Header Ads



ரணிலின் தந்திரத்தினால், சஜித்திடமிருந்து பிரிக்கப்பட்ட மங்கள

ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்டத் தலைமை வேட்பாளரான நிதி மற்றும் ஊடகத்துறை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு எடுத்த முடிவு தொடர்பில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் பெரிதும் பேசுபொருளானது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாவட்ட வேட்பாளர் பட்டியலிலிருந்து விலகுவதாக முடிவெடுத்த மங்கள சமரவீர, அம்முடிவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரையிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குத் துளியளவேனும் தெரியாதென, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன அங்கு தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர இவ்வாறான முடிவை எடுப்பதற்கு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வகுத்த அரசியல் வியூகமே காரணமெனத் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பில், சஜித் பிரேமதாஸவுக்கு எதுவுமே தெரியாதென்றார்.

ரணிலின் அரசியல் செயற்பாடுகளின் இறுதி, சஜித்துக்குப் புரியாத புதிராகுமெனத் தெரிவித்துள்ள அவர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும், இவ்வாறே பல்வேறான அரசியல் காய்நகர்த்தல்கள் முன்னெடுக்கப்பட உள்ளனவென ஆரூடம் கூறியுள்ளார்.

ரணிலின் அரசியல் வியூகத்தால், ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் பட்டியலில் சரிவு ஏற்பட்டுள்ளதெனத் தெரிவித்துள்ள அவர், தென் மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான பல்வேறான சம்பவங்களை மக்கள் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்டத் தலைமை வேட்பாளர் வெற்றிடத்துக்கு, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான புத்திக பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகன் கனகராஜ்

No comments

Powered by Blogger.