Header Ads



முதலிரவில் கொல்லப்பட்ட மணமகள், - மணமகனின் அதிர்ச்சிப் பின்னணி

(விகடன்)

முதலிரவில் மணமகளின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் கதவைத் தட்டியபோது, 'ஒன்றும் இல்லை' என மணமகன் சமாளித்துள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் அவர் கதவைத் திறந்துகொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் சடையான் குப்பத்தைச் சேர்ந்தவர் சந்தியா (22). இவருக்கும் மீஞ்சூர் அருகே சோமஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நீதிவாசன் (28) என்ற இளைஞருக்கும், கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் உறவினர்கள். நீதிவாசன், கூலி வேலை செய்துவந்தார். சில காரணங்களுக்காக திருமணத் தேதி தள்ளிப்போனது. கொரோனாவால் திருமணத்தை நடத்துவதில் இருவீட்டினருக்கும் சிரமம் ஏற்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் சந்தியாவும் நீதிவாசனும் மணிக்கணக்கில் போனில் பேசி தங்களின் காதலை வளர்த்துவந்தனர்.

இந்த நிலையில், இருவீட்டினரும் பேசி நேற்று காலை சந்தியாவுக்கும் நீதிவாசனுக்கும் திருமணத்தை எளிமையான முறையில் நடத்திவைத்தனர். பின்னர், இருவருக்கும் மணமகன் வீட்டிலேயே முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மணமகன் நீதிவாசனும் மணமகள் சந்தியாவும் அறைக்குள் சென்ற சில மணி நேரத்தில் சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டது. அதனால் உறவினர்கள் கதவைத் தட்டி என்னவென்று விசாரித்துள்ளனர். அப்போது அறையின் கதவைத் திறந்த நீதிவாசன், `ஒன்றுமில்லை, சும்மாதான் சந்தியா சத்தம் போட்டாள்' என்று சிரித்தபடி கூறியுள்ளார். அதனால் உறவினர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதையடுத்து, சில மணிநேரத்தில் கதவைத் திறந்துகொண்டு வேட்டியுடன் நீதிவாசன் ஓட்டம் பிடித்தார். அதைப் பார்த்த உறவினர்கள், ஒன்றுமே புரியாமல் திகைத்து நின்றனர். பின்னர், மணமகள் சந்தியாவைப் பார்க்க அறைக்குச் சென்றனர். அங்கு, ரத்த வெள்ளத்தில் ஆடைகள் கலைந்த நிலையில் சந்தியா மூச்சுபேச்சு இல்லாமல் கிடந்தார். பின்னர், சந்தியாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதுதான் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. மணமகன் நீதிவாசன் எங்கு சென்றார் என இரவில் உறவினர்கள் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

முதலிரவில் மணமகள் சந்தியா இறந்த தகவல் காட்டூர் காவல் நிலையத்துக்குக் கிடைத்ததும், அவரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விடிந்த பிறகுதான், நிர்வாண நிலையில் வேட்டியால் மணமகன் நீதிவாசன் தூக்குப் போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவள்ளூர் மாவட்ட போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சந்தியாவுக்கும் நீதிவாசனுக்கும் ஜனவரியில் திருமணத்தை நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட சில தடைகள் காரணமாக திருமணம் தள்ளிப்போனது. இந்தச் சமயத்தில்தான் நீதிவாசன், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்த நீதிவாசன், அமைதியாக இருந்துவந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்களாக அவர் மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடவில்லை.

அதனால் நீதிவாசனின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கியுள்ளன. அப்போது திருமணம் செய்துவைத்தால் எல்லாமே மாறிப் போய்விடும் என நீதிவாசனின் குடும்பத்தினர் நினைத்துள்ளனர். அதனால் நீதிவாசனுக்கும் சந்தியாவுக்கும் திருமணத்தை நடத்திய குடும்பத்தினர், முதலிரவுக்கும் மணமகன் வீட்டிலேயே ஏற்பாடு செய்தனர். நள்ளிரவில் மணமகள் சந்தியா சத்தம் போட்டதும் குடும்பத்தினர் மணமகன் நீதிவாசனிடம் விசாரித்துள்ளனர். அவர் அளித்த பதிலைக் கேட்டு சமாதானமாகியதால், சந்தியாவை கடப்பாரையால் குத்தி கொலை செய்த நீதிவாசன், பிறகு தானும் தற்கொலை செய்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.

உளவியல் நிபுணர் அபிசங்கரியிடம் பேசினோம். ``உடல் நலத்தைப்போல மனநலமும் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியம். பொதுவாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றிருப்பார்கள். ஆனால், அதை வெளியில் சொல்ல மாட்டார்கள். திருமணம் என்பது இருமணங்கள் இணையக்கூடிய ஒரு நிகழ்வாகும். அதனால் திருமணம் செய்துகொள்பவர்கள், சமூக அந்தஸ்து, ஜாதகம், வேலை ஆகியவற்றை விசாரிப்பதைப் போல மனநலம் குறித்தும் விசாரிக்க வேண்டும். மணமகளும் மணமகனும் திருமணத்துக்கு முன்பே கவுன்சலிங் பெறுவது சாலச்சிறந்தது. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சலிங் மற்றும் சிகிச்சைக்குப்பிறகு திருமணம் செய்து வைக்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த சம்பவத்தில்கூட மணமகனுக்கு மனநல பிரச்னைகள் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மனநல பாதிப்புள்ளவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தால் பிரச்னைகள் சரியாகிவிடும் என குடும்பத்தினர் கருதுவது தவறு. காய்ச்சல், தலைவலிக்கு தைரியமாக சிகிச்சைபெறுபவர்கள், மனநலம் தொடர்பான சிகிச்சைக்கு தயக்கம் காட்டிவருகின்றனர். மனநலம் தொடர்பான சிகிச்சைகளை ரகசியமாகத்தான் பெறும் சூழல் நிலவுகிறது. இல்லையெனில், அதை மூடிமறைக்க முயல்கின்றனர். அதுவே விபரீதத்தை ஏற்படுத்தும் நிலைக்குத் தள்ளிவிடுகிறது. எனவே, மனநலனிலும் ஒவ்வொருவரும் அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக, திருமணத்துக்கு முன்பு மணமகளும் மணமகனும் தங்களுக்குத் தெரிந்த மனநல ஆலோசகர், மருத்துவர்களிடம் கவுன்சலிங் பெற்றால், அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும். தற்போதைய சூழலில் கோவிட் 19 பயத்தால் ஒவ்வொருவரும் மனஅழுத்தத்தில் உள்ளனர். அவர்களும் கவுன்சலிங் பெற வேண்டும்" என்றார்.

No comments

Powered by Blogger.