் தொடங்கினார். 2010 அரசுத் தலைவர் தேர்தலில் இரண்டாம் தடவையாக 2010 ஜனவரி 27 இல் தெரிவானார். மூன்றாவது தடவையாக 2015 தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று 2015 சனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார்.

2015 நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி  பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும் இவரது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் இவர் பிரதமராக முடியவில்லை. இதனால் எதிர்க்கட்சியில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது.

பின்னர் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெற்ற  ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ அமோக வெற்றி பெற்றதனால் ஆட்சி மாறியது.புதிய அரசு  கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உருவானது.அந்த அரசாங்கத்தில் பிரதமராக  மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்று  இப்போதும் பதவி வகித்து வருகிறார்.

தனது வாழ்நாளில் தன்னை அரசியலுக்கு வருவதற்கு ஊக்குவித்தவர் தனது தாயார் என்பதையும் அவருக்கு நன்றியுணர்வோடு இருப்பார் என்பதையும் ஒரு சில சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்.

1970-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்து இந்த நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு நன்றியுடன் இருப்பதை அவர் நினைவு கூறியது குறிப்பிடத்தக்கது.

அனைத்து நாடுகளுடனும் இலங்கை அணிசேராக் கொள்கையைப் பின்பற்றுகிறது. இந்தியா மற்றும் சீனா இருவரும் மதிப்புமிக்க நண்பர்கள். ஜவஹர்லால் நேரு மற்றும் சீனாவின் தலைவர் சூ என்லாய் இருவரும் சேர்ந்து இரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்காக பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கினர்.

அந்தக் கொள்கையைத் தான் தாமும் ஏற்றுள்ளதையும் இனிவரும் காலங்களில் அதனைப் பின்பற்றுவதையும் மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

“தோன்றின் புகழோடு தோன்றுக” என்ற வாசகத்திற்கேற்ப தனது கொள்கை மற்றும் துணிச்சல் காரணமாக பல சவால்களை வெற்றி கொண்டு இன்றும் வீறு நடைபோடும் வீரனாக, மக்கள் விரும்பும் நாயகனாக,   ஒரு தந்தையாக  ஒரு பாதுகாவலனாக, முழு நாட்டிற்கும் ஆசீர்வாதமாக அமைந்த மகிந்த ராஜபக்ஷ அவர்கள் 50 வருட பாராளுமன்ற வாழ்கையை பூர்த்தி செய்தாலும், இன்னும் பல ஆண்டுகள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பமாகும்.

ஜெ.யோகராஜ்


No comments

Powered by Blogger.