June 15, 2020

முஸ்லிம் குடும்பத்தோடு பெருநாள் கொண்டாடி, முற்போக்கு முகம் காட்டிய மங்கள அன்றும் இன்றும் (பின்னணித் தகவல்கள்)

-தசாவதாணி-

சமகால இலங்கை அரசியலின் சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவரான மங்கள சமரவீர பொதுத்தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டுள்ள செய்தி பேசுபொருளாக உள்ளது.

மங்கள சமரவீரவின் தந்தை மஹாநாம சமரவீர, சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்தவர் என்றவகையில் ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

மங்கள தொழில்முறையில் ஆடை வடிவமைப்பை முறையாக (லன்டனில்) கற்றுத்தேர்த்தவர். அந்தத் துறையில் தொழிலும் செய்தவர். 1989 ஆம் ஆண்டு மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியினூடாக பாராளுமன்றம் வந்தவர். 1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா அரசாங்கத்தில் முக்கிய புள்ளியாகத் திகழ்ந்தவர். அதேநேரம் 2005 ஆம் ஆண்டு சந்திரிக்காவிடம் இருந்து ஆட்சியையும் கட்சித் தலைமையையும் மகிந்த ராஜபக்‌ஷ பக்கமாக நகர்த்துவதற்கு அரும்பாடுபட்டவர்.

அதேபோல மகிந்த அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றார். ஆனாலும் சில காலங்களின் பின்னர் மகிந்த அவரையும் அவரது சகாவான ஶ்ரீபதி சூரியராச்சி உள்ளிட்டோரை பதவிகளில் இருந்து விலக்கவே தனியாகப் பிரிந்து சென்று ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி (மஹஜன) பொது மக்கள் பிரிவு எனும் கட்சியைத் தொடங்கினார். காரியம் ஆகவில்லை. அவரது அரசியல் எதிர்த்தரப்பான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சங்கமம் ஆனார். இத்தனைக்கும் ரணில் விக்கிரமசிங்கவை “மிஸ்டர் பீன்” என நையாண்டி செய்து சுவரொட்டிகளை ஒட்டியவரும் இவரே.

எனினும் இவரது திறமைகளை உணர்ந்த ரணில் விக்கிரமசிங்க அவரை ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்வாங்கிக்கொண்டதுடன் முக்கிய பொறுப்புகளையும் வழங்கினார். ஒரு கட்டத்தில் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சுப் பதவியை துறக்க நேர்ந்ததும் அந்த இடத்துக்கு மங்கள சமரவீரவை ரணில் நியமித்திருந்தார். ஊடகத்துறையையும் கூட அவர் வசமே கொடுத்தார்.

ஆடை வடிவமைப்புதான் அவரது துறை என்றாலும் அரசியல் மூளை நிறைந்தவர் மங்கள. நகர அபிவிருத்தி, தொழிநுட்பம், ஊடகம், வெளிவிவகாரம், நிதி என வேறுபட்ட துறைகளை கையாண்டு இருக்கக் கூடிய ஆளுமை மிக்கவர். ஆங்கிலப் புலமையும் மிக்கவர்.

வெளிப்படையாக பேசுவது மங்களவின் பலமான அம்சங்களில் ஒன்று. அதுவே அரசியலில் அவருக்கு பலவீனமாகவும் உள்ளது எனலாம். ரணில் குழுவினரை “வண்ணத்துப்பூச்சிகள்” என அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பகிரங்க மேடையில் விமர்சித்த போது அதற்கு பதிலாக “ அட்டையாக இருப்பதை விட வண்ணத்துப்பூச்சி யாக இருப்பது மேல் மிஸ்டர் ஜனாதிபதி “
(“I would rather be a butterfly than a leech Mr. President!!!” ) என பதிலடி கொடுத்தவர். தன்னை ஓர் தன்னினச் சேர்க்கையாளராக வெளிக்காட்டுவதில் தயக்கம் காட்டாதவர். அதே நேரம் இனவாதத்துக்கு எதிராகவும் துணிந்து குரல் கொடுப்பவர்.

இலங்கை போன்ற நாடுகளில் மதம் அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்தும் சூழலில் பௌத்த பிக்குகளுக்கு எதிரான பல கருத்துக்களை தொடர்ச்சியாக முன்வைத்த இவர் ஒரு கட்டத்தில் இலங்கை ஒரு பௌத்த நாடு இல்லை என்ற கருத்தையும் கூட கூறியிருந்தார். இதனால் அடிப்படைவாதிகளின் வசைபாடலுக்கும் உள்ளானார். பௌத்த மதத்தை மட்டுமல்ல ஈஸ்ட்டர் தாக்குதல்களை அடுத்து கத்தோலிக்க மதத் தலைவரான கார்தினல் மல்கம் ரஞ்சித் பௌத்தபிக்கு ஒருவரின் உண்ணாவிரத முன்றலுக்கு கார்டினல் சென்றதை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கினார். ஈஸ்ட்டர் தாக்குதலை அடுத்து வந்த இஸ்லாம் பெருநாள் தினம் ஒன்றில் முஸ்லிம் குடும்பத்தோடு பெருநாள் கொண்டாடி முற்போக்கு முகம் காட்டியவர். நவீன சமூக ஊடகமாக “ட்வீட்டர்” மூலம் உடனுக்குடன் கருத்துக்களைப் பகிர்வது இவரது வாடிக்கை.

இப்படி அண்மையில் அவர் வெளியிட்ட கருத்து ஒன்றே இன்றைய அரசியல் களத்தில் பேசுபொருளாக உள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் சமகி ஜனபலவேகய எனும் சஜித் தரப்பு ஐக்கிய தேசிய கட்சி அணியான ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அத்தகைய போட்டியில் இருந்து தான் விலகிக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளமையானது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தலில் போட்டியிடுவது பிரசாரம் செய்வது வெற்றிப்பெற்று பணி செய்வது அல்லது தோல்வியை தழுவி மீண்டும் போட்டியிடுவது, வெற்றிபெற்று கட்சி தாவுவது, தோல்வியடைந்து அணிமாறுவது போன்றன சாதாரணமாக இடம்பெறுவதுதான். இதனை ஏற்கனவே மங்கள செய்துமுள்ளார். ஆனால், போட்டியிடுவது என தீர்மானித்து ஒரு அணியில் களமிறங்கி பின்னர் அதில் இருந்து பின்வாங்கும் தீர்மானத்தை எடுப்பது குறிப்பாக மங்கள போன்ற அனுபவம் மிக்க அரசியல்வாதி ஒருவர் அத்தகைய தீர்மானத்தை எடுப்பது ஆச்சரியமான செய்திதான்.

இவ்வாறு வேட்பாளர்கள் இடைநடுவே இத்தகைய தீர்மானங்களை எடுப்பதற்கு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாரிய மன அழுத்தங்களே காரணமாகின்றன. நோய் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதுவும் மன அழுத்தம் தொடர்பான விளைவே. ஏனெனில், தேர்தலில் போட்டியிடும் அனுபவம் சிக்கல் நிறைந்தது. குறிப்பிட்ட கால எல்லைக்குள் இடம்பெறும் போட்டிச் சூழல், பண விரயம், நேரவிரயம், அவமானங்களை எதிர்கொள்ளல், உடற்சோர்வு, மனச்சோர்வு, உள்ளக முரண்பாடுகள், வெளியக முரண்பாடுகள் என பலவித மன உளைச்சலோடே அந்த காலகட்டம் நகரும்.

இத்தகைய காரணங்களால் புதிய ஒருவர் விலகிச் செல்வது இயல்பு எனினும் மங்கள சமரவீர போன்ற அனுபவம் மிக்க ஒருவர் விலகிச் செல்ல இதனை எல்லாம் தாண்டிய ஒரு ‘மன அழுத்தம்’ அவரை ஆட்கொண்டு இருத்தல் வேண்டும். அத்தகைய மன அழுத்தமாக அவதானிக்க கூடிய ஒன்று அண்மைக்காலமாக அவர் குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தமையை உடனடி காரணமாக கூறலாம். ஆனால், அதனையும் தாண்டி சஜித் அணியில் முழுமனதுடன் சங்கமித்தாரா என்பதும் சந்தேகமே. ரணில் அணியில் அவரை ஓரங்கட்டிய அல்லது பகிரங்கமாக விமர்சித்து வந்தவர் ரவி கருணாநாயக்க. ரவி ரணிலோடு இணைந்திருக்காத சந்தர்ப்பத்தில் மங்கள நிச்சயம் ரணில் அணியில் இணைந்து இருப்பார் என்பது அரசியல் சூழல் அவதானிப்புகளாக உள்ளன.

ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாவை எதிர்கொள்ள முடியாது என்ற காரணத்துக்காக அவர் சஜித் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாரே அன்றி, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பொறுப்பை சஜித் ஏற்று நடாத்த வேண்டும் என்ற மனநிலைக்கு மங்கள வந்திருக்கவில்லை. இருந்தும் பொதுத்தேர்தலில் ரணில் – சஜித் தரப்பை சமரசப்படுத்தி ஒரே அணியாகப் போட்டியிடச் செய்வதில் அக்கறை கொண்டவர்களில் மங்களவும் ஒருவர். ஆனால், அந்த முயற்சி சாத்தியமாகாத நிலையில் ஐக்கிய தேசிய கட்சியா ? ஐக்கிய மக்கள் சக்தியா? என குழப்பகரமான நிலையில் முடிவுகளை எடுத்து இறுதியில் சஜித் அணியில் போட்டி இட தீர்மானம் எடுத்தவர்களில் மங்களவும் ஒருவர்.

இப்போது அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருப்பதும், தேர்தல் அரசியலில் விலக எத்தனிப்பதும் கூட இத்தகைய மன அழுத்தங்களின் வெளிப்பாடே ஆகும். இத்தகைய தீர்மானத்தை அறிவிப்பதற்கு முன்பு ரணில் – சஜித் என இரண்டு தரப்பினதும் உயர்மட்டத்தினரை சந்தித்த பின்னரே அறிவிப்பு செய்திருப்பதாகவும் அவதானிக்க முடிகிறது.

இரண்டு பிரதான கட்சிகளிலும் பிரதான பொறுப்புகளில் இருந்த அனுபவம் மிக்கவரான மங்கள, அரசியல்வாதிகளைவிட கொள்கை ரீதியாக இலங்கை நாடு என்ற நிலைப்பட்டுடன் பணியாற்றாத பணித்துறை ஆட்சி ( Bearucgatrs) தொடர்பில் அதிகம் விரக்தி கொண்டவராக இருந்துள்ளார் என தெரிகிறது. அத்தகைய ஒரு பணித்துறையாட்சியை அதாவது கட்சி சார்ந்து இயங்காத அரச நிர்வாகத்தை உருவாக்கும் அரசியல் கலாசாரத்தை கட்டி எழுப்பக் கூடிய புதிய மார்க்கம் குறித்து அவரது சிந்தனை செயற்பட்டு இருப்பதை அரசியல் சூழலில் அவதானிக்க முடிந்தது. எனவே அவரது மன அழுத்தம் மன எழுச்சியின்பாற்பட்டது என்றும் கொள்ளலாம்.

மங்களவின் பிரதான பலவீனங்களில் ஒன்று ஜே.ஆரின் திறந்த பொருளாதார கொள்கையை முழுமையாக ஆதரிப்பது. 1994 ல் சந்திரிக்கா அரசு அமைந்தபோது ஐக்கிய தேசிய கட்சியின் தொடர்ச்சியான 17 ஆண்டு ஆட்சி மாற்றப்பட்டிருந்தது. அதன்போது திறந்த பொருளாதார கொள்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனது தாயார் பின்பற்றிய சுதேச பொருளாதார கொள்கையை அமுல்படுத்த சந்திரிக்கா எண்ணியபோதும் அதனை மறுத்து ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கமும் திறந்த பொருளாதார முறைமையை முன்கொண்டு செல்ல நாட்டம் காட்டியவர் மங்கள சமரவீரவே. இப்போது திறந்த பொருளாதார முறைமையின் மோசமான பக்கவிளைவாக வரக்கூடிய மோசமான பணித்துறையாட்சி பயிற்சிகளை சீரமைக்க அவர் எடுக்கும் முயற்சி அவர் நிலையில் காலதாமதமானதே. ஆனாலும் சிந்தனை சரியானதே. சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து அவர் இந்தப் பணிகளை முன்னெடுக்க உள்ளதாக அறிய முடிகிறது.

தேர்தலில் போட்டி இடுவதில் இருந்து இடைநடுவே விலகிக் கொள்ளும் முடிவை வேட்பாளர்கள் பலர் இதற்கு முன்னரும் எடுத்திருக்கிறார்கள். ஒரு முறை சிங்களத் திரைப்பட நடிகர் க்ளிட்டஸ் மெண்டிஸ் இத்தகைய முடிவை அறிவித்து விட்டு வெளிநாடும் ( தற்காலிகமாக) சென்றிருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகளின் போது, பொது மக்கள் அவருக்கு விருப்பு வாக்குகளை வழங்கியிருந்தனர். அவரை விலகிச் சென்றவர் என்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கவில்லை. தோல்வி அடைந்தவராகவே அறிவிக்கப்பட்டது.

தானாக விலகிச் சென்று விருப்பு வாக்கு வழங்க வேண்டாம் எனக் கேட்டு இருந்தாலும் மங்களவையும் விலகிச் சென்றவர் என தேர்தல் முடிவுகள் அறிவிக்காது.வெற்றி பெற்றதாக அறிவிக்கக் கூடிய விருப்பு வாக்குகளை அவர் பெறாவிட்டால் தோல்வி அடைந்தவராகவே அறிவிக்கப்படுவார்.

2 கருத்துரைகள்:

Gentlemen and honest person!

Post a comment