Header Ads



சஜித்தின் பிரதமர் கனவு, ஆகஸ்ட் 6 ஆம் திகதியாகும்போது கலைந்துவிடும் - பிரசன்ன

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி கனவு கலைந்ததுபோல் தேர்தலுக்கு பின்னர் பிரதமர் கனவும் கலைந்துவிடும். அத்துடன் ஆகஸ்ட் 6 ஆம் திகதியாகும்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியும் இல்லாமல்போகும் நிலை ஏற்பட்டுள்ளது என சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மினுவங்கொடை பிரதேசத்தில் இன்று -26- இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சி பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது. என்றாலும் மக்கள் ஒருபோதும் இவர்களின் பொய் பிரசாரங்களை ஏற்றுக்காெள்ளப்போவதில்லை.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த நிலையிலே இந்த அரசாங்கத்தை நாங்கள் பொறுப்பேற்றோம். வீழ்ச்சியுற்றிருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இணைப்பின் மூலம் மாத்திரமே முடியும்.

அதனால் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் நாட்டின் பிரதமராகுவது மஹிந்த ராஜபக்ஷவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தேர்தலில் சஜித் பிரேமதாச பிரதமராகுவார் என சிலர் தெரிவித்துவருவதை நான் காண்கின்றேன். சஜித் பிரேதமதாசவின் முதலாவது கனவு ஜனாதிபதி, அதன் பின்னர் தற்போது பிரதமர். அவரின் ஜனாதிபதி கனவு கலைந்துவிட்டது. தேர்தலுக்கு பின்னர் பிரதமர் கனவும் கலைந்துவிடும். அதேபோன்று ஆகஸ்ட் 6ஆம் திகதியாகும்போது அவரின் எதிர்க்கட்சி தலைவர் பதவியும் இல்லாமல்போகும் நிலையே இருந்துவருகின்றது.

நாட்டில் ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பிரதமர் வேறு கட்சியிலும் இருந்ததன் மூலம் இந்த நாடு சீரழிந்ததை மக்கள் மறந்துவிடவில்லை. அவ்வாறான அரசாங்கம் ஒன்றை அமைக்க மக்கள் தயாரில்லை. அதனால் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று நிலையான அரசாங்கம் ஒன்றை நாங்கள் அமைப்பாேம். அதன் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தினால் சீரழித்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம்.

எனவே முடியாது என்ற 30 வருட யுத்தத்தை வெற்றிகொண்டோம். முழு உலகமும் அச்சத்தில் இருந்த கொராேனா வைரஸை கட்டுப்படுத்திய கோத்தா, மஹிந்த இணைப்பின் மூலம் அல்லாமல் வேறு யாருக்கும் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. அதனால் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தேர்தலில் வாக்களிக்கவேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.