May 15, 2020

அடுத்த 6 மாத காலம் மிகக்கடினமானதாகும் - நெருக்கடியான நாட்களை கடக்க தயாராக வேண்டும்

(ஆர்.யசி)

கொவிட் -19 இன் தாக்கம் அடுத்த ஆறுமாத காலத்தில் மிக மோசமானதாக தாக்கும். மிக நெருக்கடியான நாட்களை கடக்க தயாராக வேண்டும் என பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகரும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மக்களை சென்றடைய முன்னர் மாற்று நடவடிக்கைகளை கையாள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக வீழ்ச்சி கண்டுள்ள நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பொருளாதாரம் குறித்த நிலையான கொள்கை ஒன்றினை உருவாக்க முடியாத காலகட்டத்தில் நாம் உள்ளோம். கொவிட்-19 வைரஸ் தாக்கம் இன்னமும் குறையவில்லை.

உலகத்தில் இதன் தாக்கம் இன்னமும் நீங்கவில்லை. எனினும் நாம் எந்த திசையில் பயணிக்கப் போகின்றோம் என்பதை இப்போதே  தெரிவு செய்துகொள்ள வேண்டும். சுற்றுலாத்துறை வீழ்ச்சி, வங்கி பரிவர்த்தனை வீழ்ச்சி, வியாபாரம் வீழ்ச்சி என அனைத்தையும் நாம் அவதானிக்கின்றோம்.

அதுமட்டும் அல்லாது உலகம் இப்போது மாற்றுத் திசையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. அந்த மாற்றத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இந்த சவால்களில் யார் வேகமாக மீள நடவடிக்கை எடுக்கின்றார்களோ அவர்களே வெற்றிபெற முடியும்.

அடுத்த ஆறுமாத காலத்தில் இலங்கை மிகப்பெரிய சவாலை சந்திக்க நேரும். இப்போது தான் விபத்து இடம்பெற்றுள்ளது. அடுத்ததாக அதன் தாக்கத்தை நாம் அனுபவிக்க நேரிடும். ஆகவே இந்த நெருக்கடியில் எந்த விதமான மாற்று நடவடிக்கைகளை எம்மால் கையாள முடியும் என்பதை ஆராய வேண்டும்.

இதில் முற்றுமுழுதாக பாதகம் மட்டுமே இடம்பெறும் என நினைக்கக் கூடாது. புதிய வியாபார  சந்தையொன்று உருவாக்கும். ஆகவே அதனை உடனடியாக அறிந்துகொண்டு நாம் அந்த இடத்தை தக்கவைக்க வேண்டும். முதல் ஆறுமாத காலம் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும். அதன் பின்னரும் சவால்கள் பல உள்ளதென்பது மறந்துவிடக்கூடாது.

அத்துடன் எம்மை போன்ற நாடுகளுக்கு கடன் சலுகைகள் பல கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை சகல தரப்பினாலும் கூறப்பட்டு வருகின்றது. வளர்சிகானும் நாடுகளுக்கு இந்த சலுகைகள் வழங்கினால் மட்டுமே உலக பொருளாதாரம் பாதுகாக்கப்படும். ஆகவே இந்த விடயத்தில் உலகளாவிய ரீதியில் தீர்வொன்றை காணவேண்டும். நாம் கடன்களை செலுத்த வேண்டிய  கட்டாயத்திலும்  உள்ளோம்.

அதற்கு என்ன வழிமுறை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது,  இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் வரிகள் பெறமுடியாது உள்ளது. எனவே அரசாங்கம் அழுத்தங்களை சந்திக்க நேரிடும்.

ஆகவே தேவையான இறக்குமதிகளை மீண்டும் கையாள வேண்டும். எமது நாட்டுக்கு வரும் வருமானத்தை அதன் மூலமாக பெருக்கிக்கொள்ள முடியும். எமது  கையிருப்பை தக்க வைக்கவும் வேண்டும். இவை அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட விடயங்களாகும். ஆகவே இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மக்களை சென்றடைய முன்னர் மாற்று நடவடிக்கைகளை கையாள வேண்டும். இப்போது தவறிழைத்தால் பாரிய அழிவை சந்திக்க நேரிடும். 

1 கருத்துரைகள்:

பொதுச் சொத்துக்களைச் சூறையாடும் நடவடிக்கைகளில் பெயர் போன இந்த நபர் தற்போது நாட்டின் சுகாதாரம் பற்றியும் எதிர்வு கூறும் அளவுக்கு இந்த நாடு எங்கே செல்கிறது. மத்திய வங்கியைக் கட்டியாண்ட காலத்தில் செய்த பொதுச் சொத்து களவாடல்பற்றி அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருக்கும் தைரியத்தில் இப்போது நாட்டின் சுகாதாரம் பற்றி வைத்தியர்களையும் மிஞ்சி உளருகின்றார். அந்த உளரல்கள் பற்றி துறைசார் நிபுணர்கள் கண்டு கொள்ளாவிட்டாலும் பாமர மக்களின் மூளையைக் குழப்புகின்றான். இந்த நீண்டகால அமைப்பில் பெரிய பாதிப்பு. அது பற்றி அரசாங்கம் கவனம் எடுக்குமா?

Post a Comment