Header Ads



சுகாதார பாதுகாப்புடன் தேர்தலை நடாத்துவதற்கு வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை அடுத்தவாரம்

(எம்.எப்.எம்.பஸீர்)

தற்போதைய சுகாதார நிலைமையின் கீழ், எதிர்வரும் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டல் அறிக்கையை அடுத்த வாரத்திற்குள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார பாதுகாப்புடன் கூடிய தேர்தல் ஒன்றினை நடாத்துவது எப்படி என்பதை தீர்மானிக்கவும் அது தொடர்பிலான வழி காட்டல்களை தயாரிக்கவும்  மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே, அக்குழு முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கமைய இந்த அறிக்கை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த குழுவானது, முதலில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன்  கலந்துரையாடலை நடாத்தவுள்ளது. அதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அவசியமான விடயங்கள் குறித்த தெளிவைப்பெற்று அதற்கு ஏற்றாற்போல்,  சுகாதார பாதுகாப்புடன் கூடிய தேர்தலுக்கான வழிகாட்டல்களை தயார் செய்ய ஆரம்பித்த நிலையில், அது குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் வெளிப்பிரிவு மற்றும் தொழில்சார் சுகாதார பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்தார்.

இதனடிப்படையில், வாக்களித்தல், வாக்குகளை எண்ணுதல், பிரசாரங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து வழிகாட்டல் அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினூடாக இந்த அறிவுறுத்தல்களுக்கமைய தேர்தல் நடத்தப்படுமென சுகாதார அமைச்சின் வெளிப்பிரிவு மற்றும் தொழில்சார் சுகாதார பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர்  லக்ஷ்மன் கம்லத் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.