June 29, 2020

மனதைப் பதற வைக்கும் செய்தி, குழந்தையைத் தொட மறுத்த மருத்துவர்கள், உடலைக் கட்டியணைத்து அழுத தந்தை,


``மருத்துவமனைக்கு வந்திருந்த சிலர் செல்போன்களில் படம்பிடிக்கத் தொடங்கிய பின்னரே மருத்துவர்கள் எங்களது குழந்தையைப் பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றனர். அதற்கு முன்புவரை எந்த மருத்துவரும் எனது குழந்தையைத் தொட தயாராக இல்லை”

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதிலிருந்தே மருத்துவமனைகளில் நடந்ததாக வெளிவரும் ஒவ்வொரு செய்தியும் மனதைப் பதற வைக்கின்றது. வைரஸ் பரவும் கடுமையான சூழலில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றன. அவர்களை பாராட்டிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில்தான், சில மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல் புறக்கணிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

வைரஸ் தொற்று நோயாளிகள் மட்டுமல்ல பிற நோய்களால் பாதிப்படைந்த நோயாளிகளின் விஷயத்திலும் இந்தத் தகவல்கள் பொருந்தும். சமூக வலைதளங்களில் இதுதொடர்பாகப் பரவும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன. அவ்வகையில், உத்தரப் பிரதேசத்தில் குழந்தைக்கு சிகிச்சையளிக்காமல் மருத்துவர்கள் புறக்கணித்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் இருந்து சுமார் 123 கி.மீ தொலைவில் கன்னோஜ் எனும் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் அரசு மருத்துவமனைக்கு, வீங்கிய கழுத்துப் பகுதி மற்றும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தங்களது ஒரு வயது குழந்தையைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் அவர்களது குழந்தையைத் தொட மறுத்துவிட்டதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிகிச்சையளிப்பதற்குப் பதிலாக 90 கி.மீ தூரத்தில் உள்ள கான்பூர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் வலியுறுத்தியதாகக் கூறுகின்றனர். இதனால், செய்வது அறியாமல் மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதபடி நின்றுள்ளனர். இதன்பிறகு மருத்துவர்கள் சிகிச்சையளிக்க முன்வந்தும் சிகிச்சை பலனளிக்காமல் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவமனைக்கு வந்திருந்த சிலர் அம்மருத்துவமனை வளாகத்தில் பிரேம்சந்த் மற்றும் ஆஷா தேவி இருவரும் தங்களது குழந்தையுடன் இருந்து அழும் காட்சியை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். 12 விநாடிகள் பதிவான அந்த வீடியோவில், பிரேம்சந்த் தனது இறந்த குழந்தையின் உடலைக் கட்டியணைத்து அழுதபடி தரையில் கிடக்கிறார். அவரது மனைவி சில அடிகள் தூரம் தள்ளி அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மற்றொரு வீடியோவும் வெளியானது. அந்த வீடியோ, குழந்தையை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பரிசோதனை செய்வதாகக் காட்டுகிறது.

இந்த நிலையில், பிரேம்சந்த் இதுதொடர்பாகப் பேசுகையில், ``மருத்துவமனைக்கு வந்திருந்த சிலர் செல்போன்களில் படம்பிடிக்கத் தொடங்கிய பின்னரே மருத்துவர்கள் எங்களது குழந்தையைப் பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றனர். அதற்கு முன்புவரை எந்த மருத்துவரும் எனது குழந்தையைத் தொட தயாராக இல்லை. நாங்கள் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் அங்கேயே இருந்தோம். அவனை கான்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் எனக் கூறிக்கொண்டே இருந்தனர். நான் மிகவும் ஏழ்மையான ஒருவன். என்னிடம் பணம் எதுவுமே இல்லை. என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கூறியுள்ளார்.

குழந்தையின் தாய் ஆஷா தேவி பேசும்போது, ``அவனது கழுத்துப் பகுதி வீங்கி இருந்தது. நாங்கள் 30 முதல் 40 நிமிடங்கள் அங்கேயே காத்திருந்தோம். அதன்பிறகு அனுமதித்தனர். ஆனால், அவன் இறந்துவிட்டான்” என்று உடைந்து அழுதுள்ளார்.

மருத்துவர்களின் அலட்சியம்தான் இந்தச் சம்பவத்துக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அம்மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இதனை மறுத்துள்ளனர். இதுதொடர்பாக கன்னோஜ் மருத்துவமனையின் உயர் அதிகாரி ராஜேஷ் குமார் மிஸ்ரா பேசுகையில், ``சிறுவன் நேற்று மாலை 4:15 மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டான். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவனை அனுமதித்தோம். அவனது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனால், குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணர் ஒருவர் அவனுக்கு சிகிச்சையளிக்க அவசரமாக அழைக்கப்பட்டார். ஆனால், அடுத்த 30 நிமிடங்களில் அவன் இறந்தான். மருத்துவர்கள் அவனைக் காப்பாற்ற முடிந்தவரை முயற்சி செய்தனர். ஆனாலும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. இதில், எந்தவிதமான அலட்சியமும் இருப்பதாக தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

Credits : NDTV

0 கருத்துரைகள்:

Post a comment