Header Ads



சீனாவில் பாரிய வெள்ளப்பெருக்கு - இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு

தென் மற்றும் மத்திய சீனாவில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் இலட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

குறித்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் மாயமாகியுள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி முதல் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 228,000 பேர் அவசரகால தங்குமிடத்திற்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர் என்று நாட்டின் அவசரகால  முகாமைத்துவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் யுகான், சுற்றுலாத்தலமான யாங்ஸ்யு உள்ளிட்ட மாகாணங்களில் பெரும் மழை பெய்து வருகிறது. 

இதனால் அங்குள்ள 8 மாகாணங்களில் உள்ள 110 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் சுமார் 10 ஆயிரத்து 700 ஹெக்டேர் பரப்புள்ள பயிர்ச்செய்கைகள் நாசமாகியுள்ளன.

வெள்ளப்பெருக்கினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

குவாங்சியின் தெற்கு பிராந்தியத்தில் பாரிய வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார், மேலும் வடக்கே ஹுனான் மாகாணத்தில், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவகால வெள்ளப்பெருக்கு பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சீனாவின் முக்கிய நதி அமைப்புகளின் கீழ் பகுதிகளில், குறிப்பாக யாங்சி மற்றும் தெற்கே பேர்ல் போன்றவற்றில் பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

சீனாவில் மிக மோசமான வெள்ளம் 1998 இல் ஏற்பட்டது, அதில் 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதுடன், கிட்டத்தட்ட 3 மில்லியன் வீடுகள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.