Header Ads



1000 வருட பெருமையுள்ள சிங்கள முஸ்லிம் சமூக உறவுக்கு கண்டி மாவட்டத்தில் வித்திடுவேன்

(ஐ.ஏ. காதிர் கான்)

கண்டி மாவட்டத்தில் ஆயிரம் வருட பெருமையுள்ள சிங்கள முஸ்லிம் சமூக ஒற்றுமைக்கு உழைக்கவே அரசியலில் குதித்துள்ளேன். தொடர்ந்தும் வரக்கூடிய அரசாங்கத்தில் அதற்கான உத்தரவாதத்தை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது வழிகாட்டலின் கீழ் மேற்கொள்வேன். இம்முறை ஜனாதிபதியின் விசேட வேண்டுகோளுக்கு இணங்கவே, கண்டி மாவட்டத்தில் நான் களமிறக்கப்பட்டுள்ளேன். இது எனக்கும் இம்மாவட்ட அனைத்து இன மக்களுக்கும் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும் என, கண்டி மாவட்ட பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார். 

உடுநுவர தொகுதி வாழ் சிங்கள மக்களுடனான பல்வேறு சந்திப்புக்கள், தொகுதியின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்றன. இச் சந்திப்புக்களின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
லங்காதிலக்க பிரிவின் (மேலதிக பட்டியல்) வேட்பாளர் காமினியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளின் போது, வேட்பாளருக்கு சிங்கள மக்களின் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்தது. அவருக்குத் தங்களது பூரண ஆதரவுகளை வழங்குவதாகும் இதன்போது சமூகமளித்திருந்தோர் உறுதியளித்தனர். 

அன்றைய தினம் வேட்பாளர் பாரிஸ், காலையில் உடுநுவர தொகுதியில் அமைந்துள்ள பௌத்த விகாரைகளின் தேரர்களையும், மாலையில் உடுநுவர பிரதேச வாழ் மக்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. 

இங்கு அவர் மேலும் பேசியதாவது, நான் இன மத மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டவன். என்னிடம்; பிரதேசவாதமோ அல்லது குறிப்பிட்ட ஒரு சிலருக்குத்தான் சேவை செய்ய வேண்டும் என்ற குறுகிய எண்ணமோ கிடையாது. ‘எல்லோரும் எனது சொந்தங்;களே’ என்ற உயரந்த இலக்கில் பொதுவாக சேவை செய்ய வேண்டும் என்பதே எனது பிரதான குறிக்கோளாகும். நான் பாராளுமன்றம் சென்றால், கண்டி மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க இயலுமான வரை முயற்சிப்பேன். இந்தச் சிந்தனையே என்னை அரசியலுக்குள் அழைத்து வந்துள்ளது. 

எனவே, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு அமோக ஆதரவு வழங்கி, பலம்வாய்ந்த அராங்கம் ஒன்றை அமைக்க கை கோர்க்க முன்வருமாறு கண்டி மாவட்ட மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

No comments

Powered by Blogger.