Header Ads



ரணில் - சஜித் முரண்பாட்டினால் தேர்தலில் எமக்கு போட்டியாக யாரும் இல்லை

(எம்.ஆர்.எம்.வஸீம்)

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன கூட்டணி 150 ஆசனங்களை பெறுவது உறுதியாகும். ரணில், சஜித் இடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டினால் தேர்தலில் எமக்கு போட்டியாக யாரும் இல்லை என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கட்சி காரியாலயத்தில் இன்று -12- நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி 150 ஆசனங்களை பெற்று, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பது உறுதியாகும். எமக்கு போட்டியாக இன்று யாரும் இல்லை. எமக்கு சவாலாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்டிருக்கின்றது. அதனால் தேர்தலில் எமக்கு போட்டியில்லை. எங்களுக்குள்ளேயே போட்டியேட்படும்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முரண்பாடு தேர்தலில் இன்னும் எமக்கு சாதகமான நிலைமை ஏற்படலாம். இவர்களின் முரண்பாட்டினால் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் விரக்தியடைந்திருக்கின்றனர். அதனால் கிராமப்புரங்களில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் இம்முறை தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கூட்டணிக்கே வாக்களிப்பார்கள்.

அத்துடன் எமது தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தையே முன்னுக்கு கொண்டு செல்ல இருக்கின்றோம். அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்களை இன்னும் விரிவாக்கம் செய்து விரைவில் வெளியிடுவோம். தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்வதே எமது பிரதான கொள்கையாகும்.

மேலும் தேர்தலில் நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்ததுடன் மேற்கொள்ளவேண்டிய விடயங்களில் பிரதானமாக அரசியல் யாப்பை முழுமையாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டமாகும். தற்போது இருக்கும் அரசியலமைப்பை முற்றாக நீக்கிவிட்டு புதிய யாப்பொன்றை தயாரிக்கவேண்டும். அதில் தற்போது இருக்கும் தேர்தல் முறைமையை முற்றாக இல்லாமலாக்கவேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.