Header Ads



ஜாமியா நளீமியாவை மேலும் சிறப்புடன் முன்னேற்றுவது, ஆளுநர் சபையின் முக்கிய பொறுப்பாகும்

இலங்கை திருநாட்டின் மூத்த புத்திஜீவிகளில் ஒருவரும் கல்விமானும் அறிஞருமான  கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவு சமூகத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் மறைவு குறித்து சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்,அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கலாநிதி சுக்ரி தனது 80ஆவது வயதில் காலமானார். இந்நாட்டில் அவரது கல்விக்கான சேவைகள் என்றும் மறக்க முடியாத பணிகளாகும். குறிப்பாக இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை நூலுருப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. 20க்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார்.

அத்துடன் மர்ஹூம் நளீம் ஹாஜியார் உருவாக்கிய ஜாமியா நளீமியாவில் பணியாற்றி, இந்நாட்டுக்கு சேவை செய்ய ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி, இந்த சமூகத்துக்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்க அவர் பங்களிப்பு செய்துள்ளார். கலாநிதி சுக்ரியின் இந்த பங்களிப்பானது சமூகம் என்றும்  அங்கிகரிக்கின்றதொன்றாகும்.

கலாநிதி சுக்ரி நான்கு மொழி திறமை மிக்கவராக திகழ்ந்தார். அரபு மொழியிலே கலாநிதி பட்டம் பெற்றதோடு, முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தை நடுநிலை போக்கில் அழைத்துச்செல்வதில் அன்னார்  ஆற்றிய பங்களிப்பு மகத்தானது, அதற்காக அவர் வழங்கிய வழிகாட்டல் மகத்தானது. 

அவரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் கலாநிதி சுக்ரியின் வழிகாட்டலில் அமைக்கப்பட்ட ஜாமியா நளீமியாவை மேலும் சிறப்புடன் முன்னேற்றுவது, ஜாமியா நளீமியாவின் ஆளுநர் சபையின் முக்கிய பொறுப்பாகும் என்பதை இந்த சந்தர்ப்பத்திலே நினைவூட்ட விரும்புகின்றேன். அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தவ்சை அல்லாஹ் வழங்குவானாக

No comments

Powered by Blogger.