May 02, 2020

அரசாங்கத்தின் அரசியல் பித்தலாட்டங்களுக்கு துணைபோகப் போவதில்லை

(நா.தனுஜா)

அரசாங்கத்தின் அரசியல் பித்தாலாட்டங்களுக்கு துணைப்போக போவதில்லை. கடந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் திங்கட்கிழமை கூட்டமொன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், அதனைத் தாம் புறக்கணிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருக்கிறது.

இது குறித்து அதன் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தற்போதைய சூழ்நிலையில் இத்தகையதொரு கூட்டத்தில் கலந்துகொள்ளும் எண்ணம் எமக்கு இல்லை என்பதுடன் முன்னாள் சபாநாயகரின் தலைமையில் பாராளுமன்றத்தைக் கூட்டுவதொன்றே இப்போது நடைமுறைச் சாத்தியமான செயலாக அமையும் என்பதையும் நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.

மீண்டும் பழைய பாராளுமன்றத்தைக் கூட்டுவதில்லை என்பதில் ஜனாதிபதியும் அரசாங்கமும் உறுதியாக இருக்கும் அதேவேளை தமக்குச் சார்பான ஊடகங்களைப் பயன்படுத்தி அதற்கான பிரசாரங்களையும் முன்னெடுத்துச் செல்கின்றனர்.

அவ்வாறிருக்கையில் தற்போது அதே பழைய பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருடன் கூட்டமொன்றுக்கு அழைப்புவிடும் அரசின் இரட்டை வேடம் விசனமளிக்கிறது.

நாட்டில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததிலிருந்து நாம் ஒரு பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாகவே செயற்பட்டு வருகின்றோம்.

ஜனவரி 24 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி 25 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகளின் போதும் நாம் இதுபற்றி சுட்டிக்காட்டினோம். எனினும் அப்போதும் அரசாங்கம் அசமந்தமாகவே செயற்பட்டுக் கொண்டிருந்தது.

நிலைமை மோசமடையத் தொடங்கின பின்னர் கட்சித்தலைவர்களை ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் நாம் கலந்துகொண்டிருந்தோம்.

அதுமாத்திரமன்றி மிகவும் பொறுப்பு வாய்ந்த எதிரணியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கல், நிவாரணம் வழங்கலை அரசியல் மயப்படுத்துவதிலிருந்து தவிர்த்தல், பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும் அரசாங்கத்திற்கு வழங்கினோம்.  எனினும் அந்த யோசனைகளை அரசாங்கம் கவனத்திலெடுக்காமை குறித்து கவலையடைகிறோம்.

மேலும் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதுடன் சமூகவலைத்தள செயற்பாட்டாளர்களைக் கைது செய்தது. அதுமாத்திரமன்றி தமக்கு நெருக்கமானவர்களுக்கு 'வணிகர்களுக்கான ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை' வழங்கியதுடன் நிவாரணப் பொருட்களை வழங்குவதிலும் அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்கே முற்பட்டது.

சுமார் ஆறுவார காலமாக மக்கள் மிகவும் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் செயலாற்றினார்கள். அதற்குள் அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் செயற்பட்டார்கள்.

ஆனால் ஆறுவார காலத்தில் அரசாங்கத்தினால் அதனைச் செய்ய முடிந்திருக்கிறதா? உண்மையில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு தொடர்ச்சியான அதிகரிப்பே ஏற்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் பிரிவினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

இதிலிருந்து சுகாதார நெருக்கடியைக் கையாள்வதற்கான முறையான வசதிகள்  பயிற்சிகள் இல்லாமலேயே அவர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது தெளிவாகிறது.

அத்தோடு தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிநிலையில் எவ்வித அரசியல், கட்சிபேதங்களுமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தி நாம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்த கடிதத்திற்கு எவ்வித துலங்கலும் காண்பிக்கப்படாத நிலையிலேயே, நாளைய தினம் பிரதமர் தலைமையில் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் இத்தகையதொரு கூட்டத்தில் கலந்துகொள்ளும் எண்ணம் எமக்கு இல்லை என்பதுடன் முன்னாள் சபாநாயகரின் தலைமையில் பாராளுமன்றத்தைக் கூட்டுவதொன்றே இப்போது நடைமுறைச் சாத்தியமான செயலாக அமையும் என்பதையும் நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.

0 கருத்துரைகள்:

Post a comment