June 21, 2020

இரவு நேரம் பொதிகள் வழங்குபவர்களையும், சவூதியிலிருந்து வந்த பணத்தை பங்கிடுகின்றவர்களையும் நம்பி ஏமாறாதீர்கள்

இரவு நேரங்களில் பொதிகள் வழங்குபவர்கள் ஒருவேளை வெற்றிபெற்றால் வருங்காலத்தில் இந்த சமூகத்தை பணம் படைத்த முதலாளிகள் தங்களுடைய பணத்தால் ஆட்சி செய்யும் துர்ப்பாக்கியமான நிலைமையும் ஏற்படும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி கிராமஅபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- கல்குடாவின் பிரதிதித்துவம் இம்முறை பாதுகாக்கப்படுவதென்பது நீண்ட பரம்பரைக்கு காவுகோலாக அமையும் மிகப்பெரிய முயற்சியாக மாறும் எனவும் இதற்காக கடந்த பொதுத் தேர்தலை விட இரட்டிப்பு மடங்கு செயற்பட வேண்டும்.

கடந்த வருடம் ஸஹ்ரானுடைய குண்டு வெடிப்பின் பின்னர் கிழக்கு கட்டளைத் தளபதியிடம் தன்னை பணயம் வைத்து பிற பிரதேசங்களை போன்று பள்ளிவாசல்களுக்குள் நாய்களை கொண்டு வராமலும் குர்ஆன்கள் வீசப்படாமலும் பர்தாக்களையும் பள்ளிவாசல்களையும் உலமாக்களையும் குர்ஆன்களையும் பாதுகாக்க முடிந்தது என்றால் அதற்கு இறைவனின் உதவியுடன் கடந்த பொதுத் தேர்தலில் இந்தமக்கள் எனக்கு இட்ட புள்ளடிகளால் கிடைத்த அதிகாரத்தினாலே இயலுமானது.

தேர்தல் பிரசாரங்களின் போது எதிரணியினர் அமீர்அலியால் ஒரு அங்குலம் காணியேனும் மீட்கப்பட்டதா என்று கேள்வி கேட்பவர்கள், கடந்தகாலத்தில் இது தொடர்பாக தன்னால் நாடா ளுமன்றத்தில் காணி பிரச்சினைகள் தொடர்பாக நாடா ளுமன்ற விவாதங்களை அறியாதவர்களாகவே இன்னும் இருக்கின்றார்கள் எனவும், ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் காலத்திலேயே தான் சகல காணிகளும் இழக்கப்பட்டதென்பது கூட தெரியாமல் சிறு பிள்ளைகளாக இருக்கின்றார்கள். காணி விடயங்கள் சம்பந்தமாக இதுவரை புத்திஜீவிகள் அரசியல்பிரமுகர்களுடன் மேற்கொள்ளப்பட்டட 57 கூட்டங்களில் ஒன்றிலும் பங்குபெறாதவர்கள் இப்போது எம்மை நோக்கி விரலை நீட்டுவது என்பது நகைப்புக்குரிய விடயம்.

இம்முறை பொதுத் தேர்தலில் சஜித் பிரேதாஸவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைந்து கேட்பதற்கு வாக்குறுதியளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் என்னையும் சஜித் பிரேமதாசவையும் கடைசி நேரத்தில் ஏமாற்றினார்.

கடந்தமுறை கணேசமூர்த்தி இறுதி நேரத்தில் இணைந்து வெற்றிக்கு வித்திட்டது போல இம்முறை தேர்தல்களத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி இணைந்து கொண்டதன் மூலம் மட்டக்களப்புமாவட்டத்தில் சஜித் பிரேமதாஸவின் டெலிபோன் சின்னத்திற்கு ஆசனம் உறுதியாகி இருப்பதாகவும் வாக்குறுதியளித்தபடி நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் பொறியியலாளர்அப்துர் ரஹ்மானும் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு பிரவேசிப்பார்.

தற்பொழுது தேர்தலை மையப்படுத்தி கல்குடாவில் எதிரணி அயலூர் வேட்பாளர்கள் இரவு நேரங்களில் பொதிகள் வழங்குபவர்களாகவும் சவூதியிலிருந்து வந்த பணங்களை பங்கிடுகின்றவர்களாகவும் இருப்பவர்கள் ஒரு வேளை வெற்றி பெற்றால் வருங்காலத்தில் இந்த சமூகத்தை பணம் படைத்த முதலாளிகள் தங்களுடைய பணத்தால் ஆட்சி செய்யும் துர்ப்பாக்கியமான நிலைமையும் ஏற்படக்கூடும் என்றார்.

மெட்றோ

0 கருத்துரைகள்:

Post a comment