June 16, 2020

கொரோனாவை விட கருணா கொடியவன் - காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்

“சுமந்திரன் அரசியலில் நேர்சரி (அரிவரி) படிக்கின்றவர், அவருக்கு ஆளுமை இல்லை, பட்டாசு கொழுத்திப்போட்டால் மாரடைப்பால் செத்திடுவார்” என்றெல்லாம் பேசுகின்ற கருணா மனிதவர்க்கத்தை அழிக்கும் கொரோனாவை விட கொடியவராவார்.

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும், காரைதீவு பிரதேசசபை தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கூறியுள்ளார்.

அண்மையில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக கருணா அம்மான் தெரிவித்த விமர்சனத்திற்கு பதிலளித்து மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“எதிரியாக இருந்தாலும், துரோகியாக இருந்தாலும் விமர்சனம் எப்போதும் ஆரோக்கியமாக நாகரீகமாக இருக்கவேண்டும்.


ஆனால் கருணாவின் விமர்சனம் வேடிக்கையாகவிருக்கிறது. உலகமே சுமந்திரனின் ஆளுமைகண்டு வியக்கிறது.

இலங்கை அரசாங்கம் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மதிப்பளிப்பதற்கும், அச்சப்படுவதற்கும் ஒரு காரணியாக விளங்குபவர் சுமந்திரன்.

மரத்துக்கு மரம் தாவும் பறவைகள் போல இனி மாறுவதற்கு கட்சியே இல்லையென்ற ஒரு கோஸ்டிக்குப் பின்னால் திடீர் ஞான அக்கறை வந்து அம்பாறையில் களமிறங்கியுள்ள கருணா, கூட்டமைப்பை விமர்சித்தால் மக்கள் வாக்களிப்பர் என எண்ணி இப்படியான சிறுபிள்ளைத்தனமாக கருத்துகளை வெளியிடுகிறார்.

அரசியலூடாக அபிவிருத்தி என்றால் அது எந்த இடைத்தரகரும் இல்லாமல் நேராக அரசுடன் இணைந்து அல்லது ஆதரவளித்து முன்னெடுக்கமுடியும்.

இங்கு பல இடைத்தரகர்கள் காட்டியும், கூட்டியும் கொடுத்துத்திரிகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் இந்தப்புனித மண்ணில் அத்தகைய ஈனச்செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பிரதியமைச்சராக அல்லது கூ.கட்சியின் உபதலைவராக இருக்கின்றபோது கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல் உட்பட அம்பாறை மாவட்ட தமிழர் தேவைகளை பூர்த்திசெய்யாத அல்லது அதைப்பற்றிச் சிந்திக்காத கருணாவிற்கு தற்போது மட்டும் எங்கிருந்து இந்த சுடலைஞானம் வந்தது?

மட்டக்களப்பில் முடியாததை அம்பாறையில் முடிக்கலாமென பகற்கனவு காண்கிறார். அது ஒருபோதும் முடியாது.

காரைதீவு மண் புனித மண். இதனை மாற்றானுக்கு விற்பதற்காக சில பிரகிருதிகள் அற்பசலுகைக்கும், பணத்திற்குமாக பேயாய் அலைகின்றனர்.

எமக்கான உரிமையை நாமே கேட்டுப்பெறவேண்டுமே தவிர ஏனைய இன அரசியல்வாதிகள் அதனைத் தங்கத்தட்டில் வைத்துத்தரப் போவதில்லை.

ஆனால் எம்மவர் சிலர் பணத்திற்காக தேர்தல்கால கடைகளை நடுஊருக்குள் விரிக்கத்தொடங்கியுள்ளனர். காரைதீவு மக்களுக்கு இதெல்லாம் அத்துபடி. அனைத்தையும் அறிவார்கள்.

சமுகத்தில் செய்யக்கூடாததைச்செய்து முகவரி இழந்தவர்கள் மற்றும் முகவரி இல்லாதவர்கள் சேர்ந்து மனக்கோட்டை கட்டுகிறார்கள். அதுஒருபோதும் சரிவரப்போவதில்லை.

வீரப்போராட்டத்தை சிதைத்த வரலாறு அவருக்கிருப்பதுபோல அம்பாறைத் தமிழர்களின் இருப்பை அழித்த வரலாறு அவருடன் இணைந்தவர்க்கு வரக்கூடாது என்தே எனது எதிர்பார்ப்பு ஆகும்.

இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களது உரிமைகள் பற்றி தேர்தல் காலத்தில் மட்டுமல்லாது என்றும் பேசிவருவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே.

எனவேதான் தமிழ் மக்கள் தமது ஏகப்பிரதிநிதிகளாக எம்மை தொடர்ந்து ஆதரித்துவருகின்றனர்.

அம்பாறையில் எத்தனை கருணா கேட்டாலும் எமது பிரதிநிதித்துவம் பறிபோகாது. அம்பாறை தமிழ் மக்கள் பட்டறிவு படைத்தவர்கள்.

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் நிச்சயம் காப்பாற்றப்படும்.

அதுவும் எமது த.தே.கூட்டமைப்பினூடாகவே பெறப்படும் என்பதை தேர்தலுக்கு 50 நாட்களுக்கு முன்னராகவே கூறுகிறேன். யாரும் குறித்துக்கொள்ளலாம்.

அரசியலுக்காக எதையும் பேசலாமென எண்ணக்கூடாது.சுமந்திரனை விமர்சிப்பதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

இனியாவது எதிராளியை நாகரீகமாக ஆரோக்கியமாக விமர்சிக்க அவர் பழகிக்கொள்ளவேண்டும்” என்றார்.

1 கருத்துரைகள்:

இந்த கதையை கேட்டு விட்டு கருணா கடலில் விழுந்து மாழ வேண்டும்

Post a comment