May 12, 2020

கொரோனாவுக்கு பல மாதங்கள், சிலவேளை சில வருடங்கள் முகங்கொடுப்பதற்கு உலகம் தயாராகவேண்டியிருக்கிறது - WHO பிரதம விஞ்ஞானி சௌமியா எச்சரிக்கை

தற்போதைய கொவிட்-19 வைரஸ் தொற்றுநோய்க்கு பல..பல மாதங்களுக்கு,  சிலவேளை சில வருடங்களுக்கு முகங்கொடுப்பதற்கு முழு உலகுமே தயாராகவேண்டியிருக்கிறது என்று கூறியிருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், தடுப்புமருந்தை  கண்டுபிடித்து பரீட்சித்து பார்ப்பது மாத்திரம் போதுமானதல்ல, அதை தயாரித்து  பெருமளவில்  கொள்வனவு செய்யக்கூடியதாகவும் சுகாதாரக் கட்டமைப்புகள் அவற்றை  மக்களுக்கு கொடுக்கக்கூடியதாகவும் இருப்பதுமுக்கியமானதாகும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

புதுடில்லியில் திங்களன்று தேசிய தொழில்நுட்ப தினத்தை முனனிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மகாநாட்டில்  உரையாற்றிய டாக்டர் சுவாமிநாதன், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது  கொரோனாவைரஸ் தொற்றுக்குள்ளாவோரினதும் அதனால் மரணமடைபவர்களினதும் எண்ணிக்கையை மிகவும் குறைவாக வைத்திருப்பதற்காக இந்தியாவைப் பாராட்டியதுடன் கொவிட்-19 நோய்க்கான தடுப்புமருந்தை கண்டபிடிப்பதில் இந்தியா முக்கியமான பங்கொன்றை வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

" இந்தியாவில் கொவிட் தொற்றுநோயை இதுவரையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும் தொற்றுக்குள்ளாவோர் மற்றும் மரணமடைவோரின் எண்ணிக்கையை மிகவும் குறைந்த  மட்டத்தில் வைத்திருப்பதற்காகவும்  அமைச்சரையும் அவரது சகாக்களையும் பாராட்டுவதுடன் வாழ்த்துகின்றேன்" என்றும் அவர் சொன்னார்.

மத்திய விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உட்பட பங்கேற்ற  பங்கேற்ற சகலரும் வீடியோ மூலம் உரையாற்றினர்.

" நாங்கள் தற்போது ஓடிக்கொண்டிருப்பது ஒரு மரதன் என்பது எமக்கு தெரியும்.இது குறுந்தூர ஓட்டம் அல்ல.இந்தியாவும் உண்மையில் முழு உலகமும் தற்போதைய தொற்றுநோய்க்கு பல...பல மாதங்கள் ..... சிலவேளை வருடங்களுக்கு முகங்கொடுக்கத் தயாராகவேண்டியிருக்கிறது " என்று டாக்டர்  சுவாமிநாதன தனதுரையில ் குறிப்பிட்டார்.திங்கட்கிழமை மட்டில் உலகில் கொவிட் --19 நோயின் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 39,76,043 என்றும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,77,708 என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிரங்கள் தெரிவித்தன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பணிப்பாளர் நாயகமாக முன்னர் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான டாக்டர் சுவாமிநாதன் " "மிகையான சனத்தொகை, மக்கள் நெருக்கமாக வாழும் பல நகரங்கள், கிராமப்புறங்களில் போதிய சுகாதாரப்பராமரிப்பு வசதிகள் இன்மை என்று இந்தியா பல சவால்களை எதிர்நோக்குகிறது.பொதுசுகாதாரக் கண்காணிப்பையும் அடிப்படைச் சுகாதாரப்பராமரிப்பு சேவையையும் நாம் பலப்படுத்தவேண்டிய நேரம் இது.சுகாதாரசேவை பணியாளர்களையும் அதிகரித்து பலப்படுத்தவேண்டும்." என்று வலியுறுத்தினார்.

தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு

கொவிட் --19 நோய்க்கான தடுப்புமருந்து கண்டுபிடிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த சுவாமிநாதன் இந்தியாவில் விருத்திசெய்யப்மடுகின்ற பல தடுப்புமருந்து மாதிரிகள் பரிசீலனைக்கு முன்வைக்கப்பட்டிருக்கின்றன.சில தடுப்பு மருந்து மாதிரிகள் வேறு குழுக்களுடன் கூட்டுச் சேர்ந்தும் வேறு சில மாதிரிகள் தனியாகவும் விருத்திசெய்யப்படுகின்றன.தடுப்புமருந்து கண்டுபிடிப்பில் இந்தியா முக்கியமான பங்கொன்றை வகிக்கும். தடுப்புமருந்தை விருத்திசெய்யும் செயன்முறைகளில் இந்தியா ஒரு அங்கமாக இல்லையென்றால், சகலருக்கும் போதுமான தடுப்புமருந்துகள்  உலகினால் பெற்றுக்கொள்ளமுடியாமல் போகும் என்று சொன்னார்.

தடுப்புமருந்தொன்றைக் கண்டுபிடித்து விருத்திசெய்வதற்கு வழமையாக  பத்துவருடங்கள் செல்லும்.ஆனால், இபோலா தடுப்பு மருந்து ஐந்து வருடங்களில் விருத்திசெய்யப்பட்டது.

 " ஒரு வருடத்திற்குள் அல்லது சற்று கூடுதலான காலத்திற்குள் ( கொரோனாவைரஸ் )தடுப்புமருந்தை கண்டுபிடித்துவிடவேண்டும் என்பதே நோக்கமாகும்.அல்லது அதையும் விட குறைவான காலகட்டத்திற்குள் சாத்தியமானால் கண்டுபிடித்துவிடவேண்டும்.அறிவை, வளங்களை, கருவிகளை, பரீட்சித்துப் பார்ப்பதற்கான சோதனைகளை செய்வது தொடர்பில் சிந்தனைகளை ஒன்றுதிரட்டி பகிர்ந்துகொள்தல்  போன்ற உலகளாவிய ஒத்துழைப்பு தடுப்புமருந்தை விருத்திசெய்யும் ஙெயன்முறைகளுக்கு அவசியமானவையாகும்.இவற்றில் சில முயற்சிகள் வெற்றியளிக்கும்  என்று நம்பிக்கை கொண்டுள்ளேன்" என்றும் அவர் சொன்னார்.

தடுப்புமருந்து முதலில் கொடுக்கப்படவேண்டிய பிரிவினரை, அதாவது மிகவும்  கூடுதலானளவுக்கு வைரஸினால் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்போரை அடையாளம் காணவேண்டும்.முன்னரங்கத்தில் நின்று செயற்படுகின்ற பணியாளர்கள் மற்றும் நோயுற்ற நிலையில் இருப்பவர்களும் இதில் அடங்குவர்.முன்னுரிமை கொடுத்துக்கவனிக்கப்படவேண்டியவர்களை அடையாளம் காண்பதற்கு கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் டாக்டர் சுவாமிநாதன் குறிப்பிட்டார்.

0 கருத்துரைகள்:

Post a Comment