Header Ads



கட்சி யாப்பை மீறி வேறு அரசியல் கட்சிகளில், வேட்புமனுத் தாக்கல் செய்தோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை - ஐ.தே.க.

(எம்.மனோசித்ரா)

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பலர் வேறு அரசியல் கட்சியின் உறுப்புரிமையை பெற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கட்சியின் செயற்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் இவ்வாறு செயற்படுவது கட்சி யாப்பை மீறும் செயலாகும்.

எனவே கட்சி யாப்பை மீறி செயற்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐ.தே.க.பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டிருக்கும் அவர் அதில் மேலும் கூறியிருப்பதாவது :

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பலர் வேறு அரசியல் கட்சியின் உறுப்புரிமையை பெற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேறு அரசியல் கட்சி ஊடாக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அல்லது செய்யவுள்ள எந்தவொரு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரும் கட்சி யாப்பின் 3(உ) உறுப்புரைக்கு அமைய கட்சியின் செயற்குழுவின் உத்தியோகபூர்வ அனுமதியைப் பெற வேண்டும்.

சர்ச்சைக்குரிய உறுப்பினர்கள் யாரும் மேற்கூறப்பட்ட கட்சி யாப்பின் 3(உ) உறுப்புரைக்கு அமைய செயற்படவில்லை என்பதோடு இ அவர்கள் கட்சியின் செயற்குழுவின் அனுமதியையும் பெறவில்லை.

அவ்வாறு கட்சி யாப்பை மீறி செயற்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு எதிராக  யாப்பின் 3(h) உறுப்புரையின் கீழ் நீண்டகாலமாகக் காணப்படும் கட்சியைப் பாதுகாப்பதற்காக கட்சி தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டியேற்பட்டுள்ளது.

இது வரையில் வேறு கட்சிகளின் அங்கத்துவத்தைப் பெற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ள பல உறுப்பினர்கள் இந்த தீர்மானம் தொடர்பில் ஆராய்ந்து மீண்டும் எம்முடன் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் கட்சி யாப்பின் 3(h) உறுப்புரையின் கீழ் வேறு கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களிடம் அது தொடர்பில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த உறுப்பினர்கனால் அறிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் தினங்களில் கூடவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அமர்வுகளில் பொறுத்தமான தீர்மானம் எடுக்கப்படும்.

1 comment:

Powered by Blogger.