Header Ads



இன்றைய அரசியலமைப்புப் பேரவை, கூட்டத்தில் நடந்தது என்ன..?

அரசியலமைப்புப் பேரவையின் 79வது கூட்டம் இன்று (11) பிற்பகல் அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மஹிந்த சமரசிங்க, கௌரவ பிமல் ரத்னாயக்க, தலதா அத்துகோரல ஆகியோரும் கலந்துகொண்டனர். இவர்களைவிடவும் சிவில் சமூக உறுப்பினர்களான யாவிட் யூசுப், நாகநாதன் செல்வகுமார், அரசியலமைப்புப் பேரவையின் செயலாளரும், பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான தம்மிக்க தசநாயக்க, பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்புப் பேரவைக் கூட்டத்தின் ஆரம்பத்தில் அதன் தலைவர் கரு ஜயசூரியவினால் சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. 

ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவினால் 2018ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் விசாரணை அதிகாரிகள் 200 பேர் தெரிவுசெய்யப்பட்டிருப்பதுடன், அந்த விசாரணை அதிகாரிகளுக்கு இதுவரை நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதால் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் முடங்குவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதால் இது தொடர்பில் திறைசேரி கவனம் செலுத்த வேண்டும் என அரசியலமப்புப் பேரவையினால், அதன் செயலாளர் தம்மிக்க தசநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் கௌரவ கரு ஜயசூரிய நடவடிக்கை எடுத்தார்.

ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து பொலிஸ் ஆணைக்குழு மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர்கள் கலந்துரையாடல்கள் மூலம் தீர்வினைக்காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அரசியலமைப்புப் பேரவையின் நிலைப்பாடாக அமைந்தது.

மனித உரிமைகள் ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு மற்றும் நிதி ஆணைக்குழு ஆகியவற்றின் முன்னேற்றம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. விசேடமாக நிதி ஆணைக்குழு தற்பொழுது மாகாண சபைக்கு அனுமதியளித்துள்ள ஒதுக்கீடுகள் குறித்த மாகாண சபைகளுக்கு கிடைக்காமையினால் மாகாணசபைகளின் நாளாந்த செயற்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகள் தொடர்பில் அரசியலமைப்புப் பேரவை கவனம் செலுத்தியிருந்தது.

தற்பொழுது நிலவும் கடினமான சூழ்நிலையில் தமது பொறுப்பினை நிறைவேற்ற தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களால் பாராட்டப்பட்டதுடன், அது தொடர்பில் நம்பிக்கையும் வெளியிடப்பட்டது.

அரசியலமைப்பு பேரவையின் ஏற்பாடுகளுக்கு அமைய ஆகக்குறைந்தது மாதத்திற்கு இரண்டு தடவைகள் அரசியலமைப்புப் பேரவையின் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், அவ்வாறு கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கும் சந்தர்ப்பங்களில் சில ஊடகங்களினால் முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசியலமைப்புப் பேரவையின் அதிருப்தியும் இங்கு வெளியிடப்பட்டது.

ஷான் விஜயதுங்க
பணிப்பாளர் (தொடர்பாடல்)
இலங்கை பாராளுமன்றம்

No comments

Powered by Blogger.