June 22, 2020

மங்கள விலகியது ஏன்...? அவருடன் இணையுமாறு விக்டர் ஐவன் அழைப்பு

- விக்டர் ஐவன் -

தற்போது சிதைவுற்று மரணத்தின் விளிம்பில் இருக்கும் இலங்கையின் பழைய அல்லது பாரம்பரிய அரசியல் நிலப்பரப்பில் வண்ணமயமான, சர்ச்சைக்குரிய, தைரியமான மற்றும் ஆக்கபூர்வமான அரசியல் பிரமுகராகக் கருதப்படும் மங்கள சமரவீர , பாரம்பரிய அரசியல் போக்கைக் கைவிடுவதற்கும் மாற்று பாதையை தெரிவு செய்வதற்கும் எட்டிய முடிவை இருளில் ஒளிக்கீற்றாக பார்க்க முடியும்.

சில நாட்களுக்கு முன்பு இதய நிலை கடுமையானதாக இருந்தபோதிலும் மங்கள சமரவீரவின் அரசியல் போக்கை திடீரென புதிய பாதையில் செல்ல வழிவகுத்த காரணிகளை ஆராய்ந்து இந்த சுருக்கமான குறிப்பை தயாரிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

இந்த புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவர் என்னுடன் பல சுற்று விவாதங்களை நடத்தியிருந்தார். அவர் என்னுடன் கலந்துரையாடியபோது நான் புனரமைப்பு இயக்கத்தின் ஆர்வலர் என்பதை அவர் அறிந்திருந்தார். எங்கள் இருவருக்கும் நீண்டகாலமாக அறிமுகமானவர்கள் இருந்தனர், பொது முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொது விவாதங்களில் சூடான வாதங்களில் கூட நாங்கள் பங்கேற்ற சந்தர்ப்பங்கள் இருந்தன. சில காலமாக எங்களுக்குள் நெ ருங்கிய தொடர்பு இல்லை. ஆயினும் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சியின் பிற்பகுதியில் அது மீண்டும் தொடங்கியது. மங்கள தனது வாழ்க்கை வரலாற்று நூலை அறிமுகப்படுத்தியபோது சிறப்புரையாற்ற என்னை அழைத்தார். தலைப்பைத் தேர்வுசெய்ய அவர் என்னை அனுமதித்தார். இலங்கை நெருக்கடி பற்றி பேசினேன். சுதந்திரம் பெற்றபோது இலங்கை ஆசிய நாடுகளிடையே செழிப்பான நாடாக இருந்தது என்பதை நான் சுட்டிக்காட்டினேன்.

நமது தலைவர்களுக்கு ஆளும் அதிகாரம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போதைய துரதிர்ஷ்டவசமான அவல நிலைக்கு அது எவ்வாறு மூழ்கியது என்பதை விளக்கினேன். சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை ஆண்ட கட்சிகளுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டு என்று எனது பேச்சை கருதலாம்.

இலங்கையின் பாரம்பரிய அரசியல் கட்சிகளிடம் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு யதார்த்தபூர்வமான தீர்வு இல்லை என்றும், அந்த சூழலில் சமூக-அரசியல் அமைப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றின் முழுமையான சரிவு தவிர்க்க முடியாதது என்றும் நான் கூறினேன்.

மாத்தறை மாவட்டத்தில் ஏராளமான ஐ. தே.க பிரமுகர்கள் மற்றும் மங்களவின் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் நான் ஆற்றிய உரை, கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்கு பலத்தை அளித்திருக்க முடியாது. ஆனாலும், என் பேச்சு மங்களவை கோபப்படுத்தவில்லை. நன்றி உரையாற்றிய அவர், நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், நாட்டின் அவல நிலைக்கு அவரும் பொறுப்பு என்பதை ஒப்புக் கொண்டார். அதற்காக அவர் தனது வருத்தத்தை தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பாக மேலும் விவாதிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறிய குழுவினர் அடங்கிய கூட்டத்தை அவர் கூட்டினார். அங்கு அது விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களில் முக்கிய இரண்டு பொருளாதார வல்லுநர்கள் இருந்தனர். என்னுடன் இது தொடர்பாக நடைபெற்ற இரண்டு சுற்று விவாதங்களில் புனரமைப்பு இயக்கத்தின் இரண்டு மத்திய குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். பங்கேற்றவர்கள் அனைவரும் இலங்கையின் நெருக்கடியானது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக வெகுதூரம் சென்றுவிட்டது, தவிர்க்க முடியாமல் சமூக-அரசியல் முறைமை மற்றும் நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்தது என்ற கருத்தை பகிர்ந்து கொண்டனர்.

இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையிலிருந்து நாட்டை காப்பாற்ற நாம், குறிப்பாக மங்கள என்ன செய்ய முடியும்? என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றியதாக அடுத்த விவாதம் அமைந்தது . நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான கட்டமைப்பு சீர்திருத்தங்களை எட்டக்கூடிய மேம்பட்ட பார்வையுடன் வலுவான பொது இயக்கத்தை நாம் தொடங்க வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக மங்களவின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மங்கள பழைய அரசியல் பாதையிலிருந்து விலகி இடம்பெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.மேலும் படுகுழியில் வீழ்ந்த நிலையிலிருந்து நாட்டை மீட்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பொதுத் திட்டத்தில் வலுவான பங்களிப்பை கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தை நான் வலுவானதாக கொண்டிருந்தேன். அவர்களில் சிலர் பழைய அரசியலின் போக்கை முற்றிலுமாக விட்டுவிடாமல் புதிய பாணியில் ஈடுபட முடியும் என்ற எண்ணத்தில் இருந்தனர்.

ஆனால், மங்கள உடன்படவில்லை. மிகவும் அழுகிய பழைய அரசியல் கலாசாரத்திலிருந்து விலகி, நாட்டை மீட்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய வெகுஜன அரசியல் இயக்கத்தை உருவாக்குவதற்கான காரணத்திற்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற தனது நம்பிக்கையில் அவர் உறுதியாக இருந்தார்.

கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவருமே புதிய இயக்கத்தின் காரணத்திற்காக தன்னம்பிக்கையுடன் எழுந்து நிற்கும் திறனைக் கொண்டுள்ளனர். ஏனெனில் அதன் கருப்பொருள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்ட சிறிய மற்றும் சதித் திட்டங்களிலிருந்தும் விடுபட்டுள்ளது.

ஒரு நாடாக, இலங்கை, இப்போதுஅரசியல் ரீதியில் தீர்க்கமான கட்டத்தில் உள்ளது. காலாவதியான மற்றும் ஊழல் நிறைந்த அரசியல் முறைமையானது சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நெருக்கடிக்கு நீடித்த தீர்வை வழங்கும் திறனை கொண்டதாக இல்லை. மங்கள புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பது நாட்டிற்கு அளிக்கும் மிக முக்கியமான அரசியல் சமிக்ஞையாகும்.

இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடியை ஒரு மதச்சார்பற்ற, பன்மைத்துவ மற்றும் ஜனநாயக பார்வை கொண்ட ஒரு உண்மையான பொது இயக்கத்தால் மட்டுமே ஆக்கபூர்வமாக முறியடிக்க முடியும். இன, சாதிகளை அடிப்படையாகக் கொண்ட சிறிய மற்றும் பாரபட்சமான பிளவுகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை புறக்கணித்து இலங்கைத் தேசத்தை கட்டியெழுப்ப உறுதிபூண்டுள்ள, மற்றும் மதங்கள், இலங்கையை தங்கள் தாய்நாடாக நடத்தும் அனைவருக்கும் சம உரிமைகள் மனித கவுரவத்தை வழங்குதல், இலங்கை அரசையும் அதன் நிறுவன அமைப்பையும் மூழ்கடித்துள்ள ஊழல், திறமையின்மை மற்றும் அதிகாரத்துவத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துதல், சட்டத்தின் ஆட்சி உச்சத்தில் இருக்கும் இலங்கை அரசென்ற புதிய இலங்கையை மீண்டும் உருவாக்குதல் என்பனவற்றை உண்மையான ஒரு பொது இயக்கத்தால் மட்டுமே வெற்றி கொள்ள முடியும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய அரசியல் திட்டத்தில் மங்கள இணைந்துள்ளார். நாட்டையும் அதன் மக்களையும் நேசிப்பவர்கள் அனைவரும் இந்த பயணத்தின் முக்கிய பங்காளிகளாக மாறலாம்.

0 கருத்துரைகள்:

Post a comment