Header Ads



3 முஸ்லிம்களது உடல்களை, நல்லடக்கம் செய்ய முடியாத நிலை

- நவமணி பத்திரிகை -

கொழும்பிலும் வெலிகமவிலும் நேற்றும் நேற்று முன்தினமும் இறந்த 03 முஸ்லிம்களது சடலங்கள் 
நல்லடக்கம் செய்ய முடியாத நிலையை எதிர்நோக்கி இருப்பதாக குடும்பத்தவர்கள் தெரிவித்தனர்.

கொழும்பில் இறந்த இருவரது சடலங்கள் குறித்து மீண்டும் பிரேத பரிசோதனை நடாத்துமாறு கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி அஷ்ரப் ரூமி உத்தரவிட்டார்.

கொழும்பில் மரணமான ரபாய்தீன் (65), மற்றும் பிர்தௌஸ் (35) ஆகியோரது சடலங்கள் குறித்தே மீள் பிரேத பரிசோதனை செய்யுமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பிட்ட இருவரது மரணம் கொரோனா தொற்றினால் ஏற்படவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளதையடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரி மீண்டும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணிப்புரை விடுத்தார்.

ரபாய்தீன் மரண விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட போதும்,  சடலம் குடும்பத்தாரிடம் கையளிக்கப்படவோ நல்லடக்கம் செய்யப்படவோ இல்லை எனத் தெரியவருகிறது.

கொழும்பு சென்றல் வீதியில் மரணமான பிர்தௌஸின் சடலம் தொடர்பாக மீண்டும் பிரேத பரிசோதனை நடாத்துமாறு அவரது சகோதரர் வேண்டுகோள் விடுத்துள்ளதையடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரி அதற்கான உத்தரவை இட்டார்.

இதன்படி இவரது சடலம் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பான அடுத்த விசாரணை அடுத்த 11 ஆம் திகதியே இடம்பெறவுள்ளது.

இதேநேரம் வெலிகம புதிய தெரு பகுதியில் வியாழன் காலை ஒரு முஸ்லிம் பெண்ணின் ஜனாஸ h அடக்கம் செய்வதை தற்காலிகமாக நிறுத்த வெலிகம பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வெலிகம புதியதெரு 54 வயது பெண் நீண்ட காலமாக நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக தனியார் வைத்திய சாலைக்கு சென்ற வேளையில் மருத்துவ ஆலோசனையின் பேரில் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டது.

இருப்பினும், வீடு திரும்பும் வழியில் இந்த உயரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணை அடக்கம் செய்ய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் தயாராகி வந்த நிலையில் வெலிகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்யாமல் உடனடியாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, வெலிகம பொது சுகாதார அலுவலகம் மற்றும் வெலிகம பொலிஸாரின்; உதவியுடன், உயிரிழந்த பெண்ணின் உடலை மீண்டும் மாத்தறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பிரேத பரிசோதனை அறிக்கையைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.