May 17, 2020

பெரும்பாலான முஸ்லிம்கள் கொரோனா, கட்டுப்பாட்டுக்கு பங்களிப்புச் செய்து வருகிறார்கள்...!

( ஐ. ஏ. காதிர் கான் )

   கொரோனா தொற்றின் சட்டதிட்டங்களுக்கு மாற்றமாக  ஒரு சிலரே அறியாத்தனமாக தவறு செய்கிறார்கள். ஆனால், பெரும்பாலான முஸ்லிம்கள் அதற்குப் பங்களிப்புச் செய்து வருவது மகிழ்ச்சிக்குரியது என, வை.எம்.எம்.ஏ. யின் பதில் தேசியத் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் பெருமிதத்துடன்  தெரிவித்துள்ளார்.

   அந்த விசேட  அறிக்கையில் அவர் மேலும் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

    உலக சுகாதாரத் துறையினரின்  அறிக்கையின் பிரகாரம், ஊரடங்கினை தற்கால சூழ்நிலையில் தளர்த்தப்பட்டாலும் கூட, கொரோனா பரவலின் ஆபத்து இன்னும் முற்று முழுதாக நீங்கிவிடவில்லை என்றும், இத்தொற்று இன்னும் ஓரிரு வருடங்களுக்காவது தாக்குப் பிடிக்கும் என்றும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகமானோரிடம் வசதி வாய்ப்புக்கள்  இருக்கலாம். பண வசதிகளும் அதிகமாகவே இருப்போரும் உண்டு. இவ்வாறானவர்கள் இக்கட்டான இச்சூழலில் தமது செல்வங்களை வீணாகச் செலவழிக்காமல், மிகப் பொறுப்பாக அவற்றைக் கையாள்வதே சிறப்புக்குரியதாகும். பணங்களை வீணாகத் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. வரக்கூடிய எதிர்காலம் மிகப் பயங்கரமானது. இருப்போர் தமது பணங்களை வீணாகச் செலவழிக்காமல், பாதுகாப்பாக வைப்பார்களேயானால், அது எதிர்காலத்தில் அவர்களுக்கும் இல்லாதோருக்கும் பிரயோசனம் அளிக்கும் என்பதையும் ஞாபகமூட்டிக் கொள்ள விரும்புகின்றேன்.

   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்காக புதிய ஆடை கொள்வனவிற்காக சிலர் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். எமது இத்தகைய செயற்பாட்டினால் பல பின் விளைவுகளை எதிர் நோக்க வேண்டிவரலாம்.

 எமது ஊர்களில் உள்ள ஆடையகங்களில் ஆடைக் கொள்வனவு செய்கின்ற போது சன நெரிசலை எதிர் நோக்க நேரிடும். இதனால், சில வேளைகளில் நோய்த் தொற்று ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது. அத்துடன்,  ஆடையகங்களில் உள்ள ஊழியர்களுக்கும் நோய்த் தொற்று என்ற வதந்தி கூட  பரப்பப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறான சூழ்நிலையில்,  "முஸ்லிம்கள்தான் கொரோனாவினைப் பரப்பியவர்கள்" என்ற  குற்றச்சாட்டு எழலாம். 

   எனவே, நோன்பு காலங்களில் ஆரம்பம் முதல் இன்று வரை வீடுகளிலேயே வணக்க வழிபாடுகளைப் பேணிவந்த நாம், தாமாகவே வீண் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல், இம்முறை மாத்திரம் நிலமைக்கு ஏற்றாற் போல் எம்மிடம் இருக்கும் நல்ல ஆடைகளைக் கொண்டு பெருநாளைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.

    சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நமக்கு,  கொரோனா நோயின் விபரங்களை ஆரம்ப நிலையில் இருந்தே அளித்து வருகின்றது. நாமும் நமது அன்புக்குரியோரும் இத் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத பல்வேறு காரண காரியங்களை ஆரம்பத்திலிருந்தே அறிவுறுத்தி வருகின்றார்கள்.

இந்நிலையில், அனைவரும் பழக்கப்படுத்திக்கொண்ட வாழ்க்கை முறைகளுக்கு அப்பாலும் இவ்வாறான  ஆலோசனைகளப் பின்பற்றி வருகின்றமை மகிழ்ச்சிக்குரியது. 

   நம்மில் பெரும்பாலான முஸ்லிம்கள் அரச மற்றும் சுகாதாரத் துறையினரின் வழிகாட்டல்களைப் பின்பற்றி வருவது சந்தோஷத்தை ஊட்டுகிறது. பெண்களிலும் அதிகமானோர் நல்ல முறையில் நடந்து கொள்கின்றார்கள். உண்மையில் இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஆனால், விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் செய்யும் தவறுகள் கவலையைத் தருகிறது. இருப்பினும்,  இவர்களும் ஏனையவர்களை முன்மாதிரியாகக் கொண்டு உடனடியாகவே திருந்திச் செயற்பட  வேண்டும் என்பதே, நான் அவர்களுக்கு வழங்கும் நற் செய்தியாகும்.

நாம் எந்தச் சவால்களிலிருந்தும் வெளிவருவதற்கு, அந்தச் சவால்களுக்கேற்பத் தயாராவது முக்கியமானது என்பதை உறுதியாக நம்பவேண்டும்.

இருள்சூழ் கருமேகங்களிடையேயும் ஒளிக்கீற்று தென்படுவதுபோல், எந்தச் சவால்களையும் வலிமையுடன் எதிர்கொள்ள எம்மால்  சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என திடமாக நம்பவேண்டும்.

   கொரோனா தொற்றின் இடையேயும் நாம் மீள் எழுவதற்கு, எமது வாழ்க்கை முறைகளை  மாற்றம் செய்வது எவ்வாறு, அதற்கு உள்ளடக்க வேண்டிய புதிய விடயங்கள் என்ன என்பது பற்றியும், நாம் எமக்குள்ளேயே தெளிவுபடுத்திக் கொள்வது, இத்தருணத்தில் முக்கியமானதாகும்.
நாளையை வெல்ல - இன்றே தயார் ஆவோம்.

1 கருத்துரைகள்:

இந்தக் கருத்துக்களை தொடரந்து சொல்லி எங்களை மல்லினப்படுத்த வேண்டாம். ஆரம்பத்தில் கொரோனாவின் பாரதூரம் விளங்காமல் சில மக்கள் அலட்சியமாக நடந்து கொண்டது உண்மை ஆனால் தற்போது எமது மக்கள் இதன் பாரதூரத்தை விளங்கி தற்போது பொறுப்புடன் செயல்படுகிறார்கள் எனவே இதை விடுத்து எமக்கு எதிராக நடக்கின்றவைகள் பற்றி கவனம் செலுத்தி புண்பட்ட எமது உள்ளங்களை ஆறுதல் படுத்த முயற்சியுங்கள்.

Post a Comment