Header Ads



கோழி இறைச்சி எனக்கூறி, மயில் இறைச்சி விற்பனை - பிரதேசவாசிகள் தெரிவிப்பு


மொரகஹாகந்த காட்டுப் பகுதியில் வாழும் மயில்களை வேட்டையாடி, அவற்றை உணவகங்களுக்கு வழங்கும் சட்டவிரோத நடவடிக்கையில் திட்டமிட்ட குழுவொன்று ஈடுபட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பயிர் நிலங்களை சேதப்படுத்தி பறந்து திரியும் இந்த மயில்களை துப்பாக்கி மற்றும் பொறிகளை கொண்டு வேட்டையாடி அவற்றை இறைச்சிக்காக எலஹெர, ஹம்பரன மாத்திரமல்லாது மாத்தளையில் பல பிரதேசங்களில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு இது தெரியாது எனவும், கோழி இறைச்சி எனக்கூறி அவை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இரவு நேரங்களில் மாத்திரமின்றி மதிய நேரங்களிலும் துப்பாக்கி ஏந்திய வேட்டைகாரர்கள் காட்டுப் பகுதியில் சுற்றி திரிவதாகவும், காட்டு யானை மற்றும் வேறு காட்டு விலங்குகள் காரணமாக பாதுகாப்பு பிரிவினர் மற்றும் வேறு பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகளுக்கு இருக்கும் தடைகளை பிரயோசனப்படுத்திக்கொண்டு இந்த மயில் இறைச்சி வர்த்தகம் முன்னெடுக்கப்படுவதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

நீண்ட காலமாக நடக்கும் இந்த மயில் இறைச்சி வர்த்தகம் சம்பந்தமாக பொறுப்புக்கூற வேண்டியவர்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதேசவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.