May 20, 2020

இலங்கையில் உள்ள உலமாக்களும், இதுபற்றி சிந்திக்கலாமோ...?

தாருல் உலூம் தேவ்பந்த் பல்கலை கழகத்தின் ஹதீஸ் துறை வல்லுநர்களில் பெரும்புகழ் பெற்ற மவ்லானா ஸஈது அஹ்மது பாலன்பூரி தமது திர்மிதீ நூல் விரிவுரையை முடித்துக்கொண்டு கல்வியாண்டின் இறுதியில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் கூறிய சொற்கள் காலத்திற்கும் மார்க்கப் பணியாளர்கள் உணர்ந்து பின்பற்றத் தேவையானதாகும்.

"மாணவர்களே! இந்த ஆண்டோடு மார்க்கக் கல்வியை முடித்துக்கொண்டு சமுதாய சேவைக்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளப் போகிறீர்கள்.

ஆனால் உங்கள் வாழ்க்கை நிலை குறித்த கவலை இப்பொழுதே உங்களை ஆட்படுத்தத்தொடங்கி விட்டது.

நமது கல்வித்தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு கிடைக்குமா?

வேலை வாய்ப்பு கிடைத்தாலும் அதற்கேற்ற ஊதியம் கிடைக்குமா?

அவ்வூதியம், வாழ்வின் பெரும் பொருளாதாரச் சுமையை இறக்கி வைக்க உதவுமா?

இவ்வாறு எண்ணற்ற கேள்விகள் உங்களை அரித்துக் கொண்டிருப்பதை நானறிவேன்.

ஆனால் உங்களின் சமுதாய சேவைக்காக தகுதி மிகு தளங்களை மட்டும் நீங்கள் கைப்பற்ற முனையுங்கள்.

ஊதியம் குறித்து நினைத்துப் பார்க்காதீர்கள்.

ஏனெனில் செல்வத்தை வழங்குவதற்கு அல்லாஹ்வுக்கு ஊதியம் மட்டுமே வழியல்ல.

என் நிலையை எடுத்துக் கொள்ளுங்கள்.

தாருல் உலூம் பல்கலைக் கழக ஷைகுல் ஹதீஸ் களில் ஒருவன் நான்.

ஆனால் இங்கு நான் பெறக்கூடிய ஊதியத்தை வைத்து பல மக்களை பெற்றுள்ள எனது வீட்டில் காலை உணவு கூட சாப்பிட முடியாது.

ஆனாலும் நான் வசதியோடிருக்கிறேன் என்றால் அல்லாஹ் எனக்கு வேறு வழி முறைகளில் செல்வத்தை வழங்குகிறான்.

தர்க்க சாஸ்திரம், தத்துவம் போன்ற துறைசார்ந்த, சிக்கல் மிகுந்த நூல்களுக்கும், கருத்து வேறுபாடுகள் மிகுந்த மார்க்க நிலைப்பாடுகளுக்கும் விளக்கவுரை நூல்கள் எழுதுகிறேன்.

உருது மொழியில் ஒரு திருக்குர்ஆன் விளக்க உரை நூலை பெரும் பிரயத்தனத்துடன் தொகுத்துக் கொண்டிருக்கிறேன்.

விடுமுறை நாட்களில் பொது மக்களிடம் இஸ்லாமியப் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறேன்.

எனது சேவையின் தேவையுணர்ந்த மக்கள் லண்டன், தென்ஆப்பிரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கும் என்னை அழைத்துச் செல்கிறார்கள்.

எனது நூல்களையும் மற்றவர்களின் நூல்களையும் விற்பனை செய்ய நூல் விற்பனையகம் ஒன்றை எனது மகன்களை வைத்து நிர்வகிக்கிறேன்.

இவற்றின் மூலம் எனது செலவினங்கள் போக என்னால் சேமிக்கவும் முடிகிறது.

ஆனால் ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள். இவையனைத்தும் தாருல் உலூமுக்கு நான் செய்து வரும் முடிந்தளவு நிறைவான பணிவிடைக்குப் பலனாக அல்லாஹ் வழங்கியது தான்.

ஊதியம் குறைவாக வழங்குகிறார்கள் என்பதற்காக எனது மாணவர்களுக்கு நான் செய்யும் கல்விச் சேவையை குறைத்துக் கொள்ளவில்லை. அல்லாஹ்வும் குறைவின்றியே என்னை வாழ வைத்துள்ளான்."

கல்விப் பேரொளியான அப்பெருந்தகை (அல்லாஹ் அவர்களின் ஆயுளை நீட்டித்தருள்வானாக!) யின் பொன் மொழிகள் சமுதாய வாழ்வில் நுழையப் போகும் இளம் ஆலிம்களின் உள்ளத்தில் புதுத் தெம்பை ஊற்றெடுக்கச் செய்ததென்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மிக்தாம் பின் மஃதீகரப் (ரளி) அவர்கள் மார்க்க சேவை செய்துகொண்டே தம்மிடமிருந்த கால்நடைப் பிராணிகளிலிருந்து பால் பீய்ச்சி, தமது பணியாளரின் மூலம் விற்பனை செய்வார்கள்.

அதன் மூலம் வரும் பணத்தை மிக்தாம் (ரளி) தமது செலவினங்களுக்குப் பயன்படுத்துவார்கள்.

இதைக் கண்ட சிலர் அவர்களிடம் தாங்கள் போய் பாலையெல்லாம் பீய்ச்சி கொண்டு... காசு சம்பாதிப்பது... நன்றாகவாயிருக்கிறது? என்று தங்களின் விருப்பமின்மையை வெளிப்படுத்தினர்.

அப்பொழுது மிக்தாம் (ரளி), "ஆமாம்... அவ்வாறு செய்வதற்கு மாநபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இருக்கிறது. 

அவர்களின் கூற்றை நான் செவி மடுத்துள்ளேன். மக்களிடம் ஒரு காலம் வரும். அதில் தீனார், திர்ஹத்தை (அரபு நாணயங்கள்) தவிர வேறொன்றும் பயன் தராது" என்று நபி (ஸல்) கூறினார்கள்.
(நூல் : அஹ்மது).

எனவே மார்க்க சேவையாளர்கள் வேறு வழிமுறைகளில் பணம் சம்பாதிப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்று விளக்கம் கூறினார்கள்.

ஜமாஅதுல் உலமா போன்ற ஆலிம்களின் அமைப்புகள் தோன்றிய காலம் தொட்டே நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் ஒன்றாக ஊதிய உயர்வு, இருமாத போனஸ். விடுமுறை நாட்கள் போன்றவை இருந்து வருகின்றன.

அதேபோல் பள்ளிவாசல், மதரஸா நிர்வாகிகளால் அதிகம் புறக்கணிக்கப்படும் தீர்மான மாகவும் இதுவே திகழ்கிறது.

அதனடிப்படையில் சமீபகாலமாக ஆலிம்கள், மதரஸாக்களின் வட்டாரங்களில் ஆலிம்களுக்கு தொழிற்கல்வி கற்பிக்கப்படுவது பற்றிய விழிப்புணர்வு வியக்கத்தக்க முறையில் ஏற்பட்டு வருகிறது.

சில மதரஸாக்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளுடன் இணைப்பை ஏற்படுத்தியும், கலைக் கல்லூரிகளுடன் தொடர்பேற்படுத்தியும் மாணவர்களின் சுய தொழில் வாய்ப்புகளுக்கு வழியேற்படுத்தியுள்ளன.

ஆனாலும் ஊதிய உயர்வு தொடர்பான அந்தக் கோரிக்கை இறவாவரம் பெற்று வந்துள்ளதோ என ஆச்சரியப்படும் விதத்தில் நிலை கொண்டுள்ளது.

ஒருபக்கம் ஆலிம் பட்டம் பெற்றும் வேலை வாய்ப்பில்லாதவர்களின் பெருக்கம், இத்தகைய கோரிக்கை எழுப்பப்படும்போது நிர்வாகப் பொறுப்பாளர் களுக்கு சாதகமாகி விடுகிறது.

அந்த ஹஜ்ரத்துக்கு 2000 சம்பளம் கொடுத்தீர்களா? எனக்கு 1500 ரூபாய் போதும் என்று வாய்ப்பைத்தேடி நிற்கும் ஒரு பெரும் கூட்டம்.

குப்பாக்களும் மினாராக்களும் வானளாவ லட்சங்களைத் தின்று நிமிர்ந்தாலும் சமுதாயப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரம் தரைத்தளத்தில் தான் நிறுத்தப்படும் எனும் நிலையிலும் பொருளாதார வளத்திற்கான மாற்று வாய்ப்புகள் கதவைத்தட்டும் நிலையிலும் இனியும் இத்தகைய கோரிக்கைகளுக்கு என்ன அவசியம்?!

#முஸ்தஃபா_காசிமி
("எண்ணத்தின் வண்ணங்கள்"தொகுப்பிலிருந்து)

1 கருத்துரைகள்:

This great scholar Mufti Saeed Ahmed Palampoori passed away yesterday... Inna lillahi Wa Inna Ilaihi Rajiooon... Allahummaghfirlahu warhamhu...

Post a Comment