Header Ads



`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்!’ - கொதித்த ட்ரம்ப்

கொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு மட்டும் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு 96 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். அங்கு வைரஸ் பரவல் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாட்டின் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல லட்சம் அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கொரோனா ஏற்படுத்தியுள்ள மொத்த பாதிப்புக்கும் சீனாதான் காரணம் என ஆரம்பம் முதல் அந்நாட்டைக் கடுமையாக விமர்சித்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவரின் விமர்சனங்களுக்கு சீன அதிகாரிகள் வரிசையாகப் பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். அதிலும் கடந்த ஒரு வாரமாக ட்ரம்ப் சீனாவைச் சீண்டுவது மிக அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் வைரஸ் பாதிப்பைவிட சீனாவுடன் நடக்கும் வார்த்தைப் போர்தான் பெரிதாக உள்ளது.

இந்நிலையில் நேற்று மெக்ஸிகனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ட்ரம்ப், செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘கோவிட் -19 வைரஸ் சீனாவிலிருந்துதான் வந்தது. அதனால்தான் நாங்கள் மகிழ்ச்சியை இழந்தோம். சீனாவுடன் நாங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டோம். அந்த மையின் ஈரம்கூட இன்னும் காயவில்லை. அதற்குள் திடீரென இப்படி ஒன்றைச் செய்துவிட்டனர். நாங்கள் இதை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. சீனாவுக்குத் தக்க பதிலடி இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அதே மெக்ஸிகனில் ஒரு தொழிற்சாலையைப் பார்வையிட்டபோது மீண்டும் பேசிய அதிபர், “ஒருவேளை அமெரிக்காவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உருவானால் அப்போது நிச்சயம் ஊரடங்கு என்பது இருக்காது. ஓர் ஆரோக்கியமான நாடு மற்றும் மாகாணத்துக்கு ஊரடங்கு என்பது சிறந்த யுக்தி இல்லை. அமெரிக்காவுக்கு மீண்டும் ஒரு கடுமையான சூழல் வந்தால் நாம் அனைவரும் இணைந்து எரிகின்ற தீயை அணைப்போம். ஆனால் நிச்சயமாக நாட்டை மூடப்போவதில்லை” என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.