May 05, 2020

'கலா கத்ர்'ஐ நம்புவோம் - கொரோனாவும், மனஅழுத்தமும்

- Muneera Ghani -

 முழு உலகையும் சோகத்தில் ஆழ்த்தி, அனைத்துலக மக்களையும் ஆட்டங்காண வைத்திருப்பது கண்ணுக்குப் புலப்படாத கிருமியென்பது அனைவரையும்  ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள விடயமே. கொரோனா கொன்று குவித்த உயிர்களை எண்ணி முடிக்க முன்னமே, உலகின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் மரணச் செய்திகள் செவியில் வீழ்ந்த வண்ணமே உள்ளன. நாளுக்கு நாள் இந்த நுண்ணங்கியின் வீரியம் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைந்தபாடில்லை.

சீனாவின் வூஹானில் ஆரம்பித்து, இத்தாலி, பிரான்ஸ் எனத் தொடர்ந்த இந்தக் கொரோனாவின் மானுட வேட்டை, இற்றைக்கு கிட்டத்தட்ட உலகின் அனேகமான நாட்டு மக்களை சுவை பார்த்து விட்டது. 

உலகெங்கும் வியாபித்துள்ள இந்தக் கொரோனாவினால் மரணிக்கும் மனிதர்கள் ஒரு புறமிருக்க, அகோரமான இக்கிருமியின் கொடூரமான விளைவுகளைக் கண்டும் கேட்டும்  தினம் பயத்தினால் அவதியுறும் மக்கள் தொகை ஏராளம். ஆம் உலக சுகாதார ஸ்தாபனம் இது பற்றி பல தகவல்களை வெளியிட்டிருந்தது. அந்த வகையில் கொரோனா பரவலின் பின் இலங்கைத் தீவில் பத்து நபர்களுக்கு ஒருவர் எனும் விகிதத்தில் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு முன் ஒருபோதும் இல்லாதவாறு, உலகின் பெரும்பாலான நாடுகளை ஆட்டங்காண வைத்து, சகல  துறைகளையும் ஒரேயடியாக வீழ்ச்சியடையச் செய்து, முழு உலகுக்கும் முகத்திரையிட்டு, பூகோளத்தையே முடக்கிப் போட்ட கொரோனாவின் கொடிய விளைவுகளை எண்ணிப் பார்க்கும் போது உள்ளம் குமுறவே செய்கின்றது. உலகம் பூராகக் கேட்கும் அழுகையின் ஓலங்கள் உளத் தாக்கத்தை ஏற்படுத்துவது என்பது நம்ப முடியாத ஒன்றல்லவே.

தாயை, தந்தையை, பிள்ளைகளை.... உறவுகளை இழந்து விட்டோமே என ஒரு சாரார், உறவுகளை இழந்து விடுவோமோ எனும் அச்சத்துடன் ஒரு சாரார், இறுதித் தருணத்தில் கூட முகத்தைப் பாக்க முடியலையே, மரணித்த உடலை பொசுக்கிப் போட்டனரே, வெளியூரில் வசித்த என் உறவுக்கு என்னானது, கொரோனா எம்மையும் தொற்றிக் கொள்ளுமா?, நாமும் மரணித்து பொசுக்கப் பட்டு விடுவோமா?, முடக்கிப் போடப்பட்ட நிலையில் பிள்ளைகளின் பசி தீர்க்க வழியேது, தொழிலின்றி பணமின்றி செலவுகளுக்கு என்ன செய்வது, எதிர்காலம் என்னவாகப் போகிறது, திடீரென பூட்டுப் போடப்பட்ட  தொழில் நிலையங்கள், உற்பத்தி நிலையங்கள் எதிர்நோக்கியிருக்கின்ற பாரிய நஷ்ட நிலை, கல்வி நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், மாணவர்களின் படிப்பு...... என பல்வேறு மட்டத்தினரின் உளக்குமுறல் வெவ்வேறு பட்டதாக அமைந்திருக்கும். அனைத்தும் நியாயமான உண்மைகள் பொதிந்த சிந்தனைகள் தான். 

எனினும் இப்படி ஏராளமான விடயங்களை தமக்குள்ளே அழுது, புலம்பி, யோசித்து மனஅழுத்தத்தை நாமே தான் உருவாக்கிக் கொள்கிறோம். எதிர்காலம் பற்றிய அளவுக்கதிகமான சிந்தனையும், பயமும் பாரிய உளப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றது. எம்மில் அனேகருக்கு நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்காலத்தை விட, என்ன நடக்கப் போகிறதோ எனும் பீதியுடன் கூடிய சிந்தனையே அதிகமாக உள்ளது. பிரச்சினைகள், துன்பங்கள், சோதனைகள் பல விதம். அதை நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. பிரச்சினைகள், நஷ்டம், நோய், மரணம், அழிவு எவ்விதத்திலும், எந்நேரத்திலும் வரலாம்.  "இறைவன் அறியாமல் அணுவும் அசைவதில்லை" எனும் உண்மையை உணர்ந்து கொண்டால் அனைத்தும் சுலபமாகி விடும். 

அத்துடன் இஸ்லாத்தில் இறைவனை, இறைத்தூதரை நம்புவது எந்தளவு கட்டாயக் கடமையாகவுள்ளதோ அதே போன்ற ஓர் கடமைகளுள் ஒன்றுதான் 'கலா கத்ர்'ஐ நம்புவது.  அதாவது ஒரு உண்மை முஸ்லிம் நம்பிக்கை கொள்ள வேண்டிய ஆறு விடயங்களில் ஆறாவது அம்சமாக இருப்பது "நன்மை தீமை எதுவாயினும், அனைத்தும் இறைவனின் நாட்டப்படியே நடந்தேறுகிறது"(கலா கத்ர்) என்பதாகும். இதை உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டாலேயன்றி உண்மை முஸ்லிம் எனும் நிலையை அடைய முடியாது போகும். இவ்விடயம் தொடர்பில் தெளிவாக உள்ள ஒருவராலேயே சுனாமியோ கொரோனாவோ எதைச் சந்தித்த போதும், அதை தைரியமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்கும்.

இறைவன் நியமித்த நேரத்தில், நியமித்த வடிவில் அவனது நாட்டப்படி மரணம் எமை வந்தடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே வீண் கவலைகள், சிந்தனைகளைப் புறந்தள்ளுவோம். பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம். நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் செய்து வருவோம். அத்துடன், எமது உறவுகளின், நண்பர்களின் மனநிலை பற்றிய அவதானத்துடன் இருப்பதுடன் அவர்களுக்கு ஆறுதலாகவும் இருப்போம். 

வாழும் காலம் வரை சிறப்பாக வாழ்ந்து விடை பெறுவதற்கான வழிவகைகளை மேற்கொள்வோம். 

0 கருத்துரைகள்:

Post a comment