Header Ads



வீணாகும் முஸ்லிம் பெண்களின் வாக்குகள்

- சட்டத்தரணி ஃபஸ்லின் வாஹிட் -

இஸ்லாமிய வரலாற்றை நோக்கும்போது அங்கு பெண்களுக்கு தனிப்பட்ட ஒரு இடமுண்டு. அடிமைத்தனத்திலிருந்து பெண்களை விடுதலை செய்து உரிமைகளுடன் வாழ வழிசமைத்தது முஹம்மத் நபியின் வருகைக்கு பின்னரான இஸ்லாமிய வழிமுறைகளே.

இதனடிப்படையில் மூமின்களின் அன்னையர் என அழைக்கப்படும் நபிகளாரின் மனைவியர்களின் வாழ்க்கை சரிதத்திலும் நபித் தோழியர்களின் வாழ்க்கை சரிதத்திலும் பல நூறு பாடங்கள் நமக்கு கற்றுக்கொள்வதற்கு உள்ளன. இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமில்லாமல் பொதுவாழ்வில் பெண்கள் எவ்வாறு ஈடுபடவேண்டும் என்பதனை அவர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு சொல்லித் தருகின்றது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. மக்கா நகரில் மிகப்பெரிய வியாபாரியாக அன்னை கதீஜா (ரலி) அவர்கள் திகழ்ந்தார். அக்கால வியாபார மையமாக இருந்த மக்காவில் இருந்து கொண்டு பல மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி வியாபாரத்தில் கூட அவர்கள் ஈடுபட்டார்கள் என்று சரித்திரம் கூறுகின்றது.எனவே வியாபாரத் துறையில் அக்காலத்திலேயே பெண்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை கதீஜா நாயகியின் சரித்திரம் சான்று பகர்கின்றது.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வரலாறு மற்றுமொரு பாடத்தை நமக்கு கற்றுத் தருகின்றது. நபிகளாரின் மறைவுக்கு பின்னர் ஆயிஷா நாயகி அவர்கள் பொதுப் பணிகளில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் பிரதான நான்கு கலீபாக்களின் ஆட்சியிலும் சமூக, பொருளாதார, ஆன்மீக தீர்மானங்களில் முக்கிய பங்கை அவர்கள் வகித்தார்கள். ஒவ்வொரு கலிபாவின் மரணத்தின் பின்னரும்  ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களின் போது  சிக்கலான பல தீர்மானங்களை எடுப்பதில் அன்னை ஆயிஷா அவர்கள் முன்னின்றார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது கொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கூட்டத்துக்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்வதில் அன்னை ஆயிஷா அவர்கள் முக்கிய பங்களிப்பு செய்தார்கள்  என்று கூறப்படுகின்றது.   அதுமட்டுமல்லாமல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் அன்னை ஆயிஷா அவர்களின் மூலமே பெறப்பட்டுள்ளது. நபிகளாரின் மனைவியர்களில் ஒருவர் போர்க்களத்தில் கூட இருந்துள்ளார்கள். நபித்தோழியர்களில் உம்மு ஸுலைம், அஃரா பின் உபைத் போன்ற பலர் நேரடியாக போர்களில் ஈடுபட்டுள்ளனர். நபித்தோழியர் ஒருவர் போரொன்றில் நபிகளாருக்கு எதிரிகள் காயம் ஏற்படுத்த முனைந்த போது கேடயம் போல் முன்னால் பாய்ந்து எந்த விதமான காயமும் இல்லாமல் நபிகளாரை காப்பாற்றினார்கள். அவர் இப்போரில் படுகாயம் அடைந்தார் என சரித்திரம் கூறுகின்றது.

எனவே பெண்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்படும் வெறும் காட்சிப் பொருளல்ல. அன்றாட வாழ்வில் அவர்களின் பங்களிப்புக்கு  இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது என்பதை சரித்திரம் சான்று பகர்கின்றது.

இன்றைய சமுதாயத்தில் வளர்ச்சியில் இஸ்லாமிய பெண்களின் பங்கும் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. உலகளாவிய ரீதியில் முகம் கொடுக்கும் பொருளாதார மந்த  நிலையானது சிறிய பெட்டிக் கடையிலிருந்து பாரியளவிலான வியாபார நிறுவனங்களையும் தாக்கிக் கொண்டு இருக்கின்றது. ஒவ்வொரு பெண்ணும் தனது கணவனின் அல்லது சகோதரனின் அல்லது தந்தையின் தொழிற்துறையில் பங்களிப்பு செய்ய வேண்டும்.கணவனின் சிறிய வியாபாரம் ஒன்று இருந்தால் அதில் மனைவி காசாளராக இருந்து துணை புரியலாம் அல்லவா? அதேபோல் சிறிய கைத்தொழில் துறைகளில் அல்லது உற்பத்தித் துறைகளில் ஏன் விவசாயத்துறையில் கூட  பெண்கள் தங்களது பங்களிப்பை செலுத்தும்போது நட்டத்தில் இயங்கும் பல வியாபாரங்களை லாபமீட்டும் ஒன்றாக மாற்றம் காணலாம். பொருளாதார,கைத்தொழில் துறைகளில் பரந்த அறிவைக்கொண்ட பெண்கள் நம்மிடையே இருக்கின்றார்கள். தனிப்பட்ட வியாபாரங்களை குடும்ப  வியாபாரமாக மாற்றுவதற்கு முயலவேண்டும். அரச தனியார் துறைகளில் பெண்கள் வேலை செய்ய அனுமதிப்பது போல் வியாபாரத் துறையிலும் முஸ்லிம் பெண்கள் தமது பங்களிப்பை இஸ்லாமிய  வரையறைகளுக்கு உட்பட்டு செலுத்த வேண்டும்.

அதுமட்டுமல்ல  அன்னை ஆயிஷா நாயகியை போல் அரசியலிலும் இலங்கை முஸ்லிம் பெண்கள் ஈடுபாடு காட்டவேண்டும். பங்களாதேஷில், பாகிஸ்தானில்  முஸ்லீம் பெண்கள் ஆட்சி செய்ய முடியும் என்றால் ஏன் அக்குறணையில், பேருவளையில், கல்முனையில், காத்தான்குடியில்  பெண்கள் ஆட்சி செய்ய முனையக்கூடாது? பாராளுமன்றத்தில், மாகாணசபைகளில் முஸ்லீம் பெண்களின் குரல் ஒலிக்க வேண்டும். ஆட்சி மாற்றங்களில் அல்லது மக்கள் பிரதிநிதிகளில் தெரிவில் பெண்களின் கூட்டுத் தீர்மானம் முக்கிய பங்கை செலுத்த வேண்டும். அரசியலில் ஆணாதிக்கத்திற்கு சமமாக பெண்களும் முன்வரவேண்டும்.

ஆண்களைவிட பிள்ளைகளின் எதிர்காலத்தில் அதிக கரிசனை காட்டுவது பெண்களே.எனவே அவர்களின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு முன்னிலைப் படுத்தி அரசியல் தீர்மானங்களை முஸ்லீம் பெண்களும் எடுக்க முன்வரவேண்டும். விழலுக்கு இறைத்த நீர் போல் பெண்களின் வாக்குகள் வீணடிக்கப்படக்கூடாது. இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம் பெண் அரசியல் வாதி ஒருவராக பேரியல் அஷ்ரப் அவர்கள் முன்மாதிரியாக இருந்துள்ளார். அவர் அரசியலில் மீள்  பிரவேசம் செய்வாரெனில் சமூகம் வரவேற்க காத்துக் கொண்டுதான் இருக்கின்றது.

பலநூறு கதீஜாக்களையும் ஆயிஷாக்களையும் இச் சமூகத்தில் உருவாக்க வேண்டும். உரிமைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து சமூக நலனை மையமாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ள முஸ்லீம் பெண்களும் முன்வரவேண்டும். அதற்கான பாதைகளை திறக்க பெண்களே முன்வாருங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது.

1 comment:

  1. S L T J, SHEITHATHUPOL, MUSLIM PENGALAI, VEETHIYIL IRAKKI, AARPAATTANGALAI SHEIUM NOKKATHUDAN,
    THAYAVISHEITHU, EEDUPADAVENDAAM.

    ReplyDelete

Powered by Blogger.