Header Ads



2011 உலகக் கிண்ணம் - வெற்றிவாய்ப்பு அதிகமிருந்த, இலங்கை அணி தோல்வியடைந்தமை ஆச்சரியமே

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆதாரங்களை பகிரங்கப்படுத்துவது நல்லது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அணி, இந்திய அணியுடன் மோதிய இறுதிப் போட்டியில் வெற்றிவாய்ப்பு அதிகமாக இலங்கை அணிக்கே இருந்த நிலையில் எவ்வாறு தோல்வி ஏற்பட்டது என்பது ஆச்சரியமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கூட்டம் நேற்றைய -19- தினம் கண்டியிலுள்ள விடுதியொன்றில் நடைபெற்றிருந்தது.

இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகர தலைமை வகித்திருந்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை - இந்திய அணிகள் மோதிய நிலையில் அதில் வெற்றிவாய்ப்பு இலங்கை அணிக்கு அதிகமாக இருந்த போதிலும் ஆட்டநிர்ணய சதியினால் இலங்கை அணி தோல்வியுற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தயாசிறி ஜயசேகர,

அவ்வாறு ஆட்டநிர்ணயம் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பகிரங்கப்படுத்த வேண்டும்.

ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றிருப்பதாக மஹிந்தானந்த அளுத்கமகே கருத்து வெளியிட்டிருக்கின்றார். நான் அந்த கால கட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிவகிக்கவில்லை.

அவரிடம் இதுகுறித்த தகவல்கள் இருந்தால், ஆட்டநிர்ணயம் இடம்பெற்றமைக்கான ஆதாரங்களுக்கான ஆவணங்கள் இருந்தால் அவற்றை அவர் பகிரங்கப்படுத்த வேண்டும்.

இந்த நிகழ்வு எப்படி இடம்பெற்றது என்பதுபற்றி எனக்குத் தெரியாது. ஆனால் 2011ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டிய போட்டியாகத்தான் அமைந்திருந்தது.

ஆனால் எவ்வாறு தோல்வியடைந்தோம் என்பதுதான் தெரியவில்லை. ஆட்டநிர்ணயம் இடம்பெற்றதாக நான் இதுவரை தெரிவிக்கவில்லை.

No comments

Powered by Blogger.