Header Ads



மக்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் - அயதுல்லா அலி கமேனி

இரானில் அரசு நடத்தும் மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கான சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இரானில் மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சியாகவே இது கருதப்படுகிறது.

இனி உடல்நிலையில் பாதிப்பு அல்லது ஆபத்து உள்ள பெண்களுக்கு மட்டுமே கருத்தடை மருந்துகள் வழங்கப்படும். நிரந்தர கருத்தடைக்காக ஆண்களுக்கு மேற்கொள்ளப்படும் வாஸெக்டோமி என்ற அறுவை சிகிச்சையும் இனி அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படாது.

இருப்பினும், தனியார் மருத்துவமனைகளில் கருத்தடைக்கான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

குறைவான பிறப்பு விகிதம் மற்றும் பெருகிவரும் முதியவர்களின் மக்கள் தொகையால் இரான் அரசாங்கம் கவலை அடைந்துள்ளது.

இந்த ஆண்டு இரான் மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் ஒரு சதவிகிதம் குறைந்துள்ளது. இதனால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த 30 ஆண்டுகளில் உலகின் வயதான மக்கள் தொகையை கொண்ட நாடாக இரான் உருப்பெறும் என இரானின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரானின் மக்கள் தொகை வளர்ச்சி 1.4 சதவிகிதமாக பதிவானது. அண்டை நாடான இராக்கில் 2.3 சதவிகிதமாகவும், செளதி அரேபியாவில் 1.8 சதவிகிதமாகவும் மக்கள் தொகை வளர்ச்சி பதிவானது என்கிறது உலக வங்கியின் தரவு.

திருமணங்கள் நடைபெறுவதும் மற்றும் திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெறுவதும் குறைந்திருக்கிறது என்கிறது அரசு ஊடகமான இர்னா. இதற்கு பெரிதும் பொருளாதார நெருக்கடியே காரணம் என்கிறது அந்த ஊடகம்.

கடந்த ஒரு தசாப்தத்தில் திருமணமானவர்களின் எண்ணிக்கை 40% குறைந்துள்ளது என இரானின் துணை சுகாதாரத் துறை அமைச்சர் சேயத் ஹமீத் பரக்காட்டி கூறினார். ''இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த 30 ஆண்டுகளில் உலகின் மிக வயதான நாடுகளில் ஒன்றாக நாம் இருப்போம்" என்றும் சேயத் ஹமீத் குறிப்பிடுகிறார்.

1979ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி ஏற்பட்ட பிறகு இரானின் மக்கள் தொகையில் கணிசமான முன்னேற்றம் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் தொடர்ந்து மக்கள் தொகையை கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

மக்கள் நிறைய குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போதுள்ள எட்டு கோடி மக்கள் தொகையை 15 கோடியாக அதிகரிக்க வேண்டும் என இரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 6:151)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.