Header Ads



"அவளை வாழ வை"



கருவறையில் உருவாகி
காலம் செல்லக்கருவாகி−பவணியிலே 
கால் பதித்த பிஞ்சவளை
நெஞ்சில் வைத்து கொஞ்சுமுன்னமே
பிறந்தது பெட்டையோவென
பெண்ணவள் பிறப்புடனே
பின்தொடரும் பின்னணிக் குரல்கள்.

பத்து வயசு ஆனதுமே
பத்திரப்படுத்தலின் ஆரம்பமென
படிப்புக்கெல்லாம் போடுவரே−முள்வேலி
மூலைக்குள் முடக்கப்படுகிறாள் கன்னி
காலத்தின் கோலமெண்ணி
கனவுகளைக் கலைத்துக்கொண்டே
யதார்த்தத்தினுள் அடிவைக்கும் அவள் பாதங்கள்.

பருவவயசு ஆயிடுச்சா
படிச்சதெல்லாம் போதுமென்று......
பொத்திப்  பொத்தி வளர்த்தா தான்
பெண்ணுக்கு மதிப்பென்று
பொன்னான பெண்ணவளை
மண்ணாக்கும் மடத்தனமே−என
ஆங்காங்கு எதிரொலிக்கும் ஆக்ரோஷங்கள்.

அத்தனையும் மீறி அறுதியாய்
அனங்கின் அறிவும் அழகும் 
அடுக்கலைக்கே சொந்தமென
அப்பாவிப் பெண்ணவளைப் பெற்ற மகராசன்
ஆணொருவனிடம் ஒப்படைத்த பெறுமையில்
சமூகவிருதுகளைத் தமதாக்கிக்கொள்வதில்
அடடா−அலாதி ஆனந்தம்.

புகுந்தவீட்டில் புதியவள்
பிறந்தவீட்டு சுகபோகம் தேடிட
புரியாப்புதிராய் புன்னகை தொலைத்தே
தலைதூக்கும் சலனங்களை சமராக்கியே,
தலையடிக்கும் திறனற்றவளாய்
திகைத்தே போகும் தருணங்களில்
தன்னைத் தானே தேடிப்பார்ப்பாள் நங்கை.

ராசாத்திப்பொண்ணு மாசமாகிட்டா
மாசத்தோடு கோடி நிமிஷங்கள்−வருஷங்களாயிடுமே
சிங்காரக் கண்ணனாய்
சில்மிஷங்கள் செய்பவனை
வழிகாட்டி வாழவைக்கும்
மொழியறியாப் பேதையாய்−பெண்ணவள்
பிதன்று நிற்பாளே.

ஏதுமறியாப் பிள்ளையவன்
எதிர்காலம் ஏளனமாகிட
கரம்பிடித்து வழிகாட்ட வேண்டியவள்
கவனயீனமாய் கல்வியுடன்−சின்னவன்
கனவுகளையும் குழிதோண்டிப் புதைத்திட−அவன் 
கால்களோ காற்றிலகப்பட்ட சருகாகுமே

மூத்த பரம்பரை போட்ட முடிச்சு 
முற்றுப்புள்ளியல்லவே
முதுமை மண்ணறைக்குக் கொண்டுசென்ற பின்னும்
தொடரும் பரம்பரையின் பாதகங்களுக்கு
பதில் சொல்லியாக வேண்டுமே...
அச்சமூட்டும் எச்சரிக்கையிது
புரிந்துகொள்ளுமளவு புத்தியிருப்பின்
மாற்றத்தின் பாதையில் இன்றே பயணிப்போம்.

விதியை வெல்லவும் சதியை சவாலென கொள்ளவும்
மதியின்றி மண்ணிலேது மதிப்பு
அறிவுப்பெட்டகங்களை அவனிக்கு அளித்திடுவோம்
தாய்க்குலத்தை தரணியிலே உயர்த்திடுவோம்
மட்டற்ற மகிமையினால்
மண்ணறை கூட மங்கல அறையாய் 
யாம் பெறுவோம்.

Muneera Ghani

No comments

Powered by Blogger.